பூமியைப் போலவே பல கோள்கள்

எழுதியது: சிறி சரவணா

நமது சூரியத்தொகுதியையும் தாண்டி வேறு விண்மீன்களிலும் கோள்கள் இருக்கலாம் என்று காலம் காலமாக வானியலாளர்கள் கருதினாலும், முதலாவது வெளிக்கோள் (exoplanet) 1990 களில் கண்டுபிடிக்கப்பட்டது, அன்றிலிருந்து இன்றுவரை ஆயிரக்கணக்கான வெளிக்கோள்களை வானியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இவற்றில் பெரும்பாலானவை நமது வியாழனைப் போல மிகப்பெரிய கோள்கள். அனால் கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்ட தொழில்நுட்ப முன்னேற்றம், பிற விண்மீன்களை சுற்றிவரும் பூமியைப்போல சிறிய கோள்களையும் கண்டறிய வழிவகுத்தன. இன்று நமக்கு பூமியின் அளவில் உள்ள கோள்கள், மற்றும் பூமியை விட சில மடங்குகள் மட்டுமே பெரிய கோள்கள் நூற்றுக்கணக்கில் தெரியும்!

ஆனாலும் இங்கு மிக முக்கியமான கேள்வியாக எழுவது, “பூமியைப்போல அளவில் உள்ள கோள்கள், பூமியைப் போலவே அமைப்பிலும் ஒத்து இருக்குமா? அங்கு உயிரினம் இருக்குமா?” என்பதே. இதற்கு பல்வேறு பட்ட பதில்களை பல காலங்களாக பல்வேறுபட்ட தரப்பாக பிரிந்து வானவியலாளர்கள் சொன்னாலும், கடந்த வாரத்தில், அமெரிக்க வானவியல் கழகத்தின் கூட்டத்தில், சமர்பிக்கப்பட்ட ஆராய்ச்சி முடிவு பின்வருமாறு சொல்கிறது.

“ஆம், நாம் முன்னர் நினைத்ததை விட, பூமியை ஒத்த அளவுள்ள கோள்கள், பூமியைப்போன்ற அமைப்பை கொண்டு காணப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம்!!”

சரி, அந்த ஆய்வு என்ன சொல்கிறது என்று பார்க்கலாம்.

HARPS-N (High-Accuracy Radial Velocity Planet Searcher) என்ற 3.6 மீட்டார் தொலைக்காட்டியை பயன்படுத்தி, வானியலாளர்கள் Kepler-93b என்ற வெளிக்கோளை ஆய்வு செய்துள்ளனர். இந்த Kepler-93b பூமியப்போல 1.48 மடங்கு பெரியது. அதேபோல, அதன் திணிவும் பூமியைப்போல 4.02 மடங்கு. இது பூமியில் இருந்து 300 ஒளியாண்டுகள்தூரத்தில் இருக்கும் ஒரு விண்மீனை சுற்றிவருகிறது.

சரி விடயத்துக்கு வருவோம், இந்த Kepler-93b போலவே, கிட்டத்தட்ட பூமியின் அளவைப்போல 2.7 மடங்கை விட சிறிய வெளிக்கோள்களை அவதானிக்கும் போது, ஒரு விடயம் தெரிகிறது. அதாவது, பூமியின் அளவை ஒத்த கோள்களின்  திணிவிற்கும், அளவிற்கும் ஒரு தொடர்பு இருப்பது தெளிவாகிறது. அதுவும், பூமியின் அளவிவிட 1.6 மடங்கு வரையினுள் இருக்கும் வெளிக்கோள்களின் அமைப்பு பூமி அல்லது வெள்ளியைப்போல பாறைகளாலும், உலோகத்தாலான மையப்பகுதியையும் கொண்டிருப்பது புலனாகிறது.

ஆனால் பூமியை விட பலமடங்கு பெரிய வெளிக்கோள்கள், பெரும்பாலும், ஐதரசன், ஹீலியம் மற்றும் நீரால் ஆக்கப்பட்டுள்ளது. இதிலும் கவனிக்கப்பட வேண்டிய விடயம், இவை நமது சூரியத்தொகுதிகளில் உள்ள பெரிய கோள்களான வியாழன், சனி போன்றவற்றை பொல்லாது, வித்தியாசமாக உள்ளன. அவற்றை நாம் இன்னொரு புதிய பிரிவில் தான் அடக்க வேண்டும்.

ஒரு கோளின் கட்டமைப்பு மட்டும், அதை பூமியைப் போன்ற ஒரு சூழல் உள்ள கோளாக ஆக்கிவிடுமா என்றால், அப்படி இல்லை, பூமியைப்போல கட்டமைப்பு இருந்தாலும், பூமியை ஒத்த சூழல் உருவாகுவதற்கு, பல்வேறு காரணிகள் செல்வாக்குச் செலுத்துகின்றன.

அதில் மிக முக்கியமான காரணி, குறிப்பிட்ட கோள், அதன் தாய் விண்மீனில் இருந்து எவ்வளவு தூரத்தில் அதனை சுற்றிவருகிறது என்பது. மேலே குறிப்பிட்ட Kepler-93b கோளானது, தனது விண்மீனை, வெறும் 4.7 நாட்களிலேயே சுற்றிவருமளவிற்கு தனது விண்மீனை அவ்வளவு அருகில் சுற்றுகிறது.

ஒரு கோள் தனது விண்மீனில் இருந்து குறிப்பிட்ட தூரத்தில் சுற்றினால் தான், அதன் மேற்பரப்பில் நீரானது, திரவ நிலையில் இருக்க முடியும். ஓர் கோள், விண்மீனை மிக அருகில் சுற்றுமாயின், அதிகூடிய வெப்பத்தால் நீர் ஆவியாகிவிடும், அதேபோல விண்மீனை விட்டு மிக தொலைவில் சுற்றுமாயின், நீர் பனிக்கட்டியாக உறைந்துவிடும். ஆக, ஒரு கோள் சரியான தூரத்தில் தன் விண்மீனை சுற்றுவது, நீரை திரவநிலையில் பேன மிக அவசியம். திரவ நிலையில் நீர், உயிரினம் தோன்ற அவசியம்.

தூரம் மட்டுமல்லாது இன்னும் பிற காரணிகளும் கோளின் சூழல் பூமியைப்போல உயிர்வாழ தேவையானதாக இருக்க அவசியம். எப்படி இருப்பினும், பூமியை ஒத்த உட்கட்டமைப்பை கொண்டிருப்பது, ஒரு சாதகமான காரணியே.

இறுதியாக, Kepler-93b மற்றும் அதனைப் போன்ற, விண்மீனை மிக அருகில் சுற்றும் கோள்கள், நமது பூமியைப் போன்ற கோள்களாக இருக்கவேண்டிய அவசியமில்லை, ஆனால், இவற்றில் இருந்து நாம் கற்றுக்கொண்டது, பூமியைப்போன்ற அமைப்பையும், சூழலையும் கொண்ட கோள்கள், நிச்சயம் இந்த பால்வீதியில் இருப்தற்கான சாத்தியக்கூற்றை அதிகரித்துள்ளது என்பதே.

Kepler என்ற தொலைநோக்கியை பயன்படுத்தி நாம் ஆராய்ந்த வான்பகுதி, மிக மிக சிறியதே, அதுமட்டுமல்லாது, Kepler தொலைநோக்கியால் ஒரு கோளைக் கண்டுபிடிக்க வேண்டுமெனில், அது பூமிக்கும், அந்தக்கோளின் வின்மீனிற்கும் இடையில் வந்தால் மட்டுமே முடியும். ஆக Kepler ஆல் பார்க்க முடிந்தது ஒரு சிறு துளி மட்டுமே. ஆனால் அந்தச் சிறு துளி தகவலை வைத்துக்கொண்டு நாம், இந்த வெளிக்கோள்களைப்பற்றி நிறைய விடயங்களை அறிந்துகொண்டோம். அது நிச்சயமாக எம்மைப்போன்ற ஒரு உயிரினம் வாழத்தகுதியான கோள்கள் இந்த பால்வீதியில் உண்டு என்பதற்கான ஆதாரத்தை சொல்லாமல் சொல்லி, அதை நாம் கண்டுபிடிப்பதற்கான காலத்தை எதிர்நோக்கி காத்திருகின்றன.


Earth-sized planets discovered by Kepler may really be Earth-like என்ற கட்டுரையை தழுவி எழுதப்பட்டது.

3 thoughts on “பூமியைப் போலவே பல கோள்கள்

    1. தேங்க்ஸ் அக்கா 🙂 எனக்கும் இது வெகு விரைவில் நடந்துவிடும் என்று தோனுகிறது, ஆனால் அதை சென்று பார்பதற்கான தொழில்நுட்பம்தான் இன்னும் தயாரில்லை. அதைப்பற்றியும் ஒரு பதிவிடுகிறேன். 🙂

      Liked by 1 person

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s