மெசஞ்சர் விண்கலத்தின் முடிவும், புதனைப் பற்றி நாமறிந்த தகவல்களும்

எழுதியது: சிறி சரவணா

2004 இல் பூமியில் இருந்து செலுத்தப்பட்ட மெசெஞ்சர் (MESSENGER) விண்கலம் புதனை ஆய்வு செய்ய நாசாவினால் அனுப்பப்பட்ட ரோபோ விண்கலமாகும். புதனை சுற்றிவந்து ஆய்வு செய்த முதலாவது விண்கலமும் இதுதான். 485 kg எடை கொண்ட மெசெஞ்சர், 2011 இல் புதனை சுற்றத்தொடங்கியது. புதனைப் பற்றிய பல்வேறு அதிசயிக்கத் தக்க தகவல்களை இது நமக்கு தெரிவித்தது.

இன்னும் சில நாட்களில் மெசெஞ்சர் விண்கலம் தனது பத்து வருட பயணத்தை முடிக்கப்போகிறது. ஆம், அது புதனோடு சென்று மோதப்போகிறது. இதுவும் அதனது ஆய்வுத்திட்டத்தில் ஒரு பகுதிதான். ஏப்ரல் 30 அளவில் செக்கனுக்கு 3.91 கிலோமீட்டர் வேகத்தில் அது புதனோடு மோதும். அது புதனில் வளிமண்டