வேற்றுக்கிரக நாகரீகங்கள் – பகுதி 4

எழுதியது: சிறி சரவணா

நிகோலாய் கர்டாசிவ் தான் முதன் முதலில் நாகரீகங்களை இப்படி மூன்றாக வகைப்படுத்தியவர். இன்று நாம் பல்வேறு அறிவியல் துறைகளில் முன்னேறிவிட்டோம், உதாரணாமாக, நானோ தொழில்நுட்பம், உயிரியல் தொழில்நுட்பம், குவாண்டம் இயற்பியல் போன்றவற்றில் எமக்கு இருக்கும் அறிவு வளர்ந்துள்ளது. இந்த வளர்ச்சி நாம் எப்படி, வளர்ந்த நாகரீகங்களை வகைப்படுத்தலாம் என்பதிலும் செல்வாக்கு செலுத்துகிறது.

நானோ தொழில்நுட்பத்தின் வளர்ச்சி, வான் நியூமான் ஆய்விகளை உருவாக்குவதில் பெரும் பங்கு வகிக்கும். இயற்பியலாளர் ரிச்சர்ட் பைன்மான், “இயற்கையின் அடியில் அதிகளவு இடம் இருக்கிறது” என்கிறார். அதாவது, மூலக்கூறு அளவுள்ள ரோபோக்களை உருவாக்குவதை எந்த இயற்பியல் விதிகளும் தடுக்கவில்லை. இப்போதே ஆய்வாளர்கள், சில பல அணுக்களை மட்டுமே கொண்ட கருவிகளை உருவாக்கி இருக்கின்றனர். உதாரணாமாக, வெறும் நூறு அணுக்கள் நீளம் கொண்ட இழையால் ஆன கிட்டாரை உருவாக்கி இருக்கின்றனரே. ஆக, அணுவளவில் நாம் ஆராயவும், உருவாக்கவும் நிறைய இருக்கிறது.

பவுல் டேவிஸ் என்ற இயற்பியலாளரின் ஊகத்தின் படி, மூன்றாம் வகை நாகரீகங்கள், நானோ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆயிரக்கணக்கில், வெறும் உள்ளங்கை அளவுள்ள ரோபோ விண்கலங்களை உருவாக்கி அனுப்பியிருக்கலாம், ஆனால் அவை மிகச் சிறியதாக இருப்பதால் அவற்றைக் கண்டுபிடிப்பதென்பது மிக மிக கடினம். அதுமட்டுமல்லாது, வளர்ந்த நாகரீகங்கள் இப்படியான, சிறிய, வேகமான மற்றும் மலிவான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி தங்களது ஆய்வுகளை மேற்கொள்ளும் என்றால், எம்மைச் சுற்றி ஏற்கனவே இப்படியான கருவிகள் எம்மை அறியாமலே இருக்கலாம். அதைக் கண்டுபிடிக்கும் அளவுக்கு நாம் தான் வளரவேண்டும்.

இதுமட்டுமல்லாது, உயிரியல் தொழில்நுட்பத்தில் (bio technology) ஏற்பட்ட வளர்ச்சியும், புதுவிதமான ரோபோக்களை உருவாக வழி விடலாம். அதாவது இந்த ரோபோக்கள் உயிருள்ள உயிரினம் போல, தம்மைத் தாமே இனப்பெருக்கிக் கொண்டு பல்வேறு நட்சத்திரத் தொகுதிகளுக்கு சென்று ஆய்வுகள் நடத்தும். வெறும் இனப்பெருக்கம் மட்டும் இல்லாது, இவை செல்லும் பாதையில் கூர்ப்பு அடையவும் கூடும். மேலும் செயற்கை அறிவுள்ளதாகவும் இவை இருக்கக் கூடும்.

