நெப்டியுனைப் பற்றி 10 விடயங்கள்

  1. சூரியனைச் சுற்றிவரும் 8ஆவது கோள் நெப்டியூன் ஆகும். அண்ணளவாக சூரியனில் இருந்து 4.5 பில்லியன் கிலோமீற்றர்கள் (30 AU) தொலைவில் சூரியனைச் சுற்றுகிறது.

  2. நெப்டியூன் தன்னைத்தானே சுற்ற 16 மணிநேரங்கள் எடுக்கிறது, அதேபோல சூரியனை ஒருமுறை சுற்றிவர 165 பூமி வருடங்கள் எடுக்கிறது.

  3. யுரேனசைப் போல நெப்டியுனும் ஒரு ‘பனி’ அரக்கனாகும். இது பெரும்பாலும் நீர், அமோனியா மற்றும் மெதேன் ஆகிய மூலக்கூறுகளால் ஆக்கப்பட்டுள்ளது.

  4. நெப்டியுனின் மையப்பகுதியில் பூமியளவுள்ள பாறைக்கோளம் இருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

  5. நெப்டியுனின் வளிமண்டலம், ஐதரசன், ஹீலியம் மற்றும் மெதேன் ஆகிய வாயுக்களால் ஆக்கப்பட்டுள்ளது.

  6. நெப்டியுனுக்கு 13 உறுதிசெய்யப்பட்ட துணைக்கோள்கள் உண்டு. இவற்றுக்கு, கிரேக்க நீர்க் கடவுள்களின் பெயர்களே வைக்கப்பட்டுள்ளன.

  7. நேப்டியுனுக்கும் சனியைப் போலவே அதனைச் சுற்றி ஆறு வளையங்கள் உண்டு.
  8. யுரேனசைப் போலவே, நெப்டியுனுக்கும் அருகில் சென்ற ஒரே விண்கலம் வொயேஜர் 2 மட்டுமே.

  9. நெப்டியுனில் நாமறிந்த உயிர் வாழத் தேவையான காரணிகள் இல்லை.

  10. புளுட்டோ, சூரியனில் இருந்து நெப்டியுனைவிட மிகத் தொலைவில் சுற்றினாலும், சில வேலைகளில், அது நேப்டியுனை விட சூரியனுக்கு அருகில் செல்கிறது, இதற்கு காரணம், புளுட்டோவின் நீள்வட்டப் பாதையே.

யுரேனசைப் பற்றி 10 விடயங்கள்

  1. சூரியனைச் சுற்றிவரும் 7வது கோள் யுரேனஸ் ஆகும். இது சூரியனை 2.9 பில்லியன் கிலோமீற்றர்கள் தூரத்தில் சுற்றி வருகிறது. (19.19 AU)

  2. யுரேனசில் ஒரு நாள் என்பது 17 மணித்தியாலங்கள் ஆகும். அதேபோல சூரியனை ஒரு முறை சுற்றிவர 84 வருடங்கள் எடுக்கின்றது.

  3. இது ஒரு ‘பனி அரக்கன்’ வகைக் கோளாகும். அதாவது இந்தக் கோளானது ‘பனி’யால் ஆன மூலப்பொருட்களால் உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது நீர், மெதேன் மற்றும் அமோனியா.

  4. பாறையால் ஆனா சிறு மையப்பகுதி, யுரேனசுக்கு உண்டு.

  5. யுரேனசின் வளிமண்டலம் பெரும்பாலும் ஐதரசன், ஹீலியம் மற்றும் சிறிதளவு மெதேன் வாயுக்களால் ஆக்கப்பட்டுள்ளது.

  6. யுரேனசுக்கு 27 துணைக்கோள்கள் உண்டு. இவற்றின் பெயர்கள், வில்லியம் ஷேக்ஸ்பியர், மற்றும் அலக்ஸாண்டர் போப் எழுதிய கதைகளில் வரும் பாத்திரங்களின் பெயர்களாகும்.

  7. யுரேனசுக்கும் சிறிய, மெல்லிய வளையங்கள் உண்டு.
  8. இதுவரை யுரேனசுக்கு அருகில் சென்ற ஒரே விண்கலம் வொயேஜர் 2 மட்டுமேயாகும்.

  9. யுரேனசில், நாமறிந்து உயிர் வாழத்தேவையான காரணிகள் எதுவும் இல்லை.

  10. வெள்ளிக் கோளைப் போல, கிழக்கில் இருந்து மேற்காக சுற்றும் மற்றைய ஒரே கோள் இந்த யுரேனஸ், ஆனாலும் இது மற்றைய கோள்களைப் போல நிலைக்குத்தாக சுழலாமல், கிடையாக சுழல்கிறது.

சனியைப் பற்றி 10 விடயங்கள்

  1. சூரியனைச் சுற்றிவரும் ஆறாவது கோள் சனியாகும். சூரியனில் இருந்து அண்ணளவாக 1.4 பில்லியன் கிலோமீற்றர்கள் (9.5 AU) தூரத்தில் சூரியனைச் சுற்றுகிறது.

