நாமறிந்த எல்லாக் கதைகளையும் போலவே ஒரு விண்மீனின் கதையும் தொடக்கத்தையும் முடிவையும் கொண்டுள்ளது.
மிக்கபெரிய விண்மீன்கள் மிக உக்கிரமாக தங்கள் வாழ்வை முடித்துக்கொள்கின்றன. இந்த முடிவின் வெடிப்பு விண்மீன் பேரடையை விடப் பிரகாசமாக விண்ணில் ஒளிர்வதுடன், விண்மீனுக்குள் இருக்கும் வஸ்துக்களை பிரபஞ்சத்தில் விசிறியடிக்கும் அளவிற்கு உக்கிரமானது. வெடிப்பின் பின்னரான தூசுகள் அடங்கிய பின்னர் எஞ்சியிருப்பது முன்னொரு காலத்தில் அசுர அளவில் இருந்த விண்மீனின் மையப்பகுதி மட்டுமே. Continue reading “மடிய மறுக்கும் ஒரு விண்மீன்”→
தொழில்நுட்ப வளர்ச்சியடைந்த ஏலியன் இனம் ஒன்று நமது சிறிய பூமியைக் கண்டறிந்து ஒரு நாள் முழுதும் எம்மை ஆய்வு செய்ய கருவிகளை அனுப்பினால் எப்படியிருக்கும் என்று கற்பனை செய்துபாருங்கள். ஒரு பெரிய ஸ்கேனரைக் கொண்டு மொத்த பூமியையும் அவர்களால் படம்பிடிக்க முடியும். ஒரே நாளில் அவர்களால் பல தகவல்களைத் திரட்டமுடியும். அதில் அதிகமான தகவல்கள் மனிதர்களைப் பற்றியும் அவர்களது நாளாந்த நடவடிக்கைகள் சார்ந்ததாகவும் இருக்கும். Continue reading “விண்மீனின் குடும்பப் புகைப்படம்”→
கருவில் இருந்து குழந்தை ஒன்று வளர ஒன்பது மாதங்கள் எடுக்கின்றது, அதேபோல ஒரு யானைக் குட்டி வளர 22 மாதங்கள் எடுக்கும்… இதைப் போல ஒரு கோள் வளர்வதற்கு எவ்வளவு காலம் எடுக்கும்? இதுவரை நாம் எவ்வளவு காலம் எடுக்கும் என்று எண்ணியிருந்தோமோ அதனைவிடக் குறைவான காலமே ஒரு கோள் வளர்வதற்கு எடுக்கிறது! Continue reading “இளம் விண்மீனைச் சுற்றி உருவாகும் குழந்தைக் கோள்கள்”→
பிரபஞ்சத்தில் நடைபெறும் சமையல் என்பது, நம் வீட்டில் சமைப்பது போலவே; சரியான சேர்மானங்களை (மா, பால், முட்டை) சரியான முறையில் சேர்த்தால் (சூடான சமையல்ப் பாத்திரம்), அருமையான ருசியான ஒன்று இறுதியில் கிடைக்கும் (அப்பம்)!
இந்தப் பிரபஞ்சமும் இப்படியாகத்தான் பிரபஞ்சப் பொருட்களை சமைக்கிறது. உயிர்கள், கோள்கள் மற்றும் நாம் பார்க்கும் அனைத்திற்குமே மூல காரணி அல்லது சேர்மானமாக இருப்பது மூலக்கூறுகளே. ஆனாலும் மூலக்கூறுகள் முதலில் உருவாகவேண்டியது அவசியம்.
நிலவற்ற ஒரு இரவில் நீங்கள் நல்ல இருளான வேளையில், வானை அவதானித்து இருந்தால், ஒரு மெல்லிய பிரகாசம் வானின் ஒரு பெரிய பகுதியை சூழ்ந்திருப்பதைப் பார்க்கலாம். அதில் ஒரு பகுதி பால் போன்ற வெள்ளை நிறத்தில் வீங்கியது போலவும் தெரியும். அதுதான் எமது விண்மீன் பேரடையான பால்வீதியாகும். பண்டைய கிரேக்கர்கள் இந்த அமைப்பை “galaxias kyklos” என அழைத்தனர். அப்படியென்றால், பால் போன்ற வட்டம் என்று பொருள். இதிலிருந்துதான் நாம் தற்போது விண்மீன் பேரடைகளை அழைக்கும் ஆங்கிலச் சொல்லான, “galaxy” என்கிற சொல்லும், எமது விண்மீன் பேரடையை அழைக்கும் “பால்வீதி” என்கிற சொற்பதமும் வந்தது.
என்ன தலைப்பே ஏடாகூடமா இருக்கே அப்படின்னு நீங்க நினைப்பது கேட்கிறது. ஆனால் புதிய ஆய்வு முடிவுகள் அப்படித்தான் சொல்கின்றன. ஆனாலும் பயப்படத்தேவையில்லை! அவ்வளவு சீக்கிரம் ஒன்றும் அழிந்துவிடாது. என்ன செய்தி என்று பார்க்கலாம்.
