அழிந்துவிட்ட பெரும் தடுப்பு பவளத்திட்டு

The Great Barrier Reef எனப்படும் உலகின் மிகப்பெரிய பவளப்பாறைத் திட்டு அவுஸ்திரேலிய குயின்ஸ்லாந்து கரைக்கு அப்பால் இருக்கும் பவளக்கடல் பிரதேசத்தில் காணப்படுகிறது. அண்ணளவாக 2,900 தனிப்பட்ட பவளப்பாறைகளைக் கொண்ட இந்த திட்டுத்தொகுதி 2,300 கிமீ நீளமானது மட்டுமல்லாது 344,400 சதுர கிமீ அளவில் பரந்து காணப்படும் இயற்கையின் அதிசயங்களில் ஒன்று என்று கூறலாம்.

விண்ணில் இருந்து பார்க்கக் கூடியளவு பெரிய இந்தக் கட்டமைப்பு, உயிருள்ள அங்கிகளால் உருவாக்கப்பட்ட கட்டமைப்புகளிலேயே மிகப்பெரியது. ஆனால் இன்று முழுதும் அழிந்துவிட்ட நிலையில் காணப்படுவதற்குக் காரணம் என்ன?

காலநிலை மாற்றமும் கடல்மட்ட வெப்பநிலை அதிகரிப்பும் அதிகளவில் பெரும் தடுப்பு பவளத்திட்டை பாதித்திருக்கிறது. மே மாதத்தில் முடிவுற்ற ஆய்வில், அண்ணளவாக 35% மான பவளப் பாறைகள் முற்றாக அழிந்துவிட்டதாக ஆய்வாளர்கள் கணக்கிட்டுள்ளனர். மேலும் 93% மான பவளப் பாறைகள் பாதிப்படைந்துள்ளதாகவும் கருதுகின்றனர்.

பவள வெளுப்பு (coral bleaching) எனப்படும் செயன்முறையால் இந்தப் பவளப் பாறைகள் இறக்கின்றன. பவளப் பாறைகளில் வாழும் அல்கா நுண்ணுயிர்களே பவளப் பாறைகளின் வண்ணமயமான நிறங்களுக்கு காரணம். இந்த அல்கா உயிரினகள் பவளப்பாறைகளில் ஒரு சூழல் தொகுதியையே உருவாக்கி வைத்திருக்கும். இப்படியான அல்கா நுண்ணுயிர்கள் பவளப் பாறைகளை விட்டு நீங்கும் போது, பவளப் பாறைகளின் நிறங்கள் அற்று வெண்மையாக மாறும். மேலும் அந்தப் பவளப் பாறைகளில் இருந்த பல்வகைப் பட்ட உயிர்ச்சூழல் தொகுதியும் அழிவடையும். இந்த நிகழ்வே பவள வெளுப்பு எனப்படுகிறது.

barrier-reef
படம்: WILLIAM WEST/AFP/Getty Images

கடல் மட்ட வெப்பநிலை அதிகரிப்பதால், பெரும் தடுப்பு பவளத்திட்டில் இருக்கும் பல பிரதேசங்களில் இருக்கும் பவளப்பாறைகள் பவள வெளுப்புக்கு ஆளாகியுள்ளன. இதில் மேலும் ஒரு சோகமான விடயம், வழமையாக இப்படியாக பவள வெளுப்பு நிகழும் போது மீண்டும் குறிப்பிட்ட காலப்பகுதியில் பவளப்பாறைகள் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பும். ஆனால் பெரும் தடுப்பு பவளத்திட்டில் மீண்டும் சீராகாமல், நிலை மேலும் மேலும் மோசமடைகிறது.

இந்த வருட தொடக்கத்தில் நன்றாகவே இருந்த பெரும் தடுப்பு பவளத்திட்டு வெறும் சில மாதங்களிலேயே இப்படியான ஒரு பெரும் அழிவை சந்தித்து ஆய்வாளர்களுக்கே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது என்று கூறினாலும் அதில் தப்பில்லை.

மேலும் சிலவகை பவளப்பாறைகளை விட, குறிப்பாக brain corals எனப்படும் பவளப்பாறைகளை விட plate coral எனப்படும் பவளப்பாறைகள் பெரிதும் பாதிப்படைந்துள்ளன. மேலும், இதன் தாக்கம் பவளப்பாறைகளை சூற்றியுள்ள சூழல் தொகுதியை பாதித்துவிட்டது. முன்னர் இங்கு வாழ்ந்த மீனினங்களை விட வெகு சில மீனினங்களே தற்போது இங்கு வசிக்கின்றன.

கடந்த 18 வருடங்களில் இடம்பெறும் மூன்றாவது பெரிய பவள வெளுப்பு இந்த முறை இடம்பெற்றுள்ளது. அதிலும் இந்தமுறை இடம்பெற்ற பவள வெளுப்பே இதுவரை இடம்பெற்ற வெளுப்புகளில் மிக உக்கிரமானது. இதற்கு முக்கிய காரணம் வெப்பநிலை மாற்றம் தான். இந்த வருட ஜனவரியில் பெரும் தடுப்பு பவளத்திட்டின் கடல் நீர் வெப்பநிலை வழமையை விட 1.1 பாகை செல்சியஸ் அதிகமாக இருந்துள்ளது. அதுவே மார்ச் மாதத்தில் 1.3 பாகை செல்சியஸ் அதிகம்.

பவளப் பாறைகளின் வெளுப்பை தடுக்க என்னவெல்லாம் செய்யலாம் என்று கடல் உயிரியலாளர்கள், ஆய்வாளர்கள் விடைகளை தேடிக்கொண்டிருக்கும் அதேவேளை, பெரும்பாலான உயிரியலாளர்களின் கருத்து, இதைக் காப்பாற்றும் சக்தி எமக்கு இல்லாமல் இருக்கலாம் என்பதே!

reef1

பெரும் தடுப்பு பவளத்திட்டு ஒரு மனிதனாக இருந்தால், இப்போது இது வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் இருக்கவேண்டும் என்று உயிரியல் பேராசிரியர் Leslie Hughes கூறியுள்ளார்.

பவளப் பாறைகள் அழிவதை தடுப்பதற்கு மனிதனால் முயற்சிகள் எடுக்கப்பட்டாலும், பெரும்பாலும் பெரிய அளவில் அவை கைகொடுப்பதில்லை. கரணம் அதற்கான செலவு மற்றும் நடைமுறைப்படுத்தும் சிக்கல்கள். ஆனால் இயற்கயான நிகழ்வுகள் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தும்.

பாரிய புயல்கள், சூறாவளிகள் அதிகளவான முகில்கள் மழை என்பவற்றை பிரதேசத்திற்கு கொண்டுவருவதால் கடலின் வெப்பநிலை சற்றே குறைவடைய, பவளப் பாறைகள் மீண்டும் நல்ல நிலைக்கு திரும்பக்கூடியவாறு இருக்கும்.

அட்லாண்டிக் கடற்பரப்பில் உருவாகிய காற்றினா சூறாவளி மற்றும் அதனைத் தொடர்ந்து உருவாகிய ரீட்டா சூறாவளி அமெரிக்க புளோரிடா மாநிலத்தின் கடற்பரப்பை குளிர்சியாக்க, அங்கு இருந்த Florida Keys எனபப்டும் பவளப்ப் பாறைகளின் தொகுதி / சிறு தீவுகளின் தொகுதி பவள வெளுப்பு செயற்பாட்டில் இருந்து தப்பித்தது. ஆனால் இதுவும் எதிர்காலத்தில் எவ்வளவு தூரம் உதவும் என்றும் தெரியாது.

பெரும் தடுப்பு பவளத்திட்டின் நிலையைக் கருத்தில் கொண்ட ஐக்கிய நாடுகள் சபையின் பாரம்பரியங்களை பாதுகாக்கும் குழு, பெரும் தடுப்பு பவளத்திட்டின் நிலை குறித்து கவலை வெளியிட்டதுடன், அவுஸ்திரேலிய அரசாங்கம் அத்தனை பாதுகாக்க நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டது.

பவளப்பாறைகள் கடல்வாழ் உயிரினங்களின் சூழல் பல்வகைமை தொகுதியின் அடிப்படைக் கட்டமைப்பு. இன்று உலகில் இருக்கும் மிகப்பெரிய உயிரியல் கட்டமைப்பு ஒன்று அழிந்துகொண்டிருக்கிறது. அல்லது அழித்துக்கொண்டு இருக்கிறோம் என்றும் கூறலாம். காரணம் உலக காலநிலை மாற்றத்திற்கு மனிதனின் செயற்பாடுகளே காரணம் என 97% மான காலநிலை விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.


மேலும் பல அறிவியல் தகவல்களுக்கு, பரிமாணத்தின் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள். தொடர்ந்து இணைந்து இருங்கள்.

https://www.facebook.com/parimaanam

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s