வேற்றுக்கிரக நாகரீகங்கள் – பகுதி 2

எழுதியது: சிறி சரவணா

முதலாம் வகையை சேர்ந்த நாகரீகமானது ஒரு கோள் சார்ந்த நாகரீகமாகும். தான் இருக்கும் கோள்களில் இருந்து தனக்கு தேவையான சக்தியைப் பெற்றுக்கொள்ளும். நமது சக்தி உற்பத்தியைப் போல பல மில்லியன் மடங்கு அதிகமாக அவை உற்பத்தி செய்யக்கூடியது.

முதலாம் வகை  நாகரீகத்தால் தனது கோளில் இருக்கும் காலநிலையை கூட மாற்றமுடியும், அவை அந்தளவு அதிகமான சக்தியை பயன்படுத்தக் கூடியளவு வளர்ந்தவை. நினைத்துப் பாருங்கள், ஒரு சூறாவளி உருவாகிறது. உடனே ‘டுஸ்’ என ஒரு ஸ்விட்ச்சை போட்டு, அந்த சூரவளியயே இல்லாமல் ஆகிவிடலாம்! அதேபோல, நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு என்பவற்றைக் கூட கட்டுப் படுத்தக்கூடிய அளவு சக்தியை கொண்டிருக்கும். இவ்வளவு ஏன்? நிலப்பரப்புகளைக் கடந்து கடல்களிலும், சமுத்திரங்களிலும் நகரங்களை நிர்மாணிக்கக்கூடிய வல்லமை கொண்டிருக்கும்.

முதலாம் வகையை சார்ந்த நாகரீகமே இவாளவு ஆற்றலை கொண்டிருந்தால், நாம் எங்கே இருக்கிறோம்? கவலை வேண்டாம், நாம் இன்னும் பூஜ்ஜிய வகை (type 0) நாகரீகம் தான். இன்னும் முதலாவதைக் கூட எட்டவில்லை. ஏனென்று பார்ப்போம்.

நாம் இன்னும் பெட்ரோல் டீசல் போன்ற கனிம எண்ணை வளத்தைய பிரதான சக்தி முதலாக கொண்டுள்ளோம். இந்த சக்தி போதாது. நாம் இன்று ஏற்கனவே இந்த சக்தி ஆற்றல் குறைபாட்டை உணரத் தொடங்கிவிட்டோம். அதுமட்டுமல்லாது இந்த கனிம எண்ணை வளம் புதுப்பிக்கப் படக்கூடியதும் இல்லை. மற்றும் சூழலுக்கு மிகவும் ஆபத்தானதும் கூட. இப்படி இருப்பினும் இன்று வேறுபட்ட சக்திமுதல்கள் உருவாகத் தொடங்கிவிட்டன. ஆற்றல் மிக்க சூரிய படலங்கள், ஐதரசன் கலங்கள் போன்றவை மூலம் பெறப்படும் சக்தியின் அளவு அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

அதுமட்டுமல்லாது, முதலாம் வகை நாகரீகத்திற்கு இருக்கக்கூடிய சில பண்புகளை, இன்று நாம், நமது சமூகத்திலும் பார்க்கிறோம். உதாரணமாக, கோள் முழுவதற்குமான மொழி – ஆங்கிலம் அப்படி உருவாகிவிட்டது. அதேபோல் உலகம் பூராக தொடர்புகொள்ள இணையம் இருக்கிறது. நாடுகள் என்ற எல்லையைக் கடந்து உருவாகியுள்ள கூட்டமைப்புகள் – ஐரோப்பிய யூனியன் ஒரு எடுத்துக்காட்டு. இது மட்டுமல்லாது, கோள் முழுவதற்குமான கலாச்சார முறை – டிவி, திரைப்படங்கள் மூலம் புதிய, புதிய கலாச்சார அம்சங்கள், நாடுகளைக் கடந்து மக்களைச் சென்றடைகிறது. இதெல்லாம், நாம் முதலாம் வகை நாகரீகத்தை நோக்கி முன்னேறிக்கொண்டு இருக்கிறோம் என்பதற்கு ஆதாரமே.

இங்கு மிக முக்கியமாக நாம் கவனிக்க வேண்டிய ஒன்று, இப்படி வளர்ந்துவரும் நாகரீகம், உலகப் பேரழிவுகளை ஏற்படுத்தும் நிகழ்வுகளுக்கான கால எல்லையை விட வேகமாக வளரவேண்டும்.