விண்ணியல் ஆய்வாளர்கள் அண்ணளவாக 200,000 விண்மீன்பேரடைகளை அகச்சிவப்புக் கதிர்வீச்சு, ஒளி மற்றும் புறவூதாக்கதிர்வீச்சு ஆகிய நிறமாலைகளில் ஆய்வு செய்தபோது கிடைத்த தகவல் சற்று ஆச்சரியமானது – அதாவது பிரபஞ்சம் இரண்டு பில்லியன் வருடங்களுக்கு முன்னர் வெளியிட்ட சக்தியின் அளவில் பாதியைத்தான் தற்போது வெளியிடுகிறதாம். இன்னொரு வகையில் சொல்லப்போனால், இரண்டு பில்லியன் வருடங்களுக்கு முன்னர் உருவாக்கிய சக்தியின் அளவை விட பாதியளவே தற்போது இந்த விண்மீன்பேரடைகள் உருவாக்குகிறது!
புதிய விண்மீன்பேரடைகள், பழைய அதாவது பல பில்லியன் வருடங்களுக்கு முன்னர் இருந்த விண்மீன்பேரடைகளை விட குறைந்தளவு சக்தியை உருவாக்குகின்றன. அப்படியென்றால் புதிய விண்மீன்கள் உருவாகும் விகிதத்தை விட பழைய விண்மீன்கள் அழிவடையும் விகிதம் அதிகமாக உள்ளது!
ஹபிள் தொலைநோக்கியால் எடுக்கப்பட்ட புகைப்படம் – ஒவ்வொரு புள்ளியும் ஒரு விண்மீன்பேரடை!
இந்த நிகழ்வு தொடர்ந்து நடைபெறும் பட்சத்தில், எதிர்காலத்தில், அதாவது ஆயிரக்கணக்கான பில்லியன் வருடங்களின் பின்னர் இந்தப் பிரபஞ்சத்தில் சக்தியை உருவாக்க எதுவும் (விண்மீன்கள்) இருக்கப்போவதில்லை. பெரும்குளிரில் இந்தப் பிரபஞ்சம் முடிவடையலாம் என்பது ஆய்வாளர்களின் கணிப்பு.
எப்படியோ தற்போது நாம் கவலைப்பட வேண்டியதில்லை, அப்படிக் கவலைப்படவேண்டும் என்று நீங்கள் ஆசைப்பட்டால், அடுத்த ஐந்து பில்லியன் வருடங்களில் ‘சுவாகா’ என்று பூமியை தன்னுள்ளே விழுங்க காத்திருக்கும் நம் சூரியனைப் பற்றிக் கவலைப்படலாம்!
ஹவாயில் நடைபெறும் சர்வதேச விண்ணியல் கழகத்தில் கூட்டத்திலேயே இந்த ஆய்வு முடிவு வெளியிடப்பட்டது. ஏழு விண்வெளி ஆய்வு நிலையங்கள் இந்த ஆய்வில் பங்கெடுத்துள்ளன. இதற்கு GAMA என பெயரிட்டுள்ளனர்.
அதிகளவான விண்மீன்பேரடைகளை ஆய்வு செய்து அவற்றின் சக்தி வெளியீட்டைப் பற்றிப் படிப்பதே இந்த ஆய்வின் முக்கிய நோக்கம். இந்த GAMA ஆய்வு, 21 வேறுபட்ட அலைநீளங்களில் விண்மீன்பேரடைகளை ஆய்வுசெய்கிறது.
1990 களில் இருந்து இந்தப் பிரபஞ்சத்தில் கொஞ்சம் கொஞ்சமாக சக்தி வெளியீட்டின் அளவு குறைந்துகொண்டு வருகிறது என்று ஆய்வாளர்கள் அறிவர், ஆனாலும் GAMA ஆய்வுதான் முதன் முதலில் விண்மீன்பேரடைகளின் சக்திவெளியீட்டின் அளவை அளக்கிறது.
விண்மீன்பேரடைகளின் சக்தி வெளியீட்டின் அளவு குறைந்து கொண்டு வருவது, இந்தப் பிரபஞ்சம் வேகமாக விரிவடைந்து வருவது ஆகிய இரண்டுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. கரும்சக்தி எனப்படும் இன்னும் தெளிவாக அறியப்படாத “சக்தி” இந்தப் பிரபஞ்சத்தை விரிவடையச் செய்கிறது என்பது மட்டுமே தற்போது எமக்குத் தெரியும்.
ஒரு விண்மீன் பேரடை என்பது, மிக அதிகமான விண்மீன்களின் தொகுதியாகும். இந்தப் பேரடைகள் பல மில்லியன் தொடக்கம் பில்லியன் கணக்கான விண்மீன்கள், விண்வெளித்தூசு மற்றும் வேறு பல வான்பொருட்களையும் உள்ளடக்கிய ஒரு கட்டமைப்பு ஆகும்.