  2. சனி தன்னைத்தானே சுற்ற 10.7 மணித்தியாலங்கள் எடுக்கின்றது. அதேபோல சூரியனை ஒருமுறை சுற்றிவர 29 பூமி ஆண்டுகள் எடுக்கிறது.

  3. வியாழனைப்போல சனியும் ஒரு வாயு அரக்கனாகும். பாறைகளால் ஆன மேற்பரப்பு அற்ற வெறும் வாயுக்கோள்.

  4. சனியின் மேற்பரப்பு ஐதரசன் மற்றும் ஹீலியம் போன்ற வாயுக்களால் ஆக்கப்பட்டுள்ளது. சனியின் மையப்பகுதியில் வியாழனைப்போலவே பாறையால் ஆன கோளம் ஒன்று இருக்ககூடும் என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

  5. சனிக்கு உறுதிசெய்யப்பட்ட 53 துணைக்கோள்களும், உறுதிசெய்யப்படாத 9 துணைக்கோள்களும் உண்டு.

  6. சூரியத்தொகுதியிலேயே மிக அழகான, பெரிய வளையங்களைக் கொண்டுள்ள கோள் சனி மட்டுமே. இந்த வளையங்களில் பல்வேறு பிரிவுகளும், இடைவெளிகளும் இருக்கின்றன.

  7. சனியின் வளையங்கள், பனிக்கட்டித் துகள்களால் ஆக்கப்பட்டுள்ளது. இந்த வளையங்களின் சராசரித் தடிப்பு வெறும் 10 மீட்டர்கள்தான்.

  8. சனிக்கு இதுவரை 5 விண்கலங்கள் செலுத்தப்பட்டுள்ளன. 2004 இல் இருந்து, கசினி விண்கலம், சனியையும், அதன் வளையங்கள் மற்றும் துணைக்கோள்களை ஆராய்ந்துவருகிறது.

  9. நாமறிந்து சனியில் உயிர்வாழத்தேவையான காரணிகள் இல்லை. அனால் சில சனியின் துணைக்கோள்களில் திரவமாக நீர் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது அங்கு உயிர் தோன்றுவதற்கான காரணியாக இருக்கலாம்.

  10. சனியின் காந்தப்புலமானது பூமியின் காந்தப்புலத்தைப் போல 578 அதிகமானது.

வியாழனைப் பற்றி 10 விடயங்கள்

  1. சூரியனைச் சுற்றிவரும் 5ஆவது கோள் வியாழனாகும். சூரியனில் இருந்து 778 மில்லியன் கிலோமீற்றர்கள் தூரத்தில் சூரியனைச் சுற்றி வருகிறது.

  2. வியாழனில் ஒரு நாள் என்பது அண்ணளவாக வெறும் 10 மணித்தியாலங்களே. ஆனால் சூரியனைச் சுற்றிவர 12 பூமி வருடங்கள் எடுக்கிறது.

  3. வியாழன் ஒரு வாயு அரக்கனாகும். இதனால், பூமியில் இருப்பது போன்ற திடமான நிலப்பரப்பு, வியாழனில் இல்லை. ஆனால் வியாழனின் மையப்பகுதியில் பூமியளவு திண்மக்கோளம் இருப்பதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

  4. வியாழன், ஐதரசன் மற்றும் ஹீலியம் போன்ற வாயுக்களால் ஆக்கப்பட்டுள்ளது.
  5. வியாழனின் அகப்பகுதியில் அமுக்கம் அதிகம் என்பதால், ஐதரசன் வாயு திரவநிலையில் அங்கு இருக்கிறது.

  6. வியாழனுக்கு 50 உறுதி செய்யப்பட்ட துணைக்கோள்களும், 17 இன்னமும் உறுதி செய்யப்படாத துணைக்கோள்களும் உண்டு.

  7. சனியைப் போல, வியாழனுக்கும் மிக மிக மெல்லிய வளையம் உண்டு. இது 1979 இல் வொயேஜர் விண்கலம் வியாழனுக்கு அருகில் செல்லும் போது கண்டுபிடிக்கப்பட்டது.

  8. வியாழனுக்கு பல விண்கலங்கள் அனுப்பப்பட்டுள்ளன. ஜூனோ விண்கலம், 2016 இல் வியாழனைச் சென்றடையும்.

  9. வியாழனில், நாமறிந்து உயிர்வாழத் தேவையான காரணிகள் இல்லை. அனால் வியாழனின் சில துணைக்கோள்களில் உயிர் வாழத் தேவையான காரணியான நீர் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

  10. வியாழனின் மேற்பரப்பில் தெரியும் பெரிய சிவப்புப் புள்ளி ஒரு பாரிய புயலாகும். இந்தப் புயல், 3 பூமியை அதனுள் புதைக்கும் அளவிற்கு பெரியது. மற்றும், இது பலநூறு வருடங்களாக தொடர்ந்து வீசிக்கொண்டு இருக்கிறது.