இதேபோல, தகவல் தத்துவமும், கர்டசிவின் நாகரீகங்களின் வகைப்படுத்தலை சற்று மாற்றி அமைத்திருக்கிறது. இன்று செட்டி (SETI – Search for Extraterrestrial Intelligence) திட்டமும், குறிப்பிட்ட அலைவரிசையில் மட்டுமே வானை ஸ்கேன் செய்துகொண்டிருக்கிறது. அதாவது செட்டி தேடுவது பூஜ்ஜிய வகை அல்லது முதலாம் வகை நாகரீகங்களையே. அந்த நாகரீகங்கள் நம்மிப்போல இருந்தால், அவர்களால், எம்மைப் போலவே ரேடியோ, டிவி போன்ற ஒளி/ஒலிபரப்புக்களை மேற்கொள்வர். இந்த ஒளி/ஒலிபரப்பு அலைவரிசைகளைத்தான் செட்டி தேடிக்கொண்டு இருக்கிறது.

மிக வளர்ச்சியடைந்த நாகரீகம், அதாவது இரண்டாம் வகை அல்லது மூன்றாம் வகைகள், ஒரு குறிப்பிட்ட ஒரு அலைவரிசையை தகவல் பரிமாற்றத்துக்கு பயன்படுத்தாது என்பது இயற்பியலாளர்களின் கருத்து. இந்த பிரபஞ்சத்தில் மிக அதிகமான, நிலையான இடையூறுகள் காணப்படுகின்றன, அதாவது பாரிய சக்திமுதல்கள், உதாரணத்துக்கு நட்சத்திரங்கள், பிரபஞ்ச முகில்கள் போன்றன, மின்காந்த அலைகளுக்கு இடையூறு விளைவிக்கக் கூடியன. ஆகவே ஒரு குறிப்பிட்ட அலைவரிசையில் செய்தியை அனுப்புவதென்பது மிகக் கடினமான காரியம். இதனால், செய்தியை தொடர்ச்சியாக அனுப்பாமல், நமது இணையம் வேலை செய்வதுபோல, சிறு சிறு பகுதிகளாக பிரித்து அனுப்பி, அது கிடைத்த இடத்தில் அவற்றை மீண்டும் ஒன்றுபடுத்தி உரிய செய்தியைப் பெற்றுக்கொள்ளலாம்.

இப்படி பகுதிகளாக பிரித்து பல அலைவரிசைகளில் அனுப்புவதால், சில பகுதிகள், இடையூறு காரணமாக பழுதடைந்து விட்டாலும், பிழை திருத்தும் முறைகளைப் பயன்படுத்தி, குறிப்பிட்ட செய்தியை பெற்றுக்கொள்ள முடியும்.

இதில் இருக்கும் ஒரு பிரச்சினை என்னவென்றால், இப்படி சிறு சிறு துண்டுகளாக செய்திகள் அனுப்பப்படும் போது, செய்திகளை எதிர்பார்த்துக் காத்திருக்கும் எம்மைப் போன்ற பூஜ்ஜிய வகை நாகரீகங்களுக்கு, இந்த செய்தித் துண்டுகள் வெறும் அர்த்தமற்ற இரைச்சல்களாகவே கேட்கும். இன்னுமொரு முறையில் சொல்லவேண்டும் என்றால், நமது நட்சத்திரப் பேரடையில் பல்வேறுபட்ட இரண்டாம், மூன்றாம் வகை நாகரீகங்களின் செய்திகள் பரிமாற்றப் பட்டுக்கொண்டே இருக்கின்றன. ஆனால் எமது பூஜ்ஜிய வகை நாகரீகத்தின் தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள தொலைக்காட்டிகள் அவற்றை பார்கவோ, கேட்கவோ திறனற்று இருக்கின்றன.

இன்னுமொரு மிக முக்கியமான விடயம், பிளான்க் சக்தி (Planck energy). இந்த இரண்டாம், மூன்றாம் வகை நாகரீகங்கள், பிளான்க் சக்தியை கையாளக் கூடிய திறனைப் பெற்று இருக்கலாம். பிளான்க் சக்தி என்பது 1019 பில்லியன் இலத்திரன் வோல்ட்கள் ஆகும். தற்போது பூமியில் எம்மால் துணிக்கை முடிக்கிகள் (particle accelerator) மூலமே மிகப் பாரிய சக்தியை உருவாக்க முடியும். ஆனாலும் இந்த பிளான்க் சக்தியானது, எமது துணிக்கை முடுக்கிகள் மூலம் உருவாக்கப்படக்கூடிய சக்தியைப் போல குவாட்ரில்லியன் அளவு அதிகம். அதாவது 1,000,000,000,000,000 மடங்கு அதிகம். இது அளவுக்கு அதிகமான சக்தியாக தெரிந்தாலும், இரண்டாம், மூன்றாம் வகை நாகரீகத்தால் உருவாக்கப்படக்கூடிய சக்தியே.

இயற்கையில் பிளான்க் சக்தியானது கருந்துளைகளின் மத்தியிலும், பிரபஞ்சத்தின் பெருவெடிப்பின் போதும் மட்டுமே வெளிப்படுகிறது. இருப்பினும், தற்போது வளர்ந்திருக்கும் குவாண்டம் ஈர்ப்பியல் (quantum gravity), மற்றும் சூப்பர்ஸ்ட்ரிங் கோட்பாடு என்பன இயற்பியலாளர்கள் மத்தியில் இந்த பிளான்க் சக்தியை பயன்படுத்தி, வெளிநேரத்தை (space-time) துளைக்க முடியும் என்ற ஒரு கருத்தை வலுப்பெற செய்துள்ளது.

வோர்ம்ஹோல் - வளைந்திருக்கும் வெளிநேரத்தில், குறுக்காக துளைக்கப் பட்ட துவாரம்
வோர்ம்ஹோல் – வளைந்திருக்கும் வெளிநேரத்தில், குறுக்காக துளைக்கப் பட்ட துவாரம்

நமக்கு இன்று தெரிந்துள்ள குவாண்டம் இயற்பியல், இப்படி வெளிநேரத்தில் நிலையான துளைகளை, அதாவது வோர்ம்ஹோல் ஒன்றை தெளிவாக கூறாவிடினும், பல இயற்பியலாளர்கள், எதிர்கால நாகரீகங்கள், நிச்சயம் இந்த வோர்ம்ஹோலை பயன்படுத்தி மிக விரைவாக பயணிப்பர் என கருதுகின்றனர். இப்படி இவர்களால் வோர்ம்ஹோல்களை பயன்படுத்தி பயணிக்க முடிந்தால், ஒளிவேகத்தின் தடை ஒரு பெரும் பிரச்சினையாக இருக்காது. ஏனென்றால் அவர்கள்தான் குறுக்காக துளையிட்டு ஷோர்ட்கட்டில் செல்வார்களே! அதுமட்டுமல்லாது, இரண்டாம் வகை நாகரீகம் இந்த வோர்ம்ஹோல் பயணங்களை கண்டறிந்து விட்டால், அந்த பின்னர் அவர்கள் இலகுவில் மூன்றாம் வகை நாகரீகமாக மாறிவிடவும் வாய்ப்புக்கள் அதிகம்.

இப்படி வேறு இடங்களுக்கு செல்வதற்கான குறுக்கு வழியாக இந்த வோர்ம்ஹோல்கள் பயன்பட்டாலும், இப்படி வெளிநேரத்தில் துளையிடக்கூடிய ஆற்றலை வைத்திருப்பது எதிர்காலத்தில் மிகப்பெரிய அனுகூலமாக இருக்கும். ஏன் என்று பார்க்கலாம்.

இன்று நாம், தூரத்தில் இடம்பெறும் சுப்பர்நோவா வெடிப்புகளைப் ஆராய்ந்து பார்த்ததில், இந்த பிரபஞ்சம் ஆர்முடுகலுடன் (accelerating) விரிவடைந்துகொண்டு செல்வது நமக்கு புலப்படுகிறது. இது உண்மையாக இருக்கும் பட்சத்தில், இந்த பிரபஞ்சத்தில் இருக்கும் விண்மீன் பேரடைகளின் ஈர்ப்புக்கு மேலாக எதிரான விசை ஒன்று தொழிற்பட்டு, இந்த பிரபஞ்சத்தை விரித்துக்கொண்டே செல்கிறது.

இப்படி தொடர்ந்து விரிவடையும் பட்சத்தில், நமது பிரபஞ்சம் தொடர்ந்து முடிவில்லாமல் விரிவடைந்துகொண்டே செல்லும், இப்படி செல்லும் போது, பிரபஞ்சத்தில் வெப்பநிலை தனிச்சுழி வெப்பநிலைக்கு (absolute zero – 0 degree kelvin or -273 degree Celsius) மிக மிக அருகில் வந்துவிடும். இப்படியான எதிர்கால பிரபஞ்சம் எப்படி இருக்கும் என்று சில பல இயற்பியல் விதிகளைப் பயன்படுத்தி எம்மால் எதிர்வுகூற முடியும். நட்சத்திரங்கள் எல்லாம் இறந்துவிட, கடைசியாக எஞ்சி இருப்பது கருந்துளைகளும், நியூட்ரான் நட்சத்திரங்களும் மட்டுமே. இப்படியான காலத்தில் வாழும் நாகரீகங்கள், இந்த கருந்துளைகளுக்கும், நியூட்ரான் நட்சத்திரங்களுக்கும் அருகில் தான் வாழவேண்டும். இந்தக் கருந்துளைகளினதும், நியூட்ரான் நட்சத்திரங்களினதும் வாழ்க்கைக்காலம் மிக அதிகமாக இருந்தாலும், அவையும் ஒரு நாளில் தங்களது வாழ்க்கைப் பயணத்தை முடித்துக் கொள்ளும். அப்போது நம் பிரபஞ்சத்தில் எஞ்சி இருப்பது வெறும் வெளிநேரம் மட்டுமே. பிரபஞ்சம் இப்படி இறக்கும் போது எல்லா உயிரினங்களும் இறப்பதைத் தவிர வேறு வழியில்லை.

பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் என்னும் புகழ்பெற்ற தத்துவவியலாளர், இந்த இறப்பை இப்படி வர்ணிக்கின்றார்.

“காலம் காலமாக நாம் கட்டிக் காத்தது, இதுவரை நாம் செய்த கடமைகளும், எல்லா தூண்டல்களும் உணர்ச்சிகளும், மனித குலத்தின் அறிவியல் சாதனைகளும் அவனது விருத்தியும், இந்த சூரியத்தொகுதியின் பேரழிவின் போது, முழுதாக மறைந்திவிடும். மனிதனின் என்ற உயிரினத்தின் மொத்த இருப்பும் இந்த பிரபஞ்ச இடிபாடுகளின் கீழ் புதைக்கப்பட்டுவிடும்”

நமது சூரியன் இன்னும் 5 பில்லியன் வருடங்கள் வரை உயிருடன் இருக்கும், அதன் பின் அது சிகப்பு அரக்கனாக மாறத்தொடங்கி நமது பூமியையே விழுங்கிவிடும். அவ்வளவு காலம் எமது மனித நாகரீகம் அழிவடையாமல் இருந்தால், நமது பூமியில் உள்ள கடல்கள் எல்லாம் ஆவியாகிவிட முதல் எம்மால் வேறு கோள்களுக்கோ, அல்லது வேறு நட்சத்திரத் தொகுதிக்கோ குடி பெயர்ந்துவிட முடியும். ஆனால் முழு பிரபஞ்சத்தின் அழிவில் இருந்து தப்பிக்க முடியுமா?

“நாம் ஒரு பேச்சுக்கு, காலம் செல்லச் செல்ல மூன்றாம் வகை நாகரீகம், படிப்படியாக நாலாம் வகை, ஐந்தாம் வகை, ஆறாம் வகை என வளர்ந்துகொண்டே வரும் என எடுகோள் எடுத்தால், இந்த வகை நாகரீகங்கள், பிரபஞ்சத்தில் உள்ள மிகப்பெரிய அமைப்புக்களை மாற்றியமைக்கக் கூடிய சக்தியை தன்னகத்தே கொண்டிருக்கும்.” என வானியலாளர் ஜான் பர்ரோவ்ஸ் கருதுகிறார்.

ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள், தங்களது விருப்பபடி நட்சத்திரங்களை உருவாக்க அல்லது அழிக்க மட்டுமல்லாமல், பில்லியன் கணக்கான நட்சத்திரங்களை கொண்ட பேரடைகளையும், பேரடைத்தொகுதிகளையும் ஆக்கவும் அழிக்கவும் வல்லமை பொருந்திய நாகரீகம் எப்படி இருக்கும்?

இந்த நாகரீகங்களால், பிரபஞ்சத்தின் அழிவில் இருந்தும் தப்பிக்க முடியும், ஆம், வெளிநேரத்தில் துளைகளை இட்டு, கடிகாரத்தை முன்னோக்கி சுற்றுவது போல பிரபஞ்ச காலத்தையே தலைகீழாக சுற்றி மீண்டும் பழைய காலத்திற்கு சென்று இவர்களால் பிரபஞ்சத்தின் அழிவில் இருந்து தப்பித்துவிட முடியும் என சில இயற்பியலாளர்கள் கருதுகின்றனர்.

பிரபஞ்சத்தின் பெருவீக்க கோட்பாட்டை முன்வைத்த அலன் குத் (Alan Guth), இப்படியான அதிவளர்ச்சி கண்ட நாகரீகங்கள், தங்கள் ஆய்வுகூடத்தில் குழந்தைப் பிரபஞ்சங்களை உருவாக்கக் கூடியளவு சக்தியை கையாளக்கூடியதாக இருக்கும் என கருதுகிறார். அலன் குத்தின் கணக்குப் படி, ஒரு குழந்தைப் பிரபஞ்சத்தை உருவாக்க 1000 ட்ரில்லியன் டிகிரி வெப்பநிலையை கையாள வேண்டிஇருக்கும், இந்த வெப்பநிலையானது, இந்த எடுகோள் நாகரீகங்களின் (4,5, மற்றும் 6 ஆம் வகை நாகரீகங்கள்) வசதிக்கு உட்பட்டதாகவே இருக்கும்.

வேற்றுக்கிரக நாகரீகங்கள் எப்படியெல்லாம் இருக்கலாம் என்று பார்த்தோம். இருப்பினும் இவை அனைத்தும் ஒரு விதமான கணிப்பே. நேரடியாக ஒரு வேற்றுக்கிரக நாகரீகத்தோடு நாம் தொடர்பை ஏற்படுத்தாத வரையில் இவை எல்லாம் வெறும் வழிகாட்டியாக மட்டுமே இருக்கும்.

ஆனாலும் நம்பிக்கை இருக்கிறது. என்றாவது ஒருநாள், கார்ல் சேகன் ஆசைப்பட்டதுபோல இந்த வளர்ந்துவிட்ட நாகரீகங்கள் எப்படி இருக்கும் என அவர்களுடன் தொடர்புகொண்டு நாம் அறியத்தான் போகிறோம். இந்தப் பெரிய பிரபஞ்சம், இந்த சிறிய பூமியில் மனிதன் மட்டுமே வாழ படைக்கப்பட்டது என்பதில் எனக்கு துளியளவும் நம்பிக்கை இல்லை.

இன்று எம்மால் முடிந்தது இரவுவானில் தெரியும் ஆயிரக்கணக்கான நட்சத்திரங்களை அண்ணார்ந்து பார்ப்பது மட்டுமே. ஆனால் அந்த ஆயிரக்கணக்கான நட்சத்திரங்களில் ஒன்றை சுற்றிவரும் ஒரு கோளில் அதேபோல ஒருவர் வானத்தை அண்ணார்ந்து பார்த்து இதே போல கேள்விகளை கேட்கும் சாத்தியக்கூறு மிக மிக அதிகம்.

முற்றும்.

முன்னைய பதிவுகள்

  1. வேற்றுக்கிரக நாகரீகங்கள் – பகுதி 1
  2. வேற்றுக்கிரக நாகரீகங்கள் – பகுதி 2
  3. வேற்றுக்கிரக நாகரீகங்கள் – பகுதி 3

11 thoughts on “வேற்றுக்கிரக நாகரீகங்கள் – பகுதி 4

    1. 🙂 நன்றி அக்கா. இதே தலைப்பில் இன்னும் சில விடயங்கள் உண்டு அவற்றையும் எழுதுகிறேன். இப்போது மீண்டும் கருந்துளைக்கு செல்ல வேண்டும், அதோடு அந்தக் கதைகள். ஹஹா

      Liked by 1 person

  1. ரசிக்க கூடிய வகையில் எழுதப்பட்ட பயனுள்ள அறிவு தகவல்கள், மிகவும் ரசித்தேன்,

    ஒரு கேள்வி நண்பரே,

    இந்த பிரபஞ்சத்தின் எல்லை எது?

    இயற்பியல் கூற்றுப்படி எந்த ஒரு பொருளும் இன்னொரு பொருளால் (Container) கொள்ளபட்டிருக்கும்,

    அப்படி பிரபஞ்சம் ஒரு Container ஆல் கொள்ளபட்டிருந்தால் அந்த container இன் container தான் எது?

    இதன் எல்லை தான் எது?

    Liked by 1 person

    1. “இயற்பியல் கூற்றுப்படி எந்த ஒரு பொருளும் இன்னொரு பொருளால் (Container) கொள்ளபட்டிருக்கும்”
      இதனை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

      space and time itself a property of this universe.

      வெளி மற்றும் நேரம் என்பதே இந்தப் பிரபஞ்சத்தின் இரு பண்புகள் ஆகும், ஆகவே நீங்கள் இந்த பிரபஞ்சத்திற்கு வெளியே என்ன இருக்கும் என்ற கேள்வியைக் கேட்பது முடியாத காரியம். சாதாரணமாக எப்படி 4ஆவது பரிமாணத்தை நீங்கள் கற்பனை செய்து பார்க்க முடியாதோ அதே போல் தான் இதுவும்.

      “நேரம்” என்பது மிகவும் குழப்பமான விடயம் ஆகவே அதனைப் பற்றி இங்கே நான் கதைக்கமாட்டேன்.

      ஸ்ட்ரிங் கோட்பாடு படி பார்த்தால், எமது பிரபஞ்சம், மிகப்பெரிய முடிவிலி எண்ணிக்கையான பிரபஞ்சங்களில் ஒன்றே. அதனை multiverse எனவும் அழைக்கின்றனர்.

      எமது பிரபஞ்சத்தின் வடிவத்தைப் பற்றிக் கூறவேண்டும் என்றால், அது ஒரு உளுந்துவடை / மெதுவடை வடிவம்! doughnut வடிவம்! ஆனால் இப்படி எல்லாம் கூறினால், அந்த உளுந்துவடைக்கு வெளியே என்ன இருக்கிறது என்று சாதாரணமாக சந்தேகம் வருவது வழமையே, ஆனால் இங்கு நீங்கள் விளங்கிக்கொள்ள வேண்டிய விடயம், வெளி என்பது இந்தப் பிரபஞ்சத்திற்கு சொந்தமான ஒரு பண்பு. ஆகவே வெளிக்கு வெளியே என்ன இருக்கிறது என்று கேட்பது அவ்வளவு சரியான கேள்வியல்ல.

      ஒரு சிறிய ஜோக்.

      நேரம் என்பது இந்தப் பிரபஞ்சத்தின் பண்பு என்று கொண்டால், நேரம் இந்தப் பிரபஞ்சம் உருவாகிய பொழுதில் தொடங்கியது என்றால், அதற்கு முதல் கடவுள் என்ன செய்துகொண்டு இருந்திருப்பார்?

      ஆங்! இப்படி கேள்வி கேட்பவர்களை எண்ணையில் போட்டு வறுத்தெடுக்க பெரிய சட்டி செய்துகொண்டு இருந்திருப்பார்!

      – சரவணா

      Like

  2. சீமை அத்திப் பழம் போன்ற வடிவத்தில் அண்டங்கள் உள்ளதாக சித்தர் நூல் கூறுகிறது.அதில் உள்ள விதைகள் நட்சத்திரங்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s