சத்தங்கள் சந்தங்கள் அழகாக பாடுகிறாய்
கனவிலும் நினையா வண்ணம்
இடை வளைத்து ஆடுகிறாய்
கன்னங்கள் குழிவிழ சிரிக்கும்
குழந்தைபோல ஆயிரம் ஆயிரம்
உணர்ச்சிகள், மடை திறந்த வெள்ளம் போல
பாய்ந்து வரும் அருவிகள் – அதன்
கரைகளில் இருக்கும் கற்களில்
மோதுண்ட நீர் வில்லைகள்
முத்துமணி ரத்தினங்களாய் வானத்தில் தெறிக்க
அதனுள்ளே பாய்ந்த ஒளி – தன்
ஆடைகளைக் களைந்துவிட்டு
தண்ணீரில் பாய விளையும் சிறுவனைப் போல
உற்சாகமாக பல வர்ணங்களில்
சிதறித் தெறிக்க -அந்தக் காட்சியின்
இயக்கத்தை முடித்துவிட்ட கையோடு
அந்த முத்துமணி ரத்தினங்கள்
கண்ணாடிக் குமிழிகளாக நிலத்தில்
மோதுண்டு மடிகிறதே – ஆனால்
அடுத்த நீர்க்குமிழியும் வருமே
ஒளியின் தோலுரிக்க… இயற்கையின் இயக்கம்
காதலுண்ட மங்கையின் நாணத்தைப் போல
முடிவற்றுச் செல்லும்!
– சிறி சரவணா
பகுப்பு: கவிதைகள்
உனக்காக காத்திருக்கிறேன் என் அன்பே
பற்பல குளிர்காலங்களும்,
எண்ணிலடங்கா கோடைகளும்
நீண்ட நாட்களாக…
எதிர்காலத்தின் விளிம்பிலே…
நாட்களும் கடந்துவிட்டன…
நேரமும் நெருங்கிவிட்டது…
நான் புறப்படும் நேரம் இதோ வந்துவிட்டது…
இரண்டாய் பிரிந்த மனதில்
ஒன்று இங்கேயும் மற்றொண்டு
அங்கேயுமாக அலைகிறதே…
உன் நினைவிலேயே அவை இரண்டும்
சிறையுண்டு கிடக்கிறதே…
உன் கட்டளைக்கு பணிந்தே…
நான் இன்று விடைபெறுகிறேன்
விண்மீன்களின் தூசாக நான் மாறிவிடுவேன்…
அதுதான் விதியென்று
நீ சொல்லிவிட்டாய் என் அன்பே…
என்மேல் கொண்ட காதலுக்கு நன்றி…
அன்பே… முடிவில்லாக் கனவில் இருந்து
என்னை வெளிக்கொண்டு வந்துவிட்டாய்…
இதோ வருகிறேன்.. நேரம் நெருங்கிவிட்டது…
உன்னோடு நேரமில்லா வெளியில்…
இரண்டிலா ஒன்றாய் கலக்க வந்துவிட்டேன்.
– சிறி சரவணா
எழுதியது – க.காண்டீபன்
உயிருடன் திரிந்த போது, உதவாத உறவென்று
விரட்டி, நோட்டையே புரட்டி
சீ…. போ…நாயே என்றவர்கள்.
செத்துவிடவே சிவலோகம் அனுப்ப,
கலர் கலர் மாலைகளும், அலங்காரங்களும்.
கூடவே!
சொந்தங்கள் என்று சொல்லி
நோட்டிசுகளும் பறந்து வந்தன.
மிகநொந்து போன மருமகள்மார்களோ!
அயன் குழையாத பஞ்சாப்பியுடன்,
மாமியின் தலைமாட்டில்.
பெயர் தெரியாத பேரப்பிள்ளைகளோ!
பாசத்தீயை பந்தமாக பிடித்து,
புலம்பியபடி…..
அன்னியமாகி விட்ட ஆன்மாவோ!
இக் கூத்துக்களைப் பார்த்து
அத்தனையும் அசல்போலி தான் என்றது
முருங்கையிலிருந்த படி…!