பூமியைப் பற்றி 10 விடயங்கள்

  1. சூரியனில் இருந்து மூன்றாவதாக இருக்கும் கோள். கிட்டத்தட்ட 150 மில்லியன் கிலோமீற்றர் தூரத்தில் இருக்கிறது.

  2. பூமி தன்னைத்தானே சுற்ற 24 மணித்தியாலங்களும், சூரியனை ஒரு முறை சுற்றிவர 365 நாட்களும் எடுக்கிறது.

  3. புதன், வெள்ளியைப் போல பூமியும் ஒரு பாறைகளாலான கோளாகும். இதன் மேற்பரப்பில் மலைகள், பள்ளத்தாக்குகள், சமவெளிகள் என பல்வேறுபட்ட அம்சங்கள் காணப்படுகின்றன.

  4. மற்றைய எல்லாக் கோள்களைவிடவும், பூமி சற்று வித்தியாசமானது. இதன் மேற்பரப்பில் 70% நீரினால் மூடப்பட்டுள்ளது.

  5. பூமியின் வளிமண்டலம் 78% நைதரசனாலும், 21% ஒக்சீசனாலும், மற்றைய 1% ஏனைய வாயுக்களாலும் ஆக்கப்பட்டுள்ளது. இந்த வாயு விகிதாசாரம், நாம் சுவாசிக்கத் தேவையான ஒரு வளிமண்டலத்தை உருவாகியுள்ளது.

  6. பூமிக்கு ஒரு துணைக்கோள் உண்டு – சந்திரன்.

  7. பூமியைச் சுற்றி எந்த வளையங்களும் (சனிக்குஇருப்பது போல) இல்லை.
  8. பூமி உயிர்வாழத் தகுதியான கோளாகும். நாமறிந்து உயிர்வாழத் தகுதியான கோள் இது மட்டுமே.

  9. பூமியின் வளிமண்டலம், வின்கற்களில் இருந்து எம்மைப் பாதுகாக்கிறது. பெரும்பாலான வின்கற்கள் வளிமண்டலத்திலேயே எரிந்து விடுகின்றன.

  10. பூமியில் உள்ள கண்டங்கள் தொடர்ந்து நகர்ந்துகொண்டே இருக்கின்றன. இது பூமியின் மற்பரப்பை வடிவமைப்பதில் செல்வாக்குச் செலுத்துகின்றன.

சூரியனைப் பற்றி 10 விடயங்கள்

  1. சூரியன் ஒரு உடு. உடுக்கள் திண்ம மேற்பரப்பைக் கொண்டிருக்காது. இது முழுதும் வாயுக்களால் ஆனா ஒரு கோளவடிவப் பொருள். சூரியனில் 1% ஐதரசன், 7.8% ஹீலியம் காணப்படுகிறது.

  2. சூரியத்தொகுதியின் மையத்தில் இருக்கும் சூரியனில், சூரியத்தொகுதியில் இருக்கும் மொத்தத் திணிவில் 99.8% ஆன திணிவைக் கொண்டுள்ளது.

  3. சூரியன் ஒரு வீட்டின் வாசல்க் கதவின் அளவிருந்தால், பூமி ஒரு பைசா நாணய அளவிருக்கும்.

  4. சூரியனுக்கு திடமான திண்ம உடல் இல்லாததால், சூரியனின் வேறு பகுதிகள், வேறு வேகத்தில் சுழல்கின்றான். சூரியன் தன்னைத் தானே சுற்ற, மத்தியில் 25 பூமி நாட்களும், துருவங்களில் 36 பூமி நாட்களும் எடுக்கின்றது.

  5. சூரியனது “வளிமண்டலத்திலேயே”, சூரியப் புள்ளிகள் (sun spots) மற்றும் சூரிய நடுக்கம் (solar flares) என்பன ஏற்படுகின்றன. சூரியனது வெளி வளிமண்டலமானது, ப்ளுட்டோவின் சுற்றுப் பாதைக்கும் வெளியில் செல்லும் அளவிற்கு பெரியது.

  6. சூரியனைச் சுற்றி, 8 கோள்களும் (planets), குறைந்தது 5 குறுங்கோள்களும் (dwarf planets), ஆயிரக்கணக்கான சிறுகோள்களும் (asteroids), லட்சக்கணக்கான வால்வெள்ளிகளும் சுற்றி வருகின்றன.

  7. சூரியனுக்கு எந்தவித வளையங்களும் (சனிக்கு இருப்பதைப் போல) கிடையாது.
  8. சூரியனது சக்தி இல்லாவிட்டால், பூமியில் உயிர் தோன்றி இருக்கவோ, அல்லது வாழவோ முடியாது.

  9. சூரியனது மேற்பரப்பு வெப்பநிலை அண்ணளவாக 5500 பாகை செல்சியஸ்.

  10. சூரியனது மையப் பகுதியில் வெப்பநிலை 15 மில்லியன் பாகை செல்சியஸ்.

மூலம்: நாசாவின் சூரியத்தொகுதிக்கான பக்கம்