நியண்டர்தால் இனஅழிவில் மனித இனத்தின் பங்களிப்பு – புதிய தடயங்கள்

நியண்டர்தால் இனமே (Neanderthals), தற்கால மனித இனத்திற்கு (Homo sapiens) மிக நெருங்கிய ஆனால் தற்போது முற்றாக அழிந்துவிட்ட இனமாகும். அண்மையில் இத்தாலி அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட பழங்கால பற்கள், புதிய மனித இனம், இந்த நியண்டர்தால் இனத்தின் அழிவுக்கு காரணமாக இருக்கலாம் என்று கருதுகின்றனர்.

நியாண்டர்தால்கள் ஆசியாவிலும் ஐரோப்பாவிலும் வாழ்ந்துள்ளனர். இவர்கள் மனித இனத்தோடு சேர்ந்து இனப்பெருக்கம் செய்ததற்கு சான்றாக, இன்று ஆபிரிக்காவுக்கு வெளியே உருவாகிய மனித இனத்தின் DNA வில் 1.5 தொடக்கம் 2.1 வீதமான DNA கூறுகள் நியண்டர்தாலின் DNA பகுதிகளாகும்!

ஆய்வுகளின் படி, நியண்டர்தால்கள் 41000 – 39000 வருடங்களுக்கு முன்பு ஐரோப்பா மற்றும் ஆசியாவில் இருந்து மறைந்துள்ளனர். இவர்களது அழிவுக்கு மனிதஇனம் நேரடியாகவோ, மறைமுகமாகவோ சம்மந்தப்பட்டிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

ப்ரோடோஆரிக்னேசியன் (protoaurignacians)  என்ற இனம் கிழக்கு ஐரோப்பாவில் 42000 வருடங்களுக்கு முன்பு தோன்றியது, இவர்கள் தான் தற்கால மனித இனத்தின் முன்னோடிகளாக இருக்கலாம் என கருதுகின்றனர். இவர்கள் தங்களது சிறிய எலும்பாலான கத்திகளுக்கும், சங்கு மற்றும் சிப்பி போன்றவற்றில் வேலைப்பாடுகள் செய்ததற்கும் சான்றுகள் உண்டு. இவர்கள் கிழக்கு ஐரோப்பிய, மத்திய கிழக்கு மற்றும் இந்திய பகுதிகளில் பெருகிய மனித இனத்தின் ஆரம்பம் என்றே பல ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

ஆனால் ப்ரோடோஆரிக்னேசியன்களை மனிதனாக கருதுவதா, அல்லது நியண்டர்தாலாக கருதுவதா என்று இன்னும் கருத்துவேறுபாடுகள் காணப்படுகின்றன. ஆரிக்னேக்கில் (இதனால் தான் இவர்களுக்கு ஆரிக்னேசியன்கள் என்று ஆய்வாளர்கள் பெயரிட்டனர்) கிடைத்த தடயங்கள் இவர்களை வகைப்படுத்துவதற்கு போதுமானதாக இருக்கவில்லை.

இப்போது இதில் ஒரு புதிய திருப்பமாக, ப்ரோட்டோஆரிக்னேசியன்கள் காலத்தை சேர்ந்த 41000 ஆண்டுகள் பழமையான பற்கள் இத்தாலியில் கிடைக்கப்பெற்றுள்ளன. இந்தப் பற்கள் மனிதனது என்று கண்டறியப்பட்டுள்ளது. ஆகவே அந்தக்காலத்தில், நியண்டர்தால்கள் அழிந்த காலப்பகுதியில் (41000 – 39000) மனிதனும் ஐரோப்பாவில் வாழ்ந்ததற்கு தற்போது சான்று கிடைத்துள்ளது.

இத்தாலியில் உள்ள Riparo Bombrini என்ற பகுதியில் கண்டெடுக்கப்பட்ட இந்தப் பற்களின் எனாமல் தடிப்பாக இருந்தது கண்டறியப்பட்டது. நியண்டர்தால் பற்களைவிட மனிதப் பற்கள் தடிப்பான எனாமல் பகுதியை கொண்டுள்ளவை, இதற்கு காரணம் நியண்டர்தால்களைவிட மனிதர்கள் ஆரோக்கியமானவர்களாகவும், அவர்களது பரிமாண வளர்ச்சி குறைந்த வேகத்தில் நிலையாக வளர்ந்துள்ளது எனவும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

அதேபோல இந்த பற்களின் DNA வை ஒப்பிட்டுப் பார்த்ததில், ப்ரோட்டோஆரிக்னேசியன்கள் தற்கால மனித இனத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கவேண்டும் என்று முடிவுக்கு வர முடிந்துள்ளது.

ஆக ஒன்றும் ஒன்றும் இரண்டு என்று கணக்குப் போட்டுப் பார்க்கும் போது, 42000 ஆண்டுகளுக்கு முன்பு ப்ரோட்டோஆரிக்னேசியன்கள் ஐரோப்பாவுக்கு வந்துள்ளனர். நியாண்டர்தால்கள் 41000 – 39000 ஆண்டுகளுக்கு முன்பு அழிவடைந்துள்ளனர். புதிய ஆராய்ச்சி முடிவுகள், இந்த ப்ரோட்டோஆரிக்னேசியன்கள், நியண்டர்தால்களின் அழிவில் நேரடியாகவோ, மறைமுகமாக செல்வாக்குச்செலுத்தி இருப்பது தெரியவருகிறது.

ஆனால் இன்னமும் புரியாத புதிராக இருப்பது, எவ்வாறு மனித இனம் நியண்டர்தால்களை அழிவுப்பாதைக்கு தள்ளியிருக்கும் என்பதே. ஒருவேளை மனிதர்கள், நியண்டர்தால்களுடன் வளங்களுக்கான போட்டியில் இறங்கியிருக்கலாம், அல்லது நியண்டர்தால்களை தங்களது இனத்திற்குள் உள்வாங்கி இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

வேறு ஒரு ஆய்வு, நியாண்டர்தால்கள், மனிதர்கள் வரும் முன்னரே சூழலியல் காரணங்களால் ஏற்கனவே அழிவுக்கு உள்ளாகி இருந்தனர் என்று சொல்கிறது.

ஆய்வாளர்கள், ப்ரோட்டோஆரிக்னேசியன்களின் DNAவை ஆராய்வதன் மூலம் நியண்டர்தால்களுக்கு என்ன நடந்தது என்று மேலும் தகவல்களை அறியலாம் என்று கருதுகின்றனர்.

2 thoughts on “நியண்டர்தால் இனஅழிவில் மனித இனத்தின் பங்களிப்பு – புதிய தடயங்கள்

  1. உங்கள் கட்டுரைகளை வைத்துப்பார்க்கும்போது பூமியும் அதன் உயிரிங்களும் பல அழிவுகளை சந்தித்துள்ளன. மனித இனமும் அழிவினை சந்திக்கும் என்பது உறுதி. அழிவிற்கும் மனிதனுக்கும் நடக்கும் போட்டியில், நாம் அழியப் போகிறோமா? அல்லது நம் அறிவையும் தொழில்நுட்பத்தையும் கொண்டு வெல்ல போகிறோமா என்பது இறுதிக்கட்ட சுவாரசியம்! 🙂

    Liked by 1 person

    1. நீங்கள் சொல்வது எப்படியென்று தெரியவில்லை, ஆனால் இன்று நடைபெறும் சூழல் மாற்றங்களில் மிகப்பெரிய ஒரு ஊடகமாக மனிதன் இருப்பது உறுதி. மற்றும் அடுத்த பேரழிவிற்கு மனிதனின் செயற்பாடுகளும் காரணமாகலாம்.

      Liked by 1 person

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s