செவ்வாயின் வளிமண்டலத்திற்கு நடந்தது என்ன?

நமக்குத் தெரிந்தவரை செவ்வாய் ஒரு உறைந்துபோன பாலைவனக் கோள். கடந்த ஐம்பது வருடங்களுக்கு மேலாக, செய்மதிகள் தொடக்கம் தளவுலவிகள் மற்றும் தரையிரங்கிகள் மூலம் ஆய்வுசெயதவரை செவ்வாய் ஒரு காய்ந்துபோன குளிரான ஒரு இறந்த கோள் என்பது நமக்குத்தெரியும். ஆனால் செவ்வாய்க்கு என்ன நடந்தது என்பது ஒரு புதிராகவே இருந்தது. அதன் வளிமண்டலத்திற்கும், முழுக்கோளின் மேற்பரப்புக் கட்டமைப்பிற்கும் என்ன நடந்திருக்கலாம் என்று பல்வேறு கருத்துக்களை விஞ்ஞானிகள் முன்வைத்தனர்.

தற்போது நாசாவின் MAVEN விண்கலம் ஆறு மாதங்களாக சேகரித்த தகவல்களைக் கொண்டு இந்தப் புதிரின் ஒரு பகுதிக்குத் தெளிவான விடை கிடைத்துள்ளது. அதாவது, செவ்வாயில் இருந்த வளிமண்டலம், சூரியப்புயல் காரணமாக சிதறடிக்கப்பட்டுள்ளது!

படம்: NASA/GSFC
படம்: NASA/GSFC

பல பில்லியன் வருடங்களுக்கு முன்னர் ஏற்பட்ட பாரிய சூரியப்புயல்கள் காரணமாக, செவ்வாயின் மேற்பரப்பில் இருந்த காபனீர் ஆக்ஸைடு மற்றும் ஆக்ஸிஜன் ஆகிய வாயுக்கள் பெருமளவில் விண்வெளியில் சிதறடிக்கப்பட்டுள்ளது. தற்போது செவ்வாய் செக்கனுக்கு 100 கிராம் அளவு தனது வளிமண்டலத்தை இழந்துகொண்டு வருகிறபோதிலும், சில பில்லியன் வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற பாரிய சூரியப்புயல்கள், தற்போது இழப்பதைவிட அண்ணளவாக 100 தொடக்கம் 1000 மடங்கு அதிகமாக வளிமண்டலம் செவ்வாயைவிட்டு சிதறக் காரணமாக இருந்துள்ளது.

ஒரு காலகட்டத்தில் செவ்வாயும் பூமியைப்போலவே ஒரு அடத்தியான வளிமண்டலத்தைக் கொண்டிருந்தது. அதற்குக்காரணம் பூமியைப் போலவே செவ்வாய்க்கும் சக்திவாந்த காந்தப்புலம் இருந்தது. ஆனால் பூமியை விடச் சிறிய செவ்வாய், வேகமாக குளிர்வடைந்துவிட்டதால், அதன் காந்தப் புலம் கொஞ்சம் கொஞ்சமாக இழக்கப்பட அதன் வளிமண்டலத்தைக் காப்பாற்றக்கூடிய சக்தியை செவ்வாய் இழந்துவிட்டது எனலாம். அண்ணளவாக 4.2 பில்லியன் வருடங்களுக்கு முன்னர் செவ்வாய் தனது காந்தப்புலத்தை இழந்தது. அதன் பின்னர் வந்த சில பல மில்லியன் வருடங்களில் சூரியனது சக்திவாந்த சூரியப்புயல்கள், செவ்வாயின் வளிமண்டலத்தில் இருந்த அணுக்களை கொஞ்சம் கொஞ்சமாக விண்வெளிக்குக் கடத்திக்கொண்டு சென்றுவிட்டது.

அடர்த்தியான வளிமண்டலம் செவ்வாய்க்கு இருந்த காலத்தில் அதன் வளிமண்டல அமுக்கம் 1000 மில்லிபார் வரை இருந்துள்ளது, இது தற்போதைய பூமியின் வளிமண்டல அமுக்கத்தின் அளவு. அதன் பின்னர் வந்த சூரியப் புயல் காலத்தில், செவ்வாயில் இருந்த ஏரிகள், குளங்கள் மற்றும் ஆறுகள், குளிரால் உறைந்துவிட்டிருக்கவேண்டும், மற்றும் சில ஆவியாகி வளிமண்டலத்தோடு செவ்வாயை விட்டு அகன்றிருக்கவேண்டும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அந்தக் காலகட்டத்தில் உயிரினங்கள் இருந்திருந்தால், அது ஒரு பாரிய துர்ப்பாக்கியநிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும். ஆக 4 பில்லியன் வருடங்களுக்குப் பிறகு தற்போது செவ்வாயின் வளிமண்டல அமுக்கம் வெறும் 6 மில்லிபார்கள் மட்டுமே.

இந்த MAVEN தகவலுக்கு முன்னர், செவ்வாயின் வளிமண்டலம் மறைந்தது எப்படி என்று ஆய்வாளர்கள் பல்வேறு கோட்பாடுகளைக் கொண்டிருந்தனர். பெரும்பாலும் சூரியப் புயலே காரணம் என்று கருதினாலும், பாரிய விண்கல் செவ்வாயில் விழுந்து ஏற்படுத்திய அதிர்வு காரணமாக செவ்வாயின் வளிமண்டலம் மற்றும் அதன் நீர்ப் பரப்பு என்பன விண்வெளியில் சிதறடிக்கப்பட்டிருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் கருதினர். சிலர் செவ்வாயின் பாறைகள் அதிகளவான காபனீர் ஆக்ஸைடு மற்றும் ஆக்ஸிஜன் ஆகிய வாயுக்களை சிறைபிடித்திருக்கலாம் என்றும் கருதினர்.

2014 இல் செவ்வாயைச் சுற்றத் தொடங்கிய MAVEN விண்கலம் சேகரித்த தகவல்கள், துல்லியமாக மற்றும் நிச்சயமாக சூரியப்புயலே செவ்வாயின் வளிமண்டல இழப்பிற்குக் காரணம் எனக் கூறுகிறது.

சூரியப் புயலில் இருந்து வரும் ப்ரோடான் மற்றும் ஏலேக்ட்ரோன் துணிக்கைகள், செவ்வாயின் மேல்-வளிமண்டலத்தில் உள்ள அயன் துணிக்கைகளை விடுபடு-திசைவேகம் (escape velocity) அளவிற்கு முடுக்கிவிடுவதால், அந்தத் துணிக்கைகள், செவ்வாயை விட்டு நிரந்தரமாக சென்றுவிட்டன.

சூரியத் தொகுதி உருவாகிய காலப்பகுதியில் சூரியனில் இருந்து வெளிப்பட்ட சூரியப் புயல்கள் தற்போதைய சூரியப் புயல்களை விட மிகச் சக்திவாய்ந்ததாகக் காணப்பட்டது. ஆகவே அக்காலத்தில் செவ்வாயின் மேற்பரப்பில் இருந்து இலகுவாக வளிமண்டலத்தை அச் சூரியப் புயல்களால் சிதறடிக்கமுடிந்திருக்கும்.

தற்போது செவ்வாய் இழந்துவரும் வளிமண்டலத்தின் அளவைக் கணக்கில் எடுத்தால், மொத்தமாக அதன் வளிமண்டலம் மறைவதற்கு அடுத்த இரண்டு பில்லியன் வருடங்களாவது எடுக்கும் என்பது ஆவாலர்களின் கணிப்பு.

நாசா, ESA மற்றும் ரஷ்சிய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் என்பன செவ்வாய்க்கு மனிதர்களை அனுப்புவதில் ஆர்வமாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.


மேலும் பல அறிவியல் தகவல்களுக்கு, பரிமாணத்தின் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள். தொடர்ந்து இணைந்து இருங்கள்.

https://www.facebook.com/parimaanam

5 thoughts on “செவ்வாயின் வளிமண்டலத்திற்கு நடந்தது என்ன?

  1. அதற்கான காரணத்தை கட்டுரையிலேயே கூறியுள்ளேன். அதாவது பூமிக்கு காந்தப் புலம் உண்டு, இந்த காந்தப்புலமே பூமியை நோக்கி வரும் சூரியப்புயலில் இருந்து பூமியைப் பாதுகாக்கிறது. ஆனால் செவ்வாய்க்கு காந்தபுலம் அண்ணளவாக 4.2 பில்லியன் வருடங்களுக்கு முன்னர் இல்லாமல் போய்விட்டது. காரணம் அதன் அகப்பகுதி திண்மமாகி விட்டதேயாகும். பூமியின் அகப்பகுதியில் இருக்கும் நிக்கல்+இரும்பு திரவ நிலையில் இருப்பதால், பூமி சுழலும் போது, ஒரு டைனமோ எப்படி செயற்ப்படுமோ அதனைப் போல செயற்படுகிறது. ஆனால் செவ்வாயில் அகப்பகுதியில் இருக்கும் பகுதி திண்மமாகி விட்டது. செவ்வாய் பூமியை விட சிறிது என்பதும் குறிப்பிடத்தக்கது.

   Like

  1. செவ்வாய் உருக்குலைந்தது என்று கூறமுடியாது. இந்தக் கட்டுரையில் அதில் இருந்த வளிமண்டலம் சிதைக்கப்பட்டது என்பதைப் பற்றியே இங்கு கூறியிருக்கிறேன். பூமியிலும் அதேபோல நடக்குமா என்றால் ஆம்!

   நம் சூரியன் இன்னும் 5 பில்லியன் வருடங்களுக்கு தனது எரிபொருளை எரிக்கும், அதன் பின்னர் அதுவொரு சிவப்பு அரக்கன் என்கிற நிலைக்கு வரும், அதாவது இப்போது இருக்கும் சூரியனை விட பல நூறு மடங்கு பெரிதாகப் பெருத்துவிடும்.

   அப்போது பூமியின் சுற்றுப் பாதையே சூரியனுக்குள் தான் இருக்கும். அப்படிஎன்றால் சூரியன் பூமியை அழித்துவிடும். இப்படி அது பெருத்துக்கொண்டு வரும் போது, பூமியின் மேற்பரப்பில் உள்ள வளிமண்டலம், ஏன், கடலே ஆவியாகிவிடும்! அதன் பின்னர் எல்லாம் அழிவுதான்!
   ஆனால் அதற்கு இன்னும் பல பில்லியன் வருடங்கள் இருக்கின்றன.

   இதனை எப்படித் தடுக்கலாம், மற்றும் என்னவெலாம் ஆகக்கூடும் என்று வேறு கட்டுரைகளில் இங்கே பாத்துள்ளோம். அதன் இணைப்புக்களை இங்கு தருகிறேன், வாசித்துப் பாருங்கள்.
   நன்றி,
   சரவணா

   https://parimaanam.wordpress.com/science-series/extraterrestrial-civilizations/

   https://parimaanam.wordpress.com/2015/11/19/glowing-halo-of-a-zombie-star/

   Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s