இலத்திரனை உண்ணும் பாக்டீரியாக்கள்

எழுதியது: சிறி சரவணா

என்னடா புதுக்கதையா இருக்கு என்று நீங்கள் சிந்திக்கலாம்! நாம் உண்ணும் உணவு நமக்கு சக்தியை தருகிறது. எல்லா உயிரினங்களும் ஏதோவொரு வகையில் சக்தியைப் பெற்றுக்கொள்கின்றன, பொதுவாக எல்லாமே உணவுதான், இறுதியில் அது சக்திதான். ஆனால் இங்கு நடைபெறுவது கொஞ்சம் விசித்திரமானது.

இந்த வகை பாக்டீரியாக்கள், சக்தியை அதனது அடிப்படை அமைப்பில் இருந்தே பெற்றுக்கொள்கிறது, அதுதான் இலத்திரன்கள் (electrons)! இவை பாறைகளில் இருந்தும் கனிமங்களில் இருந்தும் இலத்திரன்களை பிரித்தெடுத்து உண்கின்றன. ஏற்கனவே இரு வேறுபட்ட பாக்டீரியாக்களைப் பற்றி ஆய்வாளர்கள் தெரிந்து வைத்துள்ளனர். ஆனால் தற்போது உயிரியலாளர்கள் பாறைகளுக்கும், சேற்றுக்கும் சிறியளவு மின்சாராத்தை பாச்சுவதன் மூலம் இந்த பாக்டீரியாக்களை கவரமுடியும் என கண்டறிந்துள்ளனர்.

அது மட்டுமல்லாது, வெறும் மின்கல மின்சாரத்தை மட்டுமே பயன்படுத்தி, இவர்கள் இந்த பாக்டீரியாக்களை ஆய்வுகூடத்தில் வளர்த்துள்ளனர். இவை மின்சாரத்தை உண்டு, மின்சாரத்தை கழிவாகவும் வெளியேற்றுகின்றன! என்ன ஒரு விந்தை!

Geobacter  என்கிற ஒருவகை பக்டீரியா. படம்: Derek Lovley/SPL
Geobacter என்கிற ஒருவகை பக்டீரியா. படம்: Derek Lovley/SPL

இலத்திரன்களை உண்ணும் உயிரினமா என்று நீங்கள் சிந்தித்தால், இதுவொன்றும் அப்படியான பெரிய விந்தை அல்ல என்று கூறலாம், ஏனெனில் உங்கள் உடம்பும் இலத்திரன்களில் இருந்துதான் சக்தியைப் பெற்றுக்கொள்கிறது. நாம் உண்ணும் பதார்த்தங்களில், குறிப்பாக கார்போஹைட்ரேட்டில் இருக்கும் மேலதிக இலத்திரன்களை, நாம் சுவாசிக்கும் பிரானவாயுவிற்கு கடத்தப்படுகிறது. எமது கலங்கள், உணவில் இருக்கும் மூலக்கூறுகளை உடைத்து, அதில் இருக்கும் இலத்திரன்களை இலகுவாக உடலினுள் பயணிக்க வைக்கிறது. இவற்றை நாம் சுவாசிக்கும் பிராணவாயு ‘லபக்’ என்று பிடித்துக்கொள்கிறது. ஆனால் நம் உடலில் இது மிகச்சிக்கலான ஒரு செயற்பாடாக இருக்கிறது.

எமது உடலில் ATP என்ற ஒரு மூலக்கூற்றை கலங்கள் உருவாக்கின்றன, இவை பொதுவாக எல்லா உயிரினங்களிலும் சக்தியை சேமிக்கும் தொகுதியாக தொழிற்படுகிறது. இந்த ATP ஐ உருவாக்குவதில் இலத்திரனின் பங்களிப்பு மிக முக்கியம். எப்படியிருப்பினும், பொதுவாக உயிரினங்களில் இலத்திரன் தனியாக கடத்தப்படாமல், மூலக்கூறுகளாக மாற்றப்பட்டே கடத்தப்படுகின்றன.

அனால் இந்த இலத்திரனை உண்ணும் பாக்டீரியாக்கள், மூலக்கூறுகளாக இலத்திரனை மாற்றாமல், அதன் அடிப்படை அமைப்பான இலத்திரன்களாகவே இவற்றை தமது கலங்களில் பரிமாறுகின்றன. இந்த முறைமை வேறு எந்த உயிரினத்திலும் இல்லாததொன்றாகும்.

கீழே உள்ள வீடியோவில் இந்த பக்டீரியாக்கள் எப்படி மின் கம்பி போன்ற அமைப்புக்களை உருவாக்கி தங்களுக்குள் இலத்திரன்களை பரிமாற்றிக்கொள்கின்றன என்று பார்க்கலாம்.

இதுமட்டுமல்லாது இப்படியான பக்டீரியா வகைகளை ஆய்வுசெய்த உயிரியலாளர் நீல்சன், இன்னும் நமக்குத் தெரியாத, நாம் அறியாத நுண்ணுயிர் உலகம்  இருக்கிறது என்கிறார்.

இதில் இன்னுமொரு ஆச்சரியம் என்னவென்றால், இந்த வகை மின்சார பாக்டீரியாக்களை என்ன மாதிரியாக பயன்படுத்தலாம் என்றும் ஆய்வாளர்கள் ஆய்வு செய்கின்றனர்.

எப்படியோ, இந்த உலகில் இருக்கும் உயிர்ப்பல்வகைமை என்றுமே ஆச்சர்யங்கள் நிறைந்ததாக இருகின்றது!

தகவல்: newscientist

2 thoughts on “இலத்திரனை உண்ணும் பாக்டீரியாக்கள்

பின்னூட்டமொன்றை இடுக