நிலவற்ற ஒரு இரவில் நீங்கள் நல்ல இருளான வேளையில், வானை அவதானித்து இருந்தால், ஒரு மெல்லிய பிரகாசம் வானின் ஒரு பெரிய பகுதியை சூழ்ந்திருப்பதைப் பார்க்கலாம். அதில் ஒரு பகுதி பால் போன்ற வெள்ளை நிறத்தில் வீங்கியது போலவும் தெரியும். அதுதான் எமது விண்மீன் பேரடையான பால்வீதியாகும். பண்டைய கிரேக்கர்கள் இந்த அமைப்பை “galaxias kyklos” என அழைத்தனர். அப்படியென்றால், பால் போன்ற வட்டம் என்று பொருள். இதிலிருந்துதான் நாம் தற்போது விண்மீன் பேரடைகளை அழைக்கும் ஆங்கிலச் சொல்லான, “galaxy” என்கிற சொல்லும், எமது விண்மீன் பேரடையை அழைக்கும் “பால்வீதி” என்கிற சொற்பதமும் வந்தது.