தன் வெளியின் ஓடம்
எத்தனை தொன்மையினை
கடந்து வந்திருக்கிறது
கால நினைவில்
இதனையும்
இணைத்து விடு.
நம் தனித்த
விண்ணை
அத்தனை உயிர்ப்புடன்
நோக்குகிறேன்.
அன்பு
ஒரு பொருட்டல்ல
விண் நிறைக்கும் உணர்தல்
ஒவ்வொரு தனிமையிலும்
வீற்றிருக்கிறது.
விண்ணகி
மேலும் காத்திரு
அகாலம்
தன் வினையை
எப்பொழுதும்
உற்பத்தி செய்துக்கொண்டிருக்கிறது.
ஒன்றிணைக்கும் அன்பில்
மீண்டும்
வந்திணை.
வளத்தூர் தி. ராஜேஷ்
படம்: இணையம்
கால நுழைவாயில்
தன் நினைவை
அதனதன் வழியாக
உருமாற்றி வைத்திருக்கிறது.
அதில்
புதிர் நிறைந்த ஒரு நினைவை
தேர்ந்தெடுத்தேன்.
என்றோ கைவிடப்பட்ட நினைவு அது
எவ்வித தயக்கமின்றி
அனுமதித்தது அந்நினைவு
அன்றிருந்த காலம்
மீண்டும் உருப்பெறுகிறது.
ஒரு நிமிடம்
கடந்த நிலையில்
வழியெங்கும் நிகழ்கால நினைவு
தன்னைத் துரத்துகிறது .
மீண்டும் அடையாளமிட்ட
தன் நினைவை
அங்கயே விட்டு வந்தடைந்தேன்
மன்னிப்பாயாக.
வளத்தூர் தி. ராஜேஷ்
படம்: இணையம்
நல்லை நகர் நாவலர்
பதிதனை காண நினைத்த நேரம்
விதி செய்த வேலைகள் ஆயிரம்… ஆயிரம் …
அன்று நொந்ததற்கு இன்று -எனக்கு
கிடைத்து விட்டது அதிட்டம்
தீபண்ணே தந்த ரயில் டிக்கட்டுடன்
தீராத ஆசையோடு ஓடுகின்றேன்-யாழ்தேவியிலே
அளக்க முடியாதது அளவெட்டியை மட்டுமல்ல
அவர்களின் பாசத்தையும் தான்.
நாட்டுக் கோழியும் நறுக்கப்பட்ட நண்டுக்காலும்
சூப்புவதற்கு ருசியாகத்தான் இருந்தது.
“கள்” குடிக்க வேண்டுமென்ற
கொள்ளை நாள் ஆசையும் தீர்ந்தது
இனி என் கட்டையும் வேகும்.
கோயிலென்றும் குளமென்றும்
தெருவுக்குத் தெரு விடாது மணக்கிறது
இந்துவின் மண் வாசம்.
நெய்தல் நிலத்திலே நிலை கொண்ட
நயினைத் தாயின் அருள்- எங்கள்
வயிற்றுப் பசியைத் தீர்த்தது.
மட்டு நகர் மான்மியம் புகழ்
F.X.C நடராச ஐயாவைப் பெற்றெடுத்த
காரை நகர் மண்ணில் என் கால்கள்
பதிந்ததையெண்ணி அடைந்தது
மனது மட்டற்ற மகிழ்ச்சி.
ஈழந்துச் சிதம்பரம் பல அவசியங்களை
ரகசியமாய் கூறி நிற்க…
முறிந்த பனைகள் முடிந்த கதையாகாமலிருக்க
முட்டி மோதி வளர்கின்றன புதிய பனைகள்
காட்சிகளும் மனசாட்சிகளும்
தேடுகின்றன விடியலை..!?
கதிரேசபிள்ளை காண்டீபன்
படம்: இணையம்
அமைதியன் ஆர்ப்பரிப்பில் நிழல்களும் தோன்றலாம்
உருவத்தின் உவமைக்கு வரிகளும் தோன்றலாம்
பருவத்தின் காலத்தில் பவளத்தில் ஒரு பங்கு
தன் இருப்பை வெளிச்சம் போட்டுக்காட்டுதே
வானவில்கள் வண்ண வண்ண கதிர்கள்
அரைவட்டத்தின் மீதியை மறைத்துவிட்டுச் செல்லுதே
தோன்றிய ஒளியில் செவ்வனே வளர்ந்த
நிழல்களும் பூமியை விட்டு பிரபஞ்சம் நோக்கி பாயுதே
நட்சத்திரங்கள், ஒளித்திரள்கள் வண்ண வண்ண பூச்சியாய்
வானமெங்கும் பரவ, பால்ச்செம்பில் கால் பட்டு
தெறித்தோடிய பாலாறாய் தெற்கு வானில்
ஓடி வழிந்து நிழல்ப்படம் ஒன்றை வரையுதே!
சிறி சரவணா
படம்: இணையம்
காற்றோடு கதை பேச நாள் ஒன்று கொண்டேன்
சொற்களின் கோர்வையை சரி பார்த்துக்கொண்டேன்
இதயத்தின் படபடப்பில் சொல்லொன்று தவற
அதன் அர்த்தமும் படியிறங்கி காற்றோடு போயிற்றே
வானவில் ஒன்று அழகாக வரலாம்
தொலைத்த சொல்லை அது தேடி வரலாம்
காற்றின் தூதுவனாய் மழைத்துளியும் சேர
உதய சூரியனின் கீற்றொண்டு பட்டு
சொல் விழுந்த இடத்தை தடம் போட்டுக்காட்ட
விழுந்த சொல்லை நான் பற்றிக்கொண்டேன்
காற்றோடு கதை பேச நாள் ஒன்று வேண்டும்
இன்னும் ஒருநாள் காத்திருக்க வேண்டாம்
விழுந்த சொல்லை கோர்வையில் இணைத்து
இதயத்தின் படபடப்பை அமர்முடுகி வைத்து
காற்றோடு கதை பேச தயாராகிவிட்டேன்
சிறி சரவணா
படம்: இணையம்
ஒளியின் ஊடுருவலில் நிழல்கள் தெரியலாம்
இலைகளின் மேலே படர்ந்துள்ள அந்த
நிழல்களின் முகங்களை வரைந்தவன் யார்?
அழகழகான வட்டங்கள் முக்கோணங்கள் மற்றும்
சதுரங்களும் சலனங்களும் எண்ணிலடங்கா பின்பங்களை
வண்ணமயமாக தெறித்துச் செல்கிறதே
வரைந்தவன் வரைந்துவிட்டான்,
காலத்தில் அவற்றை பதித்துவிட்டான்
பார்ப்பவர் மனங்கள் தேன் கண்ட வண்டுபோல
மயங்கிக் கிறுகிறுக்கும் என அவன் நினைத்தானோ
நினைத்தது நிலைத்தது, கதிர்களின் கீற்றுக்கள்
மீண்டும் இலைகளில் முகங்களை வரைய
நாளையும் வரவேண்டுமே
சிறி சரவணா
படம்: இணையம்
தூரத்தில் பிம்பங்கள் சிறிதாகவே தெரிகிறது
தன்னை நோக்கி நகரும் புள்ளியின் மையத்தில்
அது தன்னைதானே பெரிதாக்கி கொள்கிறது
நிழலும் அதன் பாதையில் உண்டு
அதற்கு என்று நிஜமும் அதன் கைகளில் உண்டு
நிழலின் அமைப்பினிலே நம் கண்களினூடு
கட்சிகளை அது நிஜமாக்கிக்கொண்டே போகிறது
இனம்புரியாத கவலை நெஞ்சை மெதுவாக வருடுகிறது
நரம்பறுந்த இரத்தப்போக்கில் கொஞ்சம் கொஞ்சமாக நினைவிழப்பது போல
மெல்லிய கவலை மை இருளாக என் உலகத்தை நிரப்புகிறது
இதுவரை நடந்தது நன்றாக நடந்து விட்டது
இனிமேலும், நடப்பது நன்றகேவே நடக்குமா