பிரபஞ்சத்தின் எல்லையில் ஒரு புகைப்படம்

எழுதியது: சிறி சரவணா

இரவு நேர வானை நீங்கள் அவதானித்து இருந்தால், பல உடுக்களை நீங்கள் அவதானித்து இருப்பீர்கள். ஒரு தெளிவான இரவு வானில், உங்களால் அண்ணளவாக 3000 தொடக்கம் 4000 வரையான உடுக்களை பார்க்கலாம். இந்த உடுக்கள் எல்லாம் எமது பால்வீதியில் இருப்பவைதான். கொஞ்சம் உன்னிப்பாக அவதானித்தால் அன்றோமீடா உடுப்பேரடையையும் வெறும் கண்ணால் பார்க்கலாமாம். அன்றோமீடா உடுப்பேரடை நமது பால்வீதியில் இருந்து கிட்டத்தட்ட 2.5 மில்லியன் ஒளியாண்டுகள் தூரத்தில் இருக்கிறது. இதுதான் நமது பால்வீதிக்கு மிக அருகில் இருக்கும் உடுப்பேரடை.

இந்த இரவு வானம் ஒரு அற்புதமான விடயம், நீங்கள் இரவு வானில் பார்ப்பது வெறும் உடுக்கள் அல்லது பொருட்கள் மட்டுமல்ல, நேரத்தையும் தான். உண்மையிலேயே நீங்கள் பார்ப்பது ஒரு இறந்தகால வானத்தை. நமக்கு மிக அருகில் இருக்கும் புரோக்சிமா சென்ட்டரி என்னும் உடு, அண்ணளவாக 4.2 ஒளியாண்டுகள் தூரத்தில் இருக்கிறது. அப்படியென்றால் இன்று நாம் பூமியில் இருந்து பார்க்கும் போது தெரியும் ப்ரோக்சிமா சென்ட்டரி உடு, 4.2 வருடங்களுக்கு முன்பு எப்படி இருந்ததோ அதைத்தான் இன்று நாம் பார்க்கிறோம். ஏனென்றால் அங்கிருந்து ஒளி வந்தடைய 4.2 ஆண்டுகள் எடுக்கிறது.

அதைப் போலத்தான் மற்றைய உடுக்களும், அவை எவ்வளவு தூரத்தில் இருக்கிறதோ, அவற்றைப் பார்க்கும் போது அவை அவ்வளவு காலத்திற்கு முன் எப்படி இருந்ததோ அதைத்தான் நாம் பார்க்கிறோம். சில உடுக்களை நீங்கள் இன்று பார்க்கலாம், அனால் உண்மையிலேயே அவை இன்று இல்லாமல் சூப்பர்நோவாவாக அழிந்து இருக்கலாம். இந்த வானமே ஒரு நேர இயந்திரம் தான்.

சரி விடயத்துக்கு வருகிறேன். நாம் நாசா ஆய்வாளர்களுக்கு ஒரு ஆசை வந்து விட்டது, அதாவது இந்தப் பிரபஞ்சத்தின் மிக மிகத் தொலைவில் என்ன இருக்கிறது என்று பார்க்க ஆசை. அதாவது எமது தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எவ்வளவு தொலைவு பார்க்கமுடியுமோ அவ்வளவு தொலைவு பார்ப்பது என்பது அவர்களது பிளான்.

24 வருடங்களாக வானில் ஒருவர் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறார். ஹபிள் வான் தொலைக்காட்டி (Hubble Space Telescope – SPT), பூமியின் மேற்பரப்பில் இருந்த்து அண்ணளவாக 500km உயரத்தில் பூமியை சுற்றி வருகிறது. இதைப் பயன்படுத்தித்தான் வானில் ஒரு பகுதியில் என்ன இருக்கிறது என்று பார்க்க ஆய்வாளர்கள் திட்டமிட்டனர். அந்த நாளும் வந்தது!

டிசம்பர் 18, 1995 அன்று HST தனது அகலப்புலக் கோள்க் கமரா 2 ஐ தொடர்ந்து 10 நாட்கள் இயக்கி 342 வேறுபட்ட படங்களை கொண்டு (டிசம்பர் 18 – 28) முதலாவது “ஹபிள் ஆழ்க்களம்” (Hubble Deep Field) என்ற புகைப்படத்தை உருவாகியது. இது படம்பிடித்த பகுதியின் அளவு, இந்தப் பிரபஞ்சத்தின் அளவோடு ஒப்பிடும் போது வெறும் தூசி அளவுதான். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால், ஒரு 1 ரூபாய் நாணயத்தை 75 அடி தொலைவில் வைத்துவிட்டு பார்த்தால், அந்த நாணயத்தின் விட்டம் எவ்வளவு இருக்குமோ அவ்வளவுத்தான் இந்த “கபிள் ஆழ்களம்” புகைப்படம். இருந்தும் அந்தப் புகைப்படத்தில் 1500 க்கும் அதிகமான உடுப்பேரடைகளை ஆய்வாளர்கள் கண்டனர்.

hs-1996-01-a-web_print

ஆனால் அதன் பின்னர் 2003 இல் தொடங்கி 2012 வரை பல்வேறு நுட்பங்களைப் பயன்படுத்தி மேலும் நுணுக்கமான, துல்லியமான புகைப்படத்தை நாசா ஆய்வாளர்கள் உருவாகினர். இது வெறும் கண்ணுக்குப் புலப்படக்கூடிய ஒளியில் மட்டும் இல்லாமல், அகச்சிவப்புக் கதிர்வீச்சில் இருந்து புறஊதாக்கதிர்வீச்சு வரை உள்ளடங்கலாக இந்தப் படம் உருவாகியது. இது “ஹபிள் மிகஆழக்களம்” (Hubble Ultra Deep Field) எனப்படுகிறது இந்தப் படத்தில் கிட்டத்தட்ட 10000 உடுப்பேரடைகள் இருக்கின்றன!

Hublle
Hubble Ultra Deep Field – ஒவ்வொரு புள்ளியும் ஒவ்வொரு உடுப்பேரடை, ஒவ்வொரு உடுப்பேரடையும், பில்லியன் கணக்கான உடுக்களைக் கொண்டுள்ளன.

இந்த Ultra Deep Field படத்தில் இருக்கும் பேரடைகள் சில 13 பில்லியன் ஒளியாண்டுகள் தூரத்தில் இருக்கின்றன. அப்படியென்றால் கிட்டத்தட்ட பிரபஞ்சம் தோன்றி சில மில்லியன் வருடங்களே ஆன பின்பு தோன்றிய முதலாவது உடுப்பேரடைகள் அவை.

இப்படி மிகத்தொலைவில் இருப்பவற்றைப் பார்க்கும் போது, காலத்தாலும் முன்னோக்கிச் சென்று பார்க்ககூடியதாக இருப்பது இந்தப் பிரபஞ்சத்தின் இயற்கைச் சாகசங்களில் ஒன்றுதான்.

இந்த Ultra Deep Field தான் நாம் இதுவரை பார்த்த, இந்தப் பிரபஞ்சத்தில் மிகத்தொலைவில் உள்ள பொருட்கள். இதற்கு அப்பாலும் எம்மால் சிறிதளவு முன்னோக்கிச்சென்று பார்க்க முடியும், ஆனால் கபிள் தொலைக்காடியால் அது முடியாது. அதற்காத்தான் கபிள் தொலைக்காட்டியை விட மிகப்பெரியதான ஜேமேஸ் வெப் பிரபஞ்சத்தொலைக்காட்டியை (James Webb) 2018 இல் நாசா விண்ணுக்கு அனுப்புகிறது. இதிலிருக்கும் ஆடி, ஹபிள் தொலைக்காட்டியில் இருக்கும் அடியை விட 5 மடங்கு பெரியது, ஆக எம்மால் இன்னும் தெளிவாக மிகத் தொலைவில் இருக்கும் பேரடைகளைப் பற்றியும், அவற்றின் உருவாக்கம் பற்றியும், இந்தப் பிரபஞ்ச ஆரம்பம் பற்றியும் அறியமுடியும்.

1280px-JWST-HST-primary-mirrors.svg
இரண்டு தொலைக்காட்டிகளினதும் ஆடிகளின் அளவு.

ஹபில் தொலைக்காட்டி, வானியல் துறையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது என்றால் அது மிகையல்ல, அதேபோல 2018 இற்கு பின்னர் இந்த ஜேம்ஸ் வெப் தொலைக்காட்டி இன்னுமொரு புதிய பாதைக்கு வித்திடும் என்பதில் ஐய்யமில்லை.

[இனி நட்சத்திரங்களுக்கு, அழகான தமிழில் ‘உடு’ என்ற சொல்லைப் பயன்படுத்தலாம். இதற்கு காரணம், ‘உடு’ எளிய அழகான தமிழ்ப் பதம், மற்றயது ‘நட்சத்திரம்’ என்று எழுதுவதை விட எனக்கு உடு என்று எழுதுவது இலகுவாக இருக்கிறது]

5 thoughts on “பிரபஞ்சத்தின் எல்லையில் ஒரு புகைப்படம்

  1. ஓம் அக்கா, வானம் அளப்பெரியது, இரு உடுக்களுக்கான இடைவெளியும் மிக மிக அதிகம், ஆக அங்கிருந்து ஒளி நம்மை வந்து அடைந்ததால் தானே நம்மால் பார்க்கலாம்… அங்குருந்து ஒளி வரவே பல ஆயிரக்கணக்கான வருடங்கள் ஆகிவிடுமே… அதனால் தான் வானம் ஒரு கல்லறை என்று ஹெர்ச்செல் சொன்னார் போல 🙂

   Liked by 1 person

 1. என் பாட்டி நட்சத்திரமெனக் கூறுவதில்லை. வெள்ளி எனக் குறிப்பிடுவார்.
  வெய்யில் எறிக்கிறது, நிலா காயுது, வெள்ளி காரிக்கிறது. இப்படியாக அவர்கள் பேசுவதே அழகு! அப்போ தமிழ் பற்றிய சிந்தனை எனக்கிருக்கவில்லை.
  உடுவும், நல்ல இலகுவான சொல்.
  உங்கள் கட்டுரை மிக ஆழமானது. எனக்கு வெகு தூரமானது.

  Liked by 1 person

  1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஜான். வெள்ளியும் மிக அருமையான சொல் தான். ஆனால் வெள்ளி என்று ஒரு கோள் இருப்பதால், கட்டுரைகளில் இதைப் பயன்படுத்துவது சற்றுச் சிரமம்.

   Like

 2. There is no words Express about my feelings our Galaxy thank you for your valuable valuable information you are good really good thank you Mr Saravanan
  Can you explain time travel because I could not understand Time Travel theory can you please if you have any idea this is my mail ID please send me Time Travel theory Deep explanation Tamil words
  mohanrajRajMohan05@gmail.com

  Liked by 1 person

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s