100,000 விண்மீன்பேரடைகளில் வேற்றுலகவாசிகளைத் தேடல்

எழுதியது: சிறி சரவணா

விண்ணியல் ஆய்வாளர்கள், வேற்றுலகவாசிகள் இருப்பதற்கான அடையாளம் உண்டா என அண்ணளவாக 100,000 விண்மீன்பேரடைகளில் தேடியுள்ளனர். இதுவரை “எதிர்பார்த்த” முடிவு கிடைக்கவில்லை. அதாவது  வேற்றுலகவாசிகள் இருப்பதற்கான எந்தவொரு தடயமும் இன்னும் கிடைக்கவில்லை. நாசாவின் வைஸ் (WISE) என்ற செயற்கைக்கோளைப் பயன்படுத்தியே இந்த ஆய்வாளர்கள் இந்த 100,000 பேரடைகளை ஆய்வுசெய்துள்ளனர்.

இந்த ஆய்வாளர்களின் கருத்துப்படி, ஒரு விண்மீன் பேரடையில் உள்ள விண்மீன்கள் வேற்றுலகவாசிகளால் குடியேற்றப்பட்டிருந்தால், அந்த சமுதாயத்தின் தொழில்நுட்ப பாவனையினால் வெளியிடப்படும் விரயமான சக்தி, அகச்சிவப்பு கதிர்வீச்சாக வெளியிடப்படும், இந்தக் கதிர்வீச்சை கண்டறியும் வண்ணமே வைஸ் செய்மதி உருவாக்கப்பட்டுள்ளது.

நமது மனித தொழில்நுட்பத்தைப் பொறுத்தவரை இப்படியான பல விண்மீன்களில் இருந்து சக்தியைப் பெறுவது என்பது கனவே, ஆனால் தொழில்நுட்பத்தில் நன்கு வளர்ந்த ஒரு வெற்றுக்கிரக நாகரீகம், பல்வேறு விண்மீன்களில் இருந்து தங்களுக்குத் தேவையான சக்தியைப் பெற்றுக்கொள்ளும் (உதாரணம், இரண்டாம் மற்றும் மூன்றாம் வகை நாகரீகங்கள்), அப்படி அவர்கள் அச்சக்தியை பயன்படுத்தும் போது எம்மால் அதை அவதானிக்கக்கூடியதாக இருக்கும்.


தொழில்நுட்ப வளர்ச்சியைப் பொறுத்து ஒரு நாகரீகம் எப்படி வளரலாம் என்று வேற்றுக்கிரக நாகரீகங்கள் கட்டுரைத் தொகுப்பில் தெளிவாக நீங்கள் விளங்கிக்கொள்ளலாம்.


முதன்முதலில் 1960களில் இப்படியான, வளர்ச்சியடைந்த நாகரீகங்களின் சக்திப்பயன்பாட்டில் இருந்து எம்மால் அவர்களின் இருப்பைக் கண்டறியலாம் என பிறீமன் டைசன் (Freeman Dyson) என்ற இயற்பியலாளர் உத்தேசித்தார். ஆனால் நாம் கடந்த சில வருடங்களாகவே இந்த வீண்விரயமாகும் அகச்சிவப்புக்கதிர்வீச்சை ஆராயும் வண்ணம் செய்மதியை விண்ணுக்கு அனுப்புமளவு தொழில்நுட்பத்தில் வளர்ந்துள்ளோம்.

இந்த வைஸ் செய்மதி அண்ணளவாக 100 மில்லியன் விண்மீன் பேரடைகளை இப்படியான அகச்சிவப்புக் கதிர்வீச்சு வருகிறதா என ஆராய்ந்துள்ளது, அதிலும் 100,000 விண்மீன் பேரடைகளை தனிப்பட்ட ரீதியில் தெரிவுசெய்து, இந்த ஆய்வுக்குழு படித்துள்ளத்து. ஆனாலும் ஆய்வு முடிவுகள், இந்த விண்மீன் பேரடைகளில் எந்தவிதமான வேற்றுலகவாசிகளின் செயற்பாடு இருப்தற்கான ஆதாரங்களையும் வெளிப்படுத்தவில்லை.

