கண்களைப் பாதுகாக்க ஒரு சாப்ட்வேர்

எழுதியது: சிறி சரவணா

கணணிப் பாவனை தற்போது அதிகரித்துவிட்டது, இரவு பகல் என்று பாராமல் எந்தநேரமும் கணணித் திரையைப் பார்க்கவேண்டிய கட்டாயம் சிலருக்கு வேலை நிமிர்த்தமாக இருக்கலாம், சிலருக்கு பொழுதுபோக்காக இருக்கலாம். ஆனால் பிரச்சினை என்னவென்றால் திரையின் அதிகூடிய வெளிச்சம் நம் கண்களைப் பாதிக்கின்றது என்பதுதான்.

2014 இல் செய்யப்பட ஒரு ஆய்வின் முடிவில் இலத்திரனியல் சாதனங்களின் திரைகள் எப்படி எமது வாழ்க்கைக்கோலத்தில் மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பதனைக் கண்டறிந்துள்ளனர். தூக்கமின்மை, கண்கள் சம்பந்தமான குறைபாடுகள், பகல் வேளையில் அதிகளவான தூக்கம் இப்படி பல்வேறு பிரச்சினைகள் இந்த இலத்திரனியல் சாதங்களின் திரைகளால் ஏற்படுகிறது. இலத்திரனியல் சாதங்கள் என்று சொல்வதற்குக் காரணம், கணணி மட்டும் இங்கு பிரச்சினைக்குரிய சாதனம் அல்ல… இன்று ஸ்மார்ட்போன் (smartphones – android, iPhone), டாப் (tabs) போன்றவற்றின் பாவனையும் இங்கு கருதப்படுகின்றன.

இரவில் இலத்திரனியல் சாதனங்களில் வாசிப்பை மேற்கொள்ளும் சாதாரண ஒருவருக்கு, அண்ணளவாக ஒரு மணி நேரம்வரை தூக்கம் தள்ளிப்போகிறது என்று ஆய்வுகள் சொல்கின்றன. இதனால் பகல்வேளையில் அவர் பல்வேறு மறைமுகமான பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க வேண்டிவருகிறது.

முக்கிய விடயம் என்னவென்றால், நீங்கள் பயன்படுத்தும் இலத்திரனியல் சாதனங்களில் உள்ள திரைகள், பகல்வேளையில் இருக்கும் சூரிய வெளிச்சத்திற்கு ஏற்றவாறு தயாரிக்கப்பட்டுள்ளது. அது அதிகளவான நீலம் சார்ந்த ஒளியை வெளியிடுகிறது. பகல்வேளையில் இதனால் எந்தப்பிரச்சினையும் வருவதில்லை, ஆனால் இரவில், நீங்கள் மின்குமிழ்கள் மூலம் உருவாக்கும் வெளிச்சத்தில் பயன்படுத்தும் போது, பிரச்சினை ஆரம்பமாகிறது.

இரவு வெளிச்சம், அதாவது நீங்கள் மின்குமிழ்களைப் பயன்படுத்தி உருவாக்கிக்கொள்ளும் வெளிச்சம் சூரியவெளிச்சம் போன்றதன்று. ஆகவே அதற்கு ஏற்றவாறு உங்கள் சாதனங்களின் திரையின் வெளிச்சமும் சமப்படுத்தப்படவேண்டும். இல்லையேல் அதிகூடிய வெளிச்சத்தின் காரணமாக மேற்குறிப்பிட்ட தூக்கமின்மை, தலையிடி போன்ற நிலைமைகள் உங்களுக்கு ஏற்படலாம்… நீண்ட காலத்தில் அது பாரிய பிரச்சினையாக உருவெடுக்கவும்கூடும்.

இந்தப்பிரசினைகளைத் தவிர்ப்பதற்காகவே உருவாக்கப்பட்ட இலவச மென்பொருள் தான் f.lux எனப்படும் மென்பொருள். இது தன்னிச்சையாக செயல்ப்பட்டு, உங்கள் அறையில் இருக்கும் வெளிச்சத்தோடு ஒப்பிட்டு உங்கள் திரையின் நிறம் மற்றும் ஒளியைக் கட்டுப்படுத்துகிறது. இதன் மூலம் உங்கள் கணனியின் திரை பகல்வேளையில் எப்படி உங்களுக்குத் தெரிந்ததோ, அதேபோல இரவு வேளையிலும் உங்களுக்குத் தெரிவதால், கண்கள் நீலநிற ஒளியை இரவில் உள்ளெடுத்துக்கொள்ளும் அளவு குறைவடைகிறது.

