நாசாவின் கெப்லர் – பூமியைப் போலவே ஒரு கோள் கண்டுபிடிப்பு

எழுதியது: சிறி சரவணா

சூரியத்தொகுதிக்கு வெளியே இருக்கும் விண்மீன்களைச் சுற்றி இருக்கும் கோள்களைக் கண்டுபிடிப்பதற்காகவே விண்ணுக்குச் செலுத்தப்பட்ட தொலைக்காட்டித் திட்டம் “கெப்லர்”. 2009 இல் விண்ணுக்குச் சென்ற கெப்லர் இதுவரை ஆயிரக்கணக்கான புறவிண்மீன் கோள்களை (Exoplanets) கண்டறிந்துள்ளது. அதில் அதிகமானவை நமது வியாழன் போன்ற மிகப்பெரிய வாயுஅரக்கன் வகையைச் சேர்ந்த கோள்கள்.

மிகச்சொற்ப அளவான கோள்களே பூமியின் அளவுக்கு ஒப்பிடக்கூடியதாக இருந்தன. ஆனால் எதுவும் உயிர் உருவாகத் தேவையான சந்தர்ப்ப, காரணிகளை கொண்டிருந்ததாக தெரியவில்லை. ஆனால் நேற்று நாசா ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது! என்னவென்று பார்ப்போம்.

அண்ணளவாக பூமியின் அளவை ஒத்த ஒரு கோள், நம் சூரியனைப் போன்றதொரு விண்மீனை “habitable zone” எனப்படும் உயிர் உருவாகத் தேவையான காரணிகளை கொண்ட பிரதேசத்தினுள் சுற்றி வருவதை அவதானித்துள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது.

Habitable zone எனப்படும் பகுதி, ஒரு குறித்த விண்மீனில் இருந்து எவ்வளவு தொலைவில் ஒரு கோள் சுற்றினால், அதன் மேற்பரப்பில் நீர் திரவநிலையில் இருக்கும் என்ற அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. உதாரணமாக, நம் பூமி இந்த habitable zone இல் உள்ளது – இங்கு நீர் திரவநிலையில் உண்டு. அதுவே பூமியைவிட சூரியனுக்கு அருகில் இருக்கும் வெள்ளி – அங்கு வெப்பநிலை அதிகம் என்பதால், நீரெல்லாம் ஆவியாகிவிட்டது. அதேபோல பூமிக்கு அடுத்த கோளான செவ்வாய் – அங்கு போதுமானளவு சூரிய வெப்பம் கிடைக்காததால், மேற்பரப்பில் நீர் உறைந்துபோய் உள்ளது!

ஆகவே பூமி சரியான இடத்தில் சூரியனை சுற்றி வருகிறது. இதுவே habitable zone எனப்படும்!

இதைப் போலவே கெப்லர் புதிதாக கண்டறிந்த கெப்லர்-452b என்ற கோளும், அதனது விண்மீனை habitable zone இற்குள் சுற்றி வருகிறது. இதுவரை கண்டறியப்பட்ட 1030 புறவிண்மீன் கோள்களிலேயே, G2 வகை விண்மீனின் (சூரியனை ஒத்த விண்மீன்) habitable zone இல் சுற்றும் மிகச் சிறிய கோள் இந்த கெப்லர்-452b ஆகும். ஆகவே இதன் மேற்பரப்பில் நீர் திரவநிலையில் இருக்கவேண்டும்.

அண்ணளவாக பூமியில் இருந்து 1400 ஒளியாண்டுகள் தொலைவில் சிக்னஸ் என்ற விண்மீன் குழாமில் இருக்கும் ஒரு விண்மீன் கெப்லர்-452. அதைத்தான் இந்த கெப்லர்-452b சுற்றிவருகிறது.

இந்த கெப்லர்-452b கோள், நம் பூமியை விட 60% பெரியது, இதை சூப்பர்-பூமி-அளவு உள்ள கோள் என்று வகைப் படுத்துகின்றனர். அதுமட்டுமல்லாது இது தனது விண்மீனைச் சுற்றிவர 385 நாட்களை எடுத்துக்கொள்கிறது. மற்றும் பூமி சூரியனை சுற்றும் தூரத்தோடு ஒப்பிடும் போது, கெப்லர்-452b அதனது விண்மீனை, இதைவிட 5% அதிகமான தூரத்தில் சுற்றுகிறது.

452b_artistconcept_comparisonwithearth
சித்திரம்: பூமியோடு கெப்லர்452-b ஒப்பீடு; இடப்பக்கத்தில் பூமி, வலப்பக்கத்தில் கெப்லர்452-b நன்றி: நாசா

மற்றும் கெப்லர்-452b இன் தாய் விண்மீன் கெப்லர்-452 இன் வயது 6 பில்லியன் வருடங்கள். நமது சூரியனை விட 1.5 பில்லியன் வருடங்கள் அதிகம், மற்றும் சூரியனை விட அது 10 மடங்கு பெரிதும், 20 மடங்கு பிரகாசம் அதிகமானதும் ஆகும்!

இதனால் தான் நாசா கெப்லர் ஆய்வாளர்கள், இந்த கெப்லர்-452b ஐ பூமியின் ‘பெரியண்ணன்’ என்று அழைக்கின்றனர்.

கெப்லர்-452b இன் திணிவு மற்றும் அதன் கட்டமைப்பைப் பற்றி இன்னும் முழுதாக ஆய்வுகள் முடியவில்லை, ஆனாலும் நிச்சயம் பூமியைப் போல பாறையால் ஆனா கோளாகத்தான் இருக்கும் என்று ஆய்வாளர்கள் உறுதியாக நம்புகின்றனர்.

சூரியத் தொகுதியோடு மற்றைய விண்மீன் தொகுதிகள்: ஒரு ஒப்பீடு
சூரியத் தொகுதியோடு மற்றைய விண்மீன் தொகுதிகள்: ஒரு ஒப்பீடு

மேலதிக ஆய்வு முடிவுகள் வரும்வரை பொறுத்திருப்போம். ஆனால் இப்படியான கண்டுபிடிப்புக்கள், நிச்சயம் நாம் பிரபஞ்சத்தில் தனியாக இல்லை என்ற கருத்திற்கு வலுச்சேர்க்கிறது என்பது மட்டும் உண்மை.

தகவல், படங்கள்: நாசா

8 thoughts on “நாசாவின் கெப்லர் – பூமியைப் போலவே ஒரு கோள் கண்டுபிடிப்பு

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s