வைஸ் செய்மதி
வைஸ் செய்மதி

இருந்தும், இந்த 100,000 விண்மீன் பேரடைகளில், அண்ணளவாக 50 விண்மீன் பேரடைகள், ஆய்வாளர்கள் எதிர்பார்த்த விதத்தில், மத்திம அளவு அகச்சிவப்பு கத்ரிவீச்சை வெளியிடுகின்றது. ஆனாலும் ஆய்வாளர்கள் இது வேற்றுலகவாசிகளின் செயற்ப்பாடாக இருக்கமுடியாது என்றே கருதுகின்றனர். இயற்கைக் காரணிகளே இந்த அகச்சிவப்பு கதிர்வீச்சுக்கு காரணமாக இருக்கலாம் என்பது இந்த ஆய்வாளர்களின் கருத்து. அதை உறுதிப் படுத்துவதற்காக தொடர்ந்து அந்த விண்மீன் பேரடைகளை அவர்கள் ஆய்வுசெய்ய உள்ளனர்.

இந்த ஆய்வே முதன்முதலில் அதிகளவான விண்மீன் பேரடைகளில், இப்படியான கதிர்வீச்சைத் தேடி செய்யப்பட ஆய்வாகும். இந்த ஆய்வின் முடிவுகள் எப்படியிருப்பினும் அது நமக்கு புதிய சில தரவுகளை தந்துள்ளது என்றே சொல்லவேண்டும்.

சிலவேளைகளில் நாம் எதிர்பார்த்த விதத்தில் வேறு விண்மீன்களில் அல்லது பேரடைகளில் வேற்றுலக நாகரீகங்கள் உருவாகியில்லாமல் இருக்கலாம். அல்லது அவர்களது தொழில்நுட்பம் நாமறிந்தவிதத்தைவிட வேறு மாதிரி இருக்கலாம். மற்றும் இங்கு கவனிக்கவேண்டியது, இந்த வைஸ் ஆய்வு மொத்த விண்மீன் பேரடயிலும் குடியேறிஇருக்கும், மூன்றாம் வகை நாகரீகங்களேயே தேடிப்ப்பார்த்துள்ளது. இந்த ஆய்வில், நமது மனித இனம் போன்ற ஒரே விண்மீனில் தங்கியிருக்கும் வேற்றுலகவாசிகள் உள்ளடங்கவில்லை, மற்றும் சில பல விண்மீன்களில் இருந்து சக்தியைப் பேரும் இரண்டாம் வகை நாகரீகங்களும் உள்ளடக்கப்படவில்லை.  ஆகவே இந்த ஆய்வை மட்டும் வைத்துக்கொண்டு நம்மால் எந்தவொரு முடிவையும் எடுக்கமுடியாது.

அனால் ஒன்றுமட்டும் நிச்சயம், இதுவரை தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தித் தேடியவரை எம்மால் வேற்றுலகவாசிகளை இதுவரை கண்டறியமுடியவில்லை, இது “பெர்மியின் முரண்பாடு” (Fermi Paradox) உண்மையாக இருந்துவிடுமோ என்று சந்தேகத்தையும் தோற்றுவிக்கிறது. ஆனாலும் இந்த பரந்துவிரிந்த பிரபஞ்சத்தில், உயிர் தோன்ற பல்வேறுபட்ட சாத்தியக்கூறுகள் இருக்கின்றன என்றே பெரும்பாலான அறிவியலாளர்கள் கருதுகின்றனர்.

இந்த வைஸ் ஆய்வின் தலைவர், இந்த ஆய்வை ஒரு தேடலின் ஆரம்பமாகத்தான் கொள்ளவேண்டும் என்று சொல்கிறார், அதாவது இனிவரும் காலங்களில், இந்தக் கதிர்வீச்சைக் இன்னும் துல்லியமாக கண்டறியும் தொழில்நுட்பங்களை வளர்த்து, எம்மால் இந்தத் தேடலை மேலும் செறிவுபடுத்தமுடியும் என்பது அவரது கருத்து. ஆக இது ஒரு தேடலின் ஆரம்பமே!

மூலம்: sciencealert

6 thoughts on “100,000 விண்மீன்பேரடைகளில் வேற்றுலகவாசிகளைத் தேடல்

ஆனந்தன் -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி