இளம் விண்மீனைச் சுற்றி உருவாகும் குழந்தைக் கோள்கள்

கருவில் இருந்து குழந்தை ஒன்று வளர ஒன்பது மாதங்கள் எடுக்கின்றது, அதேபோல ஒரு யானைக் குட்டி வளர 22 மாதங்கள் எடுக்கும்… இதைப் போல ஒரு கோள் வளர்வதற்கு எவ்வளவு காலம் எடுக்கும்? இதுவரை நாம் எவ்வளவு காலம் எடுக்கும் என்று எண்ணியிருந்தோமோ அதனைவிடக் குறைவான காலமே ஒரு கோள் வளர்வதற்கு எடுக்கிறது!

ஒரு கோள் உருவாவதற்கு பல மில்லியன் வருடங்கள் எடுக்கலாம் என்று முன்பு நாம் கருதினோம், ஆனால் தற்போது வெறும் ஒரு மில்லியன் வயதேயான விண்மீனைச் சுற்றி கோள்கள் உருவாகியிருப்பதை கண்டறிந்துள்ளோம்!

ALMA_HLTauri

 

மேலே உள்ளபடத்தில் இளமையான விண்மீனைச் சுற்றி வாயுக்களாலும் தூசாலும் ஆனதட்டுப் போன்ற அமைப்பை பார்க்கலாம். இது “முதனிலை-கோள்கள் தட்டு” (proto-planetary disk) என அழைக்கப்படும். இப்படியான வாயுவாலான தட்டுக்கள் புதிதாக பிறந்த விண்மீனைச் சுற்றிக் காணப்படுவது வழமைதான். இவை கோள்களையும் துணைக் கோள்களையும் உருவாக்கத் தேவையான அனைத்து மூலப் பொருட்களையும் கொண்டுள்ளன.

2014 இல் விஞ்ஞானிகள், ஒரு இளம் விண்மீனைச் சுற்றியிருக்கும் முதனிலை-கோள்கள் தட்டில் இரண்டு பெரிய இடைவெளிகள் இருப்பதைக் கண்டறிந்தனர். படத்தில் புள்ளியிடப்பட்ட கோட்டினால் இந்த இரண்டு இடைவெளிகளும் காட்டப்பட்டுள்ளன.

ஆனால் 2014 இல் இந்த இடைவெளிக்கு காரணம் என்னவாக இருக்கும் என்று ஒருவருக்கும் தெரியவில்லை. சிலர் இதற்குக் காரணம் புதிதாகப் பிறந்த கோள்களாக இருக்கலாம் என்று கருதினர். புதிதாக பிறந்த கோள் ஒன்று வளரும் போது, அது தனக்கு அருகில் இருக்கும் தூசுகளையும் வாயுக்களையும் சேகரித்துக்கொள்ளும். அதானால் அது விண்மீனைச் சுற்றிவரும் பாதையில் உள்ள முதனிலை-கோள்கள் தட்டில் இடைவெளி உருவாகும்.

ஆனாலும், பலர் இந்த இடைவெளிக்கு காரணம் கோளாக இருக்க முடியாது என்றே கருதினர், அதற்குக் காரணம் குறித்த விண்மீன் கோள்களைக் கொண்டிருப்பதற்கு போதியளவு வயதானதல்ல என்பதாகும். ஆகவே இந்தப் புதிரை தீர்ப்பதற்கு மேலும் தரவுகள் திரட்டப்படவேண்டியது அவசியம்.

அதனால், கடந்த இரண்டு வருடங்களாக விஞ்ஞானிகள் இந்த விண்மீனையும் அதனைச் சுற்றியுள்ள தட்டையும் தொடர்ந்து படம் பிடித்து ஆய்வுகளை மேற்கொண்டனர். பலரும் ஆச்சரியப்படும் வகையில் இந்த இடைவெளிக்குக் காரணம் புதிதாகப் பிறந்த கோள்களே என்பது உறுதியாகியது.

ஆனால் இந்தப் புதிருக்கு விடைகான, அதிலிருந்து இன்னொரு புதிரும் தோன்றியுள்ளது. அதாவது, எப்படி இவ்வளவு இளமையான விண்மீனைச் சுற்றி கோள்கள் உருவாகலாம் என்பதே அந்தப் புதிராகும்! இனி அந்தப்  புதிருக்கான விடையைக் காண விண்வெளியை நோக்கி ஆய்வுகள் தொடரும்.

மேலதிகத் தகவல்

குறித்த விண்மீனின் முதனிலை-கோள்கள் தட்டில் இருக்கும் முதலாவது இடைவெளி, அண்ணளவாக சூரியனுக்கும் புளுட்டோவிற்கும் இருக்கும் தொலைவாகும். இரண்டாவது இடைவெளி அதனைப் போல இரண்டு மடங்கு தொலைவில் இருக்கிறது!


இந்தக் கட்டுரையின் ஆங்கிலப் பிரதி unawe.org தளத்தில் இருக்கிறது. அதனை பின்வரும் லிங்கை கிளிக்குவதன் மூலம் வாசிக்கலாம்.

http://www.unawe.org/kids/unawe1612/


மேலும் பல அறிவியல் தகவல்களுக்கு, பரிமாணத்தின் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் :- https://facebook.com/parimaanam

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s