அளவுக்கதிகமான புகழுக்கும் ஒரு விலை இருக்கிறது என்று கூறுவது வழமை, ஆனால் அப்படிப் புகழுக்காக இந்தப் படத்தில் இருக்கும் விண்மீன் பேரடை கொடுத்த விலை மிகவும் அதிகம். பிரபஞ்சத்திலேயே மிகவும் பிரகாசமான விண்மீன் பேரடை என்னும் பெயரைப் பெறுவதற்காக இது தன்னைத்தானே அழித்துக் கொண்டிருக்கிறது!

இந்தப் படம் ஒரு ஓவியரால் வரையப்பட்டது. பிரபஞ்சத்திலேயே மிகவும் பிரகாசமான விண்மீன் பேரடை என்கிற பட்டத்திற்கு சொந்தமான இந்த விண்மீன் பேரடையை மிகவும் அருகில் காட்டும் படமிது. நமது பால்வீதியை விட ஆயிரம் மடங்கு பெரிய விண்மீன் பேரடையான இதனை எம்மால் அதி சக்திவாந்த தொளிநோக்கிகள் மூலமும் தெளிவாகப் படம் பிடிக்க முடியாததற்குக் காரணம் இது இங்கிருந்து 12 பில்லியன் ஒளியாண்டுகளுக்கு அப்பால் இருப்பதனாலாகும்.
விண்வெளியைப் பொறுத்தவரை அங்கு ஒரு சட்டம் உண்டு. ஒரு பொருள் எவ்வளவு பிரகாசமாக இருக்கிறதோ, அதே அளவு அது உக்கிரமாகவும், சக்திவாந்ததாகவும் இருக்கும். எம்மை வியப்பூட்டும் விண்வெளிப் பொருட்களான வெடிக்கும் விண்மீன்கள், ஒன்றுடன் ஒன்று மோதும் விண்மீன்கள் அல்லது இந்தப் படத்தில் உள்ளது போன்று வெடித்துச் சிதறும் விண்மீன் பேரடைகள் அண்ணளவாக 350 ட்ரில்லியன் சூரியன்கள் ஒன்றாக இருந்தால் எவ்வளவு வெளிச்சம் வருமோ அந்தளவு பிரகாசமாக இருக்கும்!
இந்தப் படத்தில் இருப்பது குவாசார் எனப்படும் ஒரு வகையான விண்மீன் பேரடையாகும். குவாசாரின் மத்தியில் மிகப்பாரிய கருந்துளை ஒன்று காணப்படும். அது ஒரு மணித்தியாலத்திற்கு இரண்டு மில்லியன் கிமீ வேகத்தில் துணிக்கைகளையும் அளவுக்கதிகமான ஒளியையும் விண்வெளியில் சிதறடிகிறது.
இப்படி அளவுக்கதிகமான சக்தி வெளியேற்றம் இந்த விண்மீன் பேரடையை பிரபஞ்சத்தின் ஒரு முக்கிய புள்ளியாக மாற்றினாலும், இந்தச் செயற்பாடு, இந்த விண்மீன் பேரடையின் வாழ்வுக்காலத்தை வெகுவாகக் குறைத்துள்ளது எனலாம். புதிய விண்மீன்கள் உருவாகத் தேவையான அனைத்து வாயுக்களையும் இது மிகவேகமாக விண்மீன் பேரடையில் இருந்து வெளியேற்றுகிறது!
மேலும் ஒரு தகவல்
பொதுவாக குவாசார்கள் மிகப் பிரகாசமாக இருக்கும், ஆனால் சொற்ப அளவானவை அதிகளவு தூசுகளுடன் காணப்படும். இவற்றை நாம் Hot DOGS என அழைக்கின்றோம். Hot DOGS என்பது Hot, Dust-Obscured Galaxies என்பதன் சுருக்கம். (வெப்பமான, தூசுகளால் மறைக்கப்பட்ட விண்மீன் பேரடைகள் எனப்படும்)
இந்தக் கட்டுரையின் ஆங்கிலப் பிரதி unawe.org தளத்தில் இருக்கிறது. அதனை பின்வரும் லிங்கை கிளிக்குவதன் மூலம் வாசிக்கலாம்.
http://unawe.org/kids/unawe1603/
மேலும் பல அறிவியல் தகவல்களுக்கு, பரிமாணத்தின் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள். தொடர்ந்து இணைந்து இருங்கள்.
தலைவரே .. ஒரு கேள்வி
இந்த பிரபஞ்சத்திற்கு எல்லையே கிடையாதா ?
எல்லையே இல்லாத ஒரு இடத்தை கற்பனையே பண்ணி பார்க்க முடியவில்லையே ?
இந்த பிரபஞ்சம் ஒரு பலூனை போல விரிவடைந்து கொண்டே செல்வதாக வைத்து கொண்டால் ,, அந்த பலூணிற்கு வெளியே உள்ள இடத்தின் எல்லை என்ன ?
ஒண்ணுமே புரிய மாட்டேங்குதே தலைவரே ??
ரொம்ப வருசமா இந்த வினாவிற்கு அவனவன் சொல்ற பதிலெல்லாம் கொஞ்சம் கூட புரிய மாட்டேங்குது..
இல்ல இந்த கேள்வியை வேற எப்படி கேக்குற துன்னே தெரியலையே ?
புரியுதா தலைவா ??
LikeLiked by 1 person
நீங்கள் கேட்கும் கேள்வி புரிகிறது. பலர் என்னிடம் கேட்ட கேள்வி, நான் எனது ஆசிரியரிடம் சிறுவனாக இருந்தபோது கேட்ட கேள்வி. பதில் சொல்வது இலகுதான் ஆனால் அதனை கொஞ்சம் தெளிவாக விளங்கிக்கொள்ள பிரபஞ்சம் பற்றிய கொஞ்சம் அறிவும் அவசியம். சரி காரணத்தைச் சொல்கிறேன்.
முதலில் பிரபஞ்சம் பலூன் போல விரிவடையவில்லை. விவரணப்படங்களிலும், புத்தகங்களிலும் இப்படி பலூன் போல விரிவடைவதாக சொல்வது கொஞ்சம் இலகுவாக விளக்கவே தவிர, உண்மை கொஞ்சம் விசித்திரமானது.
பலூன் விரிவடைகிறது என்றால் அதற்கு வெளியே “வெளி” உண்டு அல்லவா? அதனில் தான் பலூன் விரிவடைகிறது. அப்படியென்றால் பலூன் விரிவடைய அதனைச் சுற்றி இருக்கும் வெளியின் அளவு குறையும் அல்லவா? பலூன் பிடிக்கவில்லை என்றால், ஒரு தொட்டியில் நீரை நிரப்புவதை நினைத்துக்கொள்ளுங்கள். அங்கு வெளி ஏற்கனவே இருக்கிறது. அதனில் தான் பலூனோ, அல்லது நீரோ நிரம்புகிறது.
ஆனால் பிரபஞ்சம் இப்படியாக விரியவில்லை. பிரபஞ்சம் விரிவடைகிறது தான், ஆனால் “வெளி” என்பதே பிரபஞ்சத்தின் ஒரு அம்சமாகும். ஆகவே “பிரபஞ்சத்திற்கு வெளியே” என்று கூறுவதே பிழையானது.
இதனை எப்படி விளக்கலாம் என்றால், இனிப்பு கசக்கும் என்று கூறுவதைப் போல! இப்படிக் கூறுவது முரணானது, ஏனென்றால் இனிக்கும் என்பதால் தான் அதற்கு இனிப்பு என்று பெயர். ஆகவே இனிப்பு சுவையைத் தருவதைத் தவிர வேறு ஒன்றுக்கும் நாம் இனிப்பு என்று கூறல் ஆகாது.
பிரபஞ்சத்திற்கு வெளியே என்பதும் இதனைப் போல ஒரு முரனான ஒரு கருத்து ஆகும். வெளி என்பதே பிரபஞ்சத்தின் ஒரு அம்சம், ஆகவே பிரபஞ்சத்தின் வெளியே என்று ஒன்றும் இல்லை. இதனைக் கற்பனை பண்ணிப் பார்க்க முடியாமல் இருக்கலாம் காரணம் எமது அன்றாட வாழ்வில் நாம் சந்திக்காத இயற்பியல் விடயங்கள் இவை. ஆகவே கொஞ்சம் கஷ்டம் தான்.
இதனைப் பற்றி இன்னும் தெளிவாக விளங்கிக்கொள்ள எனது மற்றைய சில கட்டுரைகளையும் வாசித்துப் பாருங்களேன். அதன் பின்னர் வரும் சந்தேகங்களை கேட்கலாம்.
https://parimaanam.wordpress.com/2015/03/09/understanding-cosmos/
https://parimaanam.wordpress.com/2015/01/11/light-universal-cop/
LikeLike
நன்றி
LikeLike