ஸ்னோ வைட்டும் ஐந்தாவது குள்ளனும்

‘ஸ்னோ வைட்டும் ஏழு குள்ளர்களும்’ கதையை நீங்கள் குழந்தைப் பருவத்தில் கேள்விப்பட்டு இருப்பீர்கள் அல்லவா? அந்தக் கதையில் வரும் குள்ளர்களைப் போலவே நமது சூரியனுக்கும் ஐந்து குள்ளர்கள் உண்டு – அதாவது குறள்கோள்கள் என அழைக்கப்படும் இவை முறையே, சீரிஸ், ஈரிஸ், மேக்மேக், ஹோவ்மீயா மற்றும் புளுட்டோ ஆகும்.

இந்த ஐந்து குறள்கோள்களில் நான்கு, சூரியத்தொகுதியின் எல்லையில், நெப்டியூன் கோளிற்கு அப்பால் காணப்படுகின்றன.

ஆனால் ஐந்தாவது கோள், செவ்வாய்க்கும் வியாழனுக்கும் இடையில் உள்ள பிரதேசமான ‘சிறுகோள் பட்டி’ (asteroid belt) எனப்படும் பகுதியில் காணப்படுகிறது.  இந்தக் குறள்கோள், சீரிஸ் என அழைக்கப்படுகிறது. அதனது படத்தினை நீங்கள் கீழே காணலாம்.

eso1609a
சீரிஸ் குறள்கோளின் வரையப்பட்ட படம்; படத்தில் பிரகாசமான புள்ளி தெரிகிறது. பட உதவி: ESO/L.Calçada/NASA/JPL-Caltech/UCLA/MPS/DLR/IDA/Steve Albers/N. Risinge

சீரிஸின் மேற்பரப்பில் பனி போன்ற அமைப்பில் இருக்கும் சிறு பகுதி உங்களுக்குத் தெரிகிறதா? இந்தப் பிரதேசம் விஞ்ஞானிகளை கடந்த சில வருடங்களாக குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதனை ஆய்வு செய்வதற்கு என்றே, நாசா 2007 இல் DAWN என்னும் விண்கலத்தை சீரிஸ் நோக்கி அனுப்பி வைத்தது. கடந்த வருடம், DAWN சீரிஸை சென்றடைந்து இந்தப் பிரதேசத்தை ஆய்வுசெய்து கொண்டிருக்கிறது. ஆனாலும் இந்தப் பனி போன்ற வெள்ளைப் பிரதேசங்கள் என்ன என்று இதுவரை யாராலும் கணிக்க முடியவில்லை.

இதனைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்? இந்தப் பிரகாசமான புள்ளிகள் பனியால் உருவகியிருக்குமா? இல்லை பாறைகளா? உப்புக்களா? எப்படி இது உருவாகியிருக்கலாம்? எரிமலை மூலம்? அல்லது வெந்நீர் ஊற்றுக்கள் மூலம்? கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்து நீங்கள் என்ன நினைகின்றீர்கள் என்று உங்கள் வாக்கினைப் பதிவு செய்யமுடியும்.

www.jpl.nasa.gov/dawn/world_ceres/

ஆனால், பதிவு செய்யமுதல் உங்களுக்காக ஒரு துப்பு இதோ: இந்தப் பிரகாசமான புள்ளிகள் சீரிஸின் மேற்பரப்பில் மாறி மாறித் தோன்றுகின்றன!

பாலைவனத்தில் இருக்கும் சிறு நீர்த் தேக்கம் வெப்பத்தால் ஆவியாவதைப்போல ஒவ்வொரு நாளும் இந்த விசித்திரமான வெள்ளைப்பொருள் சூரிய ஒளியில் ஆவியாகின்றது. இதில் ஆச்சரியமான விடையம் என்னவென்றால், மீண்டும் மீண்டும் இந்த விசித்திரப் பொருள் சீரிஸின் மேற்பரப்பில் தோன்றுகிறது – மேற்பரப்புக்குக் கீழே நிச்சயம் வியப்பூட்டக்கூடிய விடயங்கள் இடம்பெறுகின்றன, இவை இந்த விசித்திரப் பொருளை வெளியில் தள்ளுகின்றன.

மற்றைய சிறுகோள்களை விட, சீரிசிற்கும் பூமிக்கும் மிக நெருங்கிய ஒற்றுமைகள் உண்டு. இந்தக் குறள்கோளில் பூமியைவிடக் கூடிய அளவு நன்னீர் இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்! ஆனாலும் பூமியைப் போலல்லாமல் சீரிஸில் இருக்கும் நீர், அதன் மேற்பரப்பிற்கு கீழே உறைந்த நிலையில் இருக்கலாம்.

இந்தக் குறள்கோளின் உட்பகுதி செயற்பட்டுக்கொண்டிருக்கும் என்றால், சிறுகோள் பட்டியில் இருக்கும் மற்றைய சிறுகோள்களைவிட, இது வேறுபட்டுக்காணப்படும் என்பது உறுதி. மேற்கொண்டு ஆய்வுகளின் முடிவுகளுக்காக காத்திருப்போம்.

மேலதிகத் தகவல்

முதன் முதலில் கண்டறியப்பட்ட போது, சீரிஸ் ஒரு கோள் என்றே கருதப்பட்டது. ஆனால் புளுட்டோவைப் போல, இது குறள்கொள் என்று பின்னர் மாற்றப்பட்டது.


இந்தக் கட்டுரையின் ஆங்கிலப் பிரதி unawe.org தளத்தில் இருக்கிறது. அதனை பின்வரும் லிங்கை கிளிக்குவதன் மூலம் வாசிக்கலாம்.

http://www.unawe.org/kids/unawe1607/


மேலும் பல அறிவியல் தகவல்களுக்கு, பரிமாணத்தின் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் :-https://web.facebook.com/parimaanam

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s