2015-08-24_204539

நீங்கள் செய்யவேண்டியது ஒன்று உண்டு, இரவில் நீங்கள் வேறுபட்ட வகையான மின்குமிழ்களைப் பயன்படுத்தலாம், ஒவ்வொரும் ஒவ்வொரு வகையாக ஒளியைக் கொடுக்கும். அதற்கேற்ப f.lux மென்பொருளில் இரவுநேர ஒளிமுதலை தெரிவு செய்வதன் மூலம் திரைக்கு சரியான நிறம் மற்றும் ஒளியின் அளவை f.lux மாற்றியமைக்க உதவும்.

  1. நீங்கள் பழையவகை மின்குமிழ்களைப் பயன்படுத்தினால், அதாவது மஞ்சள் நிற ஒளிவிடும் “குண்டுபல்புகள்” என அழைக்கப்படும் மின்குமிழ்களைப் பயன்படுத்தினால், “Light at night” என்னும் செட்டிங்கில் “2700k: incandescent” என்பதை தெரிவுசெய்யுங்கள்.
  2. ஹலோஜன் விளக்குக்களைப் பயன்படுத்தினால் – உதாரணமாக தெருவிளக்குகள் இந்தவகைதான், வீடுகளில் பெரிதும் பயன்படுவதில்லை, ஆனால் தொழிற்சாலைகளில் பயன்படும், அப்படியான விளக்குகளுக்கு, “Light at night” என்பதில் “3400k: Halogen” என்பதனைத் தெரிவு செய்யுங்கள்.
  3. புதியவகை ப்லோரசன்ட் விளக்குகளைப் பயன்படுத்தினால், “டியுப்பல்ப்பு” எனப்படும் விளக்குகள், மின்சேமிக்கும் குமிழ்கள், மற்றும் எல்.ஈ.டி வகை குமிழ்களைப் பயன்படுத்தினால், உங்களுக்கே தெரிந்திருக்கும், அவை நீலநிற ஒளியை வெளிவிடுவன. “Light at night” என்பதில், “4200k: Florescent” என்பதனை தெரிவுசெய்துகொள்ளவும்.

அவ்வளவுதான், இனி உங்கள் கணணித்திரை குறித்த தினத்தின் நேரத்திற்கு ஏற்றவாறு நிறத்தை மாற்றிக்கொண்டு உங்கள் கண்களுக்குப் பாதுகாப்பளிக்கும்.

உங்கள் கணணி இணையத்தில் இணைக்கப்பட்டிருந்தால், இந்த f.lux மென்பொருள் உங்கள் அமைவிடம் மற்றும் சூரியன் உதிக்கும் மற்றும் மறையும் நேரம் ஆகியவற்றைக் கூட இணையத்தில் இருந்து டவுன்லோட் செய்து, அதற்கேற்றாப்போல கணணித் திரையை மாற்றிக்கொள்ளும்.

f.lux மென்பொருள் பல்வேறுபட்ட இயங்குமுறைமைகளுக்கும் கிடைக்கிறது என்பது கூடுதல் நன்மை. விண்டோஸ் இயங்குமுறைமையில் அழகாக இயங்குகிறது.

டவுன்லோட் செய்ய பின்வரும் லிங்கை கிளிக் செய்யவும்: justgetflux.com

மேலதிக குறிப்பு: இரவு வேளையில் எல்லா விளக்குகளையும் அணைத்தபின்னரும் டாப், ஸ்மார்ட்போன் மற்றும் கணணிகளில் வாசிப்பதையோ அல்லது வேலைசெய்வதயோ கைவிடுங்கள். இது உங்களுக்கு தலையிடி, கவனக்குறைவு, தூக்கமின்மை, மேலும் கோபம், பகல்வேளையில் சோம்பல் போன்றவற்றை ஏற்ப்படுத்தலாம்.

கவனம் தேவை மக்களே!

5 thoughts on “கண்களைப் பாதுகாக்க ஒரு சாப்ட்வேர்

    1. பல வருடங்களாக நான் இந்த மென்பொருளைப் பயன்படுத்திவருகிறேன்… ஏன் இதனைப் பகிரக்கூடாது என்ற சிந்தனை வரவே, அதனை எழுதிவிட்டேன்… உங்களுக்குப் பயன்பட்டால் எனக்கு மகிழ்ச்சியே…

      Liked by 2 people

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s