- சூரியனைச் சுற்றிவரும் 5ஆவது கோள் வியாழனாகும். சூரியனில் இருந்து 778 மில்லியன் கிலோமீற்றர்கள் தூரத்தில் சூரியனைச் சுற்றி வருகிறது.
- வியாழனில் ஒரு நாள் என்பது அண்ணளவாக வெறும் 10 மணித்தியாலங்களே. ஆனால் சூரியனைச் சுற்றிவர 12 பூமி வருடங்கள் எடுக்கிறது.
- வியாழன் ஒரு வாயு அரக்கனாகும். இதனால், பூமியில் இருப்பது போன்ற திடமான நிலப்பரப்பு, வியாழனில் இல்லை. ஆனால் வியாழனின் மையப்பகுதியில் பூமியளவு திண்மக்கோளம் இருப்பதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
- வியாழன், ஐதரசன் மற்றும் ஹீலியம் போன்ற வாயுக்களால் ஆக்கப்பட்டுள்ளது.
- வியாழனின் அகப்பகுதியில் அமுக்கம் அதிகம் என்பதால், ஐதரசன் வாயு திரவநிலையில் அங்கு இருக்கிறது.
- வியாழனுக்கு 50 உறுதி செய்யப்பட்ட துணைக்கோள்களும், 17 இன்னமும் உறுதி செய்யப்படாத துணைக்கோள்களும் உண்டு.
- சனியைப் போல, வியாழனுக்கும் மிக மிக மெல்லிய வளையம் உண்டு. இது 1979 இல் வொயேஜர் விண்கலம் வியாழனுக்கு அருகில் செல்லும் போது கண்டுபிடிக்கப்பட்டது.
- வியாழனுக்கு பல விண்கலங்கள் அனுப்பப்பட்டுள்ளன. ஜூனோ விண்கலம், 2016 இல் வியாழனைச் சென்றடையும்.
- வியாழனில், நாமறிந்து உயிர்வாழத் தேவையான காரணிகள் இல்லை. அனால் வியாழனின் சில துணைக்கோள்களில் உயிர் வாழத் தேவையான காரணியான நீர் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
- வியாழனின் மேற்பரப்பில் தெரியும் பெரிய சிவப்புப் புள்ளி ஒரு பாரிய புயலாகும். இந்தப் புயல், 3 பூமியை அதனுள் புதைக்கும் அளவிற்கு பெரியது. மற்றும், இது பலநூறு வருடங்களாக தொடர்ந்து வீசிக்கொண்டு இருக்கிறது.
குறிச்சொல்: introduction
- சூரியனைச் சுற்றிவரும் கோள்களில் செவ்வாய் நான்காவது கோளாகும். அண்ணளவாக சூரியனில் இருந்து 228 மில்லியன் கிலோமீற்றர் தூரத்தில் சூரியனைச் சுற்றுகிறது.
- பூமியைப் போலவே, செவ்வாயும் தனது அச்சில் சுழல கிட்டத்தட்ட 24 மணிநேரங்கள் எடுக்கின்றது, ஆனால் சூரியனைச் சுற்றிவர 687 பூமி நாட்கள் எடுக்கின்றது.
- செவ்வாய் பூமியின் அளவில் பாதியளவு இருக்கும். இதன் விட்டம் 6778 கிலோமீற்றர்கள் ஆகும்.
- பூமியைப் போலவே செவ்வாயும் ஒரு பாறைக்கோளாகும். செவ்வாயின் மேற்பரப்பு, எரிமலை வெடிப்பு, விண்கற்களின் மோதல்கள் மற்றும், மேலோட்டு அசைவு, மற்றும் காலநிலை என்பனமூலம் மாற்றமடைந்துள்ளது.
- செவ்வாய்க்கு பூமியைவிட மெல்லிய வளிமண்டலம் உண்டு. அது பெரும்பாலும் காபனீர் ஒக்ஸ்சைடு, நைதரசன் மற்றும் ஆர்கன் போன்ற வாயுக்களால் ஆக்கப்பட்டுள்ளது.
- செவ்வாய்க்கு இரண்டு துணைக்கோள்கள் உண்டு. ஒன்று போபோஸ், மற்றயது டேய்மொஸ்.
- செவ்வாய்க்கு, சனியைபோல அதனைச் சுற்றி வளையங்கள் இல்லை.
- இதுவரை 40 இற்கும் மேற்பட்ட விண்கலங்கள், தரைஉளவிகள் செவ்வாய்க்கு அனுப்பப்பட்டுள்ளன. செவ்வாய்க்கு முதன் முதலில் வெற்றிகரமாக அனுப்பப்பட்ட விண்கலம் மாரினர் 4 ஆகும். இது 1965 இல் செவ்வாய்க்கு அனுப்பப்பட்டது.
- இப்போது இருக்கும் செவ்வாய், உயிர் வாழத் தேவையான காரணிகளைக் கொண்டு இல்லை. இறந்தகாலத்தில் செவ்வாயில் உயரினம் உருவாகத் தேவையான காலநிலை இருந்ததாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
- செவ்வாய், சிவந்த கிரகம் என அழைக்கப்படக் காரணம், செவ்வாய் மணலில் இருக்கும் இரும்புக் கனிமங்கள் துருப்பிடிப்பததனால் ஆகும். மற்றும் செவ்வாயில் இருக்கும் பாரிய புயல்கள் இந்த துருபிடித்த தூசுகளை கோள் முழுவதும் காவிச்செல்கிறது.
எழுதியது: சிறி சரவணா
சூரியத்தொகுதி என்பது, சூரியனையும், அதனைச் சுற்றி வரும், கோள்கள், துணைக்கோள்கள், சிறுகோள்கள், குறுங்கோள்கள், வான்கற்கள், வால்வெள்ளிகள் என்பனவற்றை கொண்ட ஒரு அமைப்பாகும். எமது சூரியத்தொகுதி, பால்வீதி எனப்படும், நட்சத்திரப்பேரடையில் இருக்கும் பில்லியன் கணக்கான நட்சத்திரத்தொகுதிகளில் ஒன்றாகும்.
சூரியத்தொகுதியில் மிக முக்கிய அம்சமாக இருப்பது, மையத்தில் இருக்கும் சூரியனும், அதனைச்சுற்றிவரும் 8 கோள்களுமாகும்.
சூரியத்தொகுதியைப் பொறுத்தவரை, சூரியனே மிகமுக்கியமான அமைப்பாகும். சூரியத்தொகுதியில் இருக்கும் மொத்தத் திணிவில் 99% ஆன திணிவை சூரியனே கொண்டுள்ளது. மற்றைய கோள்கள், குறுங்கோள்கள் ஏனைய பொருட்கள் எல்லாம் எஞ்சிய 1% திணிவிலேயே அடங்கிவிடும்.
எழுதியது: சிறி சரவணா
அறிவியல் என்பது ஒரு தொடர்ச்சியான மாறுதல்களுக்கு உட்பட்ட ஒரு செயன்முறை. அதில் கேள்வி கேட்டல், முன்கருத்தை உருவாக்குதல், கண்டறிதல், முன்னைய கருத்துக்களை புதுக்கண்டுபிடிப்புக்களுக்கு ஏற்றவாறு மாற்றியமைத்தல் என்று இந்தச் செயன்முறை தொடர்ந்து சென்றுகொண்டே இருக்கும். அறிவியல் கண்டுபிடிப்புக்களே, தர்க்கரீதியாக கண்டறிந்து அதனைப் பரிசோதனை செய்து அதிலிருந்து முடிவிகளைப் பெற்றே உருவாக்கப்படுகின்றன.
இப்போது விடயத்திற்கு வருவோம். இந்தப் பிரபஞ்சம் பற்றியும் அதனது தோற்றம் பற்றியும் நமது கருத்துக்கள், ஆதிகாலத்திலிருந்தே பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாகி வந்துள்ளது. புதிய உத்திகளைப் பயன்படுத்தி நாம் சேகரிக்கும் தரவுகள், எம்மைப் புதிய பாதையில் சிந்திக்கத் தூண்டுகின்றன. இப்படியான புதிய தரவுகள், நாம் பொருட்களை எப்படி வகைப்படுத்தியுள்ளோம் என்பதை மீண்டும் ஒரு முறை சிந்திக்கத் தூண்டுகிறது. புதிய கருத்துக்கள், அல்லது ஒரு பொருளை நாம் பார்க்கும் கோணம், ஒரு கோட்பாட்டை ஆராய்வதன் மூலம் உருவாகிறது.