ஒன்றிணைக்கும் அன்பில்

தன் வெளியின் ஓடம்
எத்தனை தொன்மையினை
கடந்து வந்திருக்கிறது
கால நினைவில்
இதனையும்
இணைத்து விடு.

நம் தனித்த
விண்ணை
அத்தனை உயிர்ப்புடன்
நோக்குகிறேன்.
அன்பு
ஒரு பொருட்டல்ல
விண் நிறைக்கும் உணர்தல்
ஒவ்வொரு தனிமையிலும்
வீற்றிருக்கிறது.

விண்ணகி
மேலும் காத்திரு
அகாலம்
தன் வினையை
எப்பொழுதும்
உற்பத்தி செய்துக்கொண்டிருக்கிறது.

ஒன்றிணைக்கும் அன்பில்
மீண்டும்
வந்திணை.

வளத்தூர் தி. ராஜேஷ்

படம்: இணையம்

காலத்தின் இறுதியொன்று

கால நுழைவாயில்
தன் நினைவை
அதனதன் வழியாக
உருமாற்றி வைத்திருக்கிறது.
அதில்
புதிர் நிறைந்த ஒரு நினைவை
தேர்ந்தெடுத்தேன்.
என்றோ கைவிடப்பட்ட நினைவு அது
எவ்வித தயக்கமின்றி
அனுமதித்தது அந்நினைவு
அன்றிருந்த காலம்
மீண்டும் உருப்பெறுகிறது.
ஒரு நிமிடம்
கடந்த நிலையில்
வழியெங்கும் நிகழ்கால நினைவு
தன்னைத் துரத்துகிறது .
மீண்டும் அடையாளமிட்ட
தன் நினைவை
அங்கயே விட்டு வந்தடைந்தேன்
மன்னிப்பாயாக.

வளத்தூர் தி. ராஜேஷ்

படம்: இணையம்

காற்றோடு கதை பேச

காற்றோடு கதை பேச நாள் ஒன்று கொண்டேன்
சொற்களின் கோர்வையை சரி பார்த்துக்கொண்டேன்
இதயத்தின் படபடப்பில் சொல்லொன்று தவற
அதன் அர்த்தமும் படியிறங்கி காற்றோடு போயிற்றே
வானவில் ஒன்று அழகாக வரலாம்
தொலைத்த சொல்லை அது தேடி வரலாம்
காற்றின் தூதுவனாய் மழைத்துளியும் சேர
உதய சூரியனின் கீற்றொண்டு பட்டு
சொல் விழுந்த இடத்தை தடம் போட்டுக்காட்ட
விழுந்த சொல்லை நான் பற்றிக்கொண்டேன்
காற்றோடு கதை பேச நாள் ஒன்று வேண்டும்
இன்னும் ஒருநாள் காத்திருக்க வேண்டாம்
விழுந்த சொல்லை கோர்வையில் இணைத்து
இதயத்தின் படபடப்பை அமர்முடுகி வைத்து
காற்றோடு கதை பேச தயாராகிவிட்டேன்

சிறி சரவணா

படம்: இணையம்