சில ஆயிரம் வருடங்களுக்கு ஒரு முறை, வான்கற்கள், வால்வெள்ளிகள் என்பன கோள்களை தாக்கலாம், ஆக அதற்கு முன்னர் குறிப்பிட்ட நாகரீகம், விண்வெளிப் பயணத்தை கண்டுபிடித்திருக்க வேண்டும் அப்போதுதான், முதலாம் வகை நாகரீகத்தால் வெற்றிகரமாக குறிப்பிட்ட வின்கல்லையோ அல்லது வால்வெள்ளியையோ தடுக்கவோ அல்லது திசை திருப்பிவிடவோ முடியும்.

அதேபோல பனியுகம் (ice age), மிக மிக ஆபத்தான ஒன்று. பனியுகம் பல ஆயிரம் வருடங்களுக்கு ஒருமுறை வரலாம், இப்படி வருவதற்கு முன்னரே முதலாம் வகை நாகரீகம், காலநிலையை மாற்றக்கூடிய வித்தையை கண்டறிந்து அதற்கு ஏற்றாப்போல மாற்றங்களை ஏற்படுத்தி, பனியுகத்தில் இருந்து தப்பிக்கலாம்.

இப்படியான இயற்கை அழிவுகள் மட்டுமன்றி, குறிப்பிட்ட நாகரீகம் தனக்கு தானே உருவாக்கிக் கொண்ட ஆபத்துக்களையும் தடுக்க வேண்டும். உதாரணமாக, சனத்தொகை என்பது பூஜ்ஜிய வகை நாகரீகதிற்கே ஒரு சவாலாக அமையும், முதலாம் வகை நாகரீகமானது, தனது சனத்தொகையை எப்படி கட்டுக்குள் வைத்திருக்கவேண்டும் என்பதை மிகத் தெளிவாக அறிந்திருக்கும், அதேபோல குறிப்பிட்ட கோளில் இருக்கும் இயற்கை வளங்களை எப்படி சமமாக பகிர்ந்து கொள்ளவேண்டும் எனவும் அறிந்திருக்கும்.

இன்னொரு பிரச்சினை – யுத்தம். இது மிகப்பெரிய சவாலாக அமையும். ஒரு நாகரீகம் பூஜ்ஜியத்தில் இருந்து முதலாம் வகைக்கு செல்லும் போது, மிகப் பெரிய சவாலாக அமையப் போவது இந்த யுத்தம் தான். ஆனாலும் முதலாம் வகையை சேர்ந்த நாகரீகமானது, வெற்றிகரமாக, மொழி, மத, நிற, கலாச்சார மற்றும் பொருளாதார வேறுபாடுகளால் உருவாகும் யுத்தங்கள் வெற்றிகரமாக சமாளித்து வரவேண்டும்.

இப்படியான வேறுபாடுகளை நீக்கிய பின்னர், பல ஆயிரம் வருடங்கள் இந்த முதாலம் வகை நாகரீகம் தொடர்ந்து வளர்ந்துகொண்டே வரும். ஒரு கட்டத்தில், அவர்களால், குறித்த கோளில் இருந்து பெறும் சக்திகள் அனைத்தும் தீர்ந்துவிடும். அப்போது அவர்கள், தங்களது தாய் நட்சத்திரத்தின் மொத்த சக்த்தியும் தங்களுக்கு என பயன்படுத்த தொடங்குவர். இப்போது அவர்களது சக்தி தேவை ஒரு செக்கனுக்கு 1026 ஜூல்ஸ்களாக இருக்கும். இவர்களே இரண்டாம் வகையைச் சேர்ந்த நாகரீகங்கள்.

டைசனின் கோளம் - நட்சத்திரத்தை சுற்றி அமைக்கப்படக்கூடிய அமைப்பு. குறித்த நட்சத்திரத்தில் இருந்து சக்தியை முழுவதும் அறுவடை செய்ய பயன்படும்!
டைசனின் கோளம் – நட்சத்திரத்தை சுற்றி அமைக்கப்படக்கூடிய அமைப்பு. குறித்த நட்சத்திரத்தில் இருந்து சக்தியை முழுவதும் அறுவடை செய்ய பயன்படும்!

இப்படி ஒரு சிறிய நட்சத்திரம் வெளியிடக்கூடிய சக்திக்கு ஒப்பான அளவு சக்தியை பிறப்பிக்கும் இந்த வகை நாகரீகங்களை நாம் வானில் அவதானிக்க கூடியதாக இருக்கவேண்டும்.

இந்த நாகரீகங்கள், தங்கள் தாய் நட்சத்திரத்தை சுற்றி ஒரு பெரிய கோளத்தை உருவாக்கி, அந்த நட்சத்திரத்தில் இருந்துவரும் மொத்த சக்தியும் தங்களின் பாவனைக்கு பயன்படுத்த எடுத்துக் கொள்வர் என வானியலாளர் டைசன் கூறுகிறார். அவர்கள் தங்களை வேறு நகரீகங்களிடம் இருந்து மறைக்க எண்ணினாலும், வெப்பஇயக்கவியலின் இரண்டாம் விதியின்படி அவர்கள் உருவாக்கும் வெப்பத்தை (waste heat) அவர்களால் மறைக்க முடியாது. இப்படியான நாகரீகங்கள் இருக்கும் கோள்கள், கிறிஸ்மஸ் மரத்தில் சோடிக்கப்பட்டுள்ள வண்ண மின்குமிழ் போல ஒளிரும் என டைசன் கருதுகிறார். அதுமட்டுமல்லாது இப்படியான இரண்டாம் வகை நாகரீகங்களை கண்டுபிடிக்க, அகச்சிவப்பு (infrared) கதிர்வீச்சை வெளிவிடும் கோள்களை நாம் ஆராய வேண்டும் என்றும் முன்மொழிந்தார். – அகச்சிவப்பு கதிர்வீச்சு, வெப்பத்தினால் உருவாகும், இந்த நாகரீகங்கள் மிக அதிகமாக கழிவு வெப்பத்தை வெளிவிடவேண்டும் என்பதனால், நாம் இந்த நாகரீகங்களை கண்டுபிடிக்க, அகச்சிகப்பு கதிர்வீச்சு உள்ள கோள்களை கண்டுபிடிக்க வேண்டும்.

இரண்டாம் வகையைச் சேர்ந்த நாகரீகங்களுக்கு, காலநிலையாலோ, வான்கற்களாலோ ஆபத்து ஏற்படாது, ஏனென்றால் அவற்றை எல்லாம் அசால்டாக சமாளிக்கும் அளவு திறமை அவர்களுக்கு உண்டு. அனால் அவர்களுக்கும் ஒரு ஆபத்தை இந்த இயற்க்கை வைத்துள்ளது – சூப்பர்நோவா.

இரண்டாம் வகை நாகரீகத்திற்கு இருக்ககூடிய மிக ஆபத்தான பேரழிவு என்றால் அது ஒரு நட்சத்திரத்தின் சூப்பர்நோவா வெடிப்புத்தான். தங்களுக்கு அருகில் இருக்கும் ஒரு நட்சத்திரம் சூப்பர்நோவாவாக வெடித்துவிட்டால், அதிலிருந்துவரும் அளப்பரிய எக்ஸ் கதிர்வீச்சு, மற்றும் காமா கதிர்வீச்சு என்பன நொடிகளில் இந்த கோள்களில் இருக்கும் உயிரினங்களை அழித்துவிடக்கூடும்.

ஆக, உண்மையிலேயே அழிவே அற்ற நாகரீகம் என்றால் அது மூன்றாம் வகை நாகரீகம்தான். அவர்கள், தங்கள் தாய் நட்சத்திரத்தின் முழுச்சக்தியையும் பயன்படுத்திவிட்டு, வேறு பல நட்சத்திரங்களுக்கு சென்று அங்கேயும் இருந்து சக்தியைப் பெற்றுக்கொள்வர். நம் அறிவியலுக்கு எட்டிய எந்தவொரு இயற்க்கைப் பேரழிவுகளும் இந்த மூன்றாம் வகை நாகரீகத்தை அழிக்காது.

உதரணத்துக்கு, தமக்கு அருகில் இருக்கும் ஒரு நட்சத்திரம் சூப்பர்நோவாவாக வெடிக்கப் போகிறது என்றால், அந்த நட்சத்திரத்தின் அமைப்பையே மாற்றக்கூடியவர்கள் இந்த மூன்றாம் வகை நாகரீகங்கள். அப்படி மாற்ற முடியாவிட்டாலும், தமது கோள்களை விட்டுவிட்டு, வேறு நட்சத்திரத்தொகுதிக்கு குடிபெயர்ந்து அங்குள்ள கோள்களை, தாங்கள் வாழ்வதற்கு ஏற்றாப்போல மாற்றிவிடுவார்கள். அவ்வளவு பெரிய தொழில்நுட்பங்களை தன்னகத்தே கொண்டவர்கள் தான் இந்த மூன்றாம் வகை நாகரீகங்கள்!

ஆனாலும் ஆவளவு சீக்கிரமாக மூன்றாம் வகையாக ஒரு நாகரீகம் மாறிவிட முடியாது. அதற்கு முட்டுக்கட்டையாக இருப்பது ஐன்ஸ்டினின் பொ.சா.கோ ஆகும். வானவியலாளர் டைசன், இந்த சார்புக் கோட்பாடு காரணமாக, ஒரு நாகரீகம், மூன்றாம் வகையாக மாறுவது அண்ணளவாக சில பல மில்லியன் வருடங்கள் வரை எடுக்கலாம் என்று கூறுகிறார். உதாரணமாக, ஒளியைவிட வேகமாக பயணிக்க வேண்டிய தேவைகள் உண்டு, ஐன்ஸ்டினின் சார்புக்கோட்பாடு இதை தடுக்கிறது. ஆக புதிய சில இயற்பியல் விதிகள் கண்டுபிடிக்கப் படவேண்டும் அல்லது ஏற்கனவே தெரிந்த சில விதிகள் பரிசோதிக்கப் படவேண்டும், இப்படி பல முட்டுக்கட்டையான விடயங்கள் உண்டு.

ஒளியின் வேகத்தடையை கருத்தில் கொண்டாலும், கிட்டத்தட்ட ஒளியின் வேகத்தில் பயணிக்க பல முறைகள் உண்டு. உதரணத்திற்கு, ஒரு ராக்கெட்டின் திறனானது, ‘கணத்தாக்கு எண்’ (specific impulse) இனால் அளக்கப்படுகிறது. அதாவது ஒரு கண நேரத்திற்கு பயன்பட்ட எரிபொருளுக்கு எவ்வளவு நேரம் விசையைத் தருகிறது என்பதே இந்த ‘கணத்தாக்கு எண்’ எனப்படும். பொதுவாக இது செக்கன்களில் அளக்கப்படும். சிலவேளைகளில் திசைவேகத்திலும் அளக்கப்படும்.

நாம் விண்வெளிக்கு செல்லப் பயன்படுத்தும் ரசாயன ராக்கெட்டுகளால் சில நூறு செக்கன்களில் இருந்து சில ஆயிரம் செக்கன்கள் வரை கணத்தாக்கதை உருவாக்க முடியும். அயன் இயந்திரங்களால் பல ஆயிரம் செக்கன்கள் வரை கணத்தாக்கத்தை உருவாக்க முடியும். ஆனால் ஒளியின் வேகத்திற்கு அருக்கில் செல்ல, அண்ணளவாக 30 மில்லியன் செக்கன்கள் கணத்தாக்கம் தேவை. எம்மைப் பொறுத்தவரை இது ஒரு எட்டாக் கனி, அனால் மூன்றாம் வகை நாகரீகத்திற்கு இரு ஒன்றும் அவ்வளவு பெரிய சவாலாக இருக்காது.

தொடரும்…


பகுதி ஒன்றை வாசிக்க: வேற்றுக்கிரக நாகரீகங்கள் – பகுதி 1

9 thoughts on “வேற்றுக்கிரக நாகரீகங்கள் – பகுதி 2

  1. தூள் பதிவுகள் சரவணா! ஒவ்வொரு சொற்றொடரும் ஆர்வமூட்டுவதாக இருந்தது! நீ படிக்கும் அருமையான விஷயங்களை எங்களுக்கு பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள்! நான் இந்த தொடரை என் எண்ணங்கள் பலவிதம் தளத்தில் reblog செய்கிறேன்.. நன்றி 🙂

    Liked by 1 person

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s