துல்லியமான கண்களைக் கொண்ட ஒருகல அங்கி : புதிய புதிர்

எழுதியது: சிறி சரவணா

இந்த இயற்கை பல புதிய அதிசயங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது என்பதில் எந்தவித மாறுபாடுகளும் இருக்கமுடியாது. இயற்கையில் இருந்துவரும் ஒவ்வொரு புதிய கண்டுபிடிப்புக்களும் எதோ ஒரு விதத்தில் எமது ஆச்சரியத்தை தூண்டுவதாகவே இருக்கிறது. உண்மையில் பார்க்கப்போனால் ஒவ்வொரு கண்டுபிடிப்பின் பின்னரும் எமது ஆச்சரியம் குறையவேண்டும் அல்லவா, ஏனென்றால் எமக்குத் தெரிந்த விடயங்கள் அதிகமாகிக்கொண்டு இருக்கிறதே! ஆனால் இந்த இயற்கை அதற்கும் விதிவிலக்காக இருக்கறது.

ஒவ்வொரு புதிய கண்டுபிடிப்பும் எமக்குத் தெரிந்தவற்றைவிடவும் தெரியாத பல விடயங்களைக் கொண்டுவந்து கொட்டிவிட்டுப் போகிறது, அந்தவகையில் ஒரு புதிய ஆச்சரியமிக்க ஒரு கண்டுபிடிப்பே Erythropsidinium எனப்படும் ஒரு ஒருகல அங்கி. அப்படி என்ன விசேசம் இந்த அங்கியில் இருக்கிறது என்றால், இதன் கண்கள் போன்ற அமைப்பு!

ஒருகல அங்கியில் கண்களா? என நீங்கள் வியக்கலாம், தப்பில்லை, இந்த உயிரினம் முதன் முதலில் 100 வருடங்களுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்டு, அதனைக் கண்டுபிடித்த உயிரியலாளர் அதனைப் பற்றி கூறியபோது ஒருவரும் நம்பவில்லை. ஆனால் தற்போது புதிய ஆய்வுகள் இதனது கண்கள் போன்ற அமைப்பைப் பற்றி சற்றுத் தெளிவாக விளக்குகின்றன. விரிவாகப் பார்ப்போம்.

 Erythropsidinium எனப்படும் இந்த ஒருகல அங்கி, மிதவைவாழி (Planktonic) என்ற வகையில்யுள்ள dinoflagellates என்ற குழுவைச்சேர்ந்த உயிரினமாகும்.  இவை தனக்கிருக்கும் சிறிய வால் போன்ற அமைப்பைப் பயன்படுத்தி நீந்துவதுடன் பல இனங்கள் பச்சயத்தையும் கொண்டுள்ளன, ஆக தாவரங்களைப் போல அவற்றால் உணவைத் தயாரித்துக்கொள்ளமுடியும். வேறுசில இனங்கள் தங்களிடத்தே கூறிய ஊசி போன்ற அமைப்பைக் கொண்டுள்ளன, அவற்றை தனது இரை மீது பீச்சி எறிவதன் மூலம் இரையைப் பிடித்து உண்கின்றது.

படம்: Fernando Gómez/Laboratory of Plankton Systems, Oceanographic Institute, University of São Paulo
படம்: Fernando Gómez/Laboratory of Plankton Systems, Oceanographic Institute, University of São Paulo

ஆனால் இந்த Erythropsidinium வகையைச்சார்ந்த அங்கிகள் இன்னும் கொஞ்சம் பரிணாம வளர்ச்சியில் முன்னேறி, தங்களிடம் இருக்கும் துல்லியமான கண்களைக் கொண்டு இரைகளைப் பார்த்து அதனை வேட்டையாடக்கூடியன. அதுமட்டுமல்லாது, தன்னை வேட்டையாட வரும் எதிரிகளிடம் இருந்து தப்பிக்கவும் இவை உதவக்கூடும்.

இந்த ஒருகல அங்கிகளில் இருக்கும் கண்கள் போன்ற அமைப்பை, ஆய்வாளர்கள் ஓசிலோஐட் (ocelloid) என அலைகின்றனர். இது ஒரு கோளவடிவமான அமைப்பாகும், இதன் பின்புறத்தில் சற்று கரிய நிறத்தில் இருக்கும் பகுதியில் தான் ஒளி உணரப்படுகிறது என்று கருதப்படுகிறது. இங்கு ஆய்வாளர்களைக் குழப்பும் ஒரு விடயம் என்னவென்றால், மூளையோ அல்லது முன்னானோ இல்லாமல் எப்படி இந்த ஒருகல அங்கி அதன் ocelloid கண்களில் இருந்து ஒளியை உணருகிறது என்பதுதான். இந்த கண்கள் போன்ற அமைப்பு எம்மைப் போன்ற உயிரினத்தில் இருக்கும் கண்கள் போல இருந்தாலும், உண்மையிலேயே இது பரிணாம வளர்ச்சியடைந்த பச்சயம் ஆகும்.

மற்றுமொரு விடயம், ஏன் இந்தச் சிறிய ஒருகல அங்கிக்கு இப்படியான துல்லியமான கண்கள் இருக்கின்றன? வெறும் ஒளியை மட்டும் உணரவேண்டுமென்றால் இப்படியான பாரிய பகுதி ஒன்று தேவையில்லை என்பது ஆய்வாளர்களின் கணிப்பு. இந்த கண்போன்ற அமைப்பு Erythropsidinium இன் மொத்த அளவில் மூன்றில் ஒரு பங்கைப் பெறுகிறது.

இதை ஆய்வுசெய்த ஆய்வாளர்கள், இந்தக் கண்கள் போன்ற அமைப்பு வெறும் ஒளியை உணரப் பயன்படாமல், நிச்சயம் நம் கண்களைப் போல உருவங்களை உணரும் ஆற்றலையும் கொண்டிருக்கவேண்டும் என்கின்றனர். இந்த அமைப்பைப் பயன்படுத்தி இது வெற்றிகரமாக இரையை வேட்டையாடமுடியும் எனக்கருதுகின்றனர்.

எப்படியிருப்பினும், இந்த ஒருகல அங்கி எப்படியான உருவங்களை இந்தக் கண்கள் போன்ற அமைப்பைக் கொண்டு உணருகிறது என்பதைக் கடுபிடிப்பதும் அவ்வளவு சுலபமான காரியமில்லை.

இது எதைப் “பார்க்கிறது”? மற்றும் ஒருகல அங்கியில் இது எப்படி சாத்தியம் போன்ற கேள்விகளுக்கும் இனித்தான் விடைகாணவேண்டும்.


மூலம்: newscientist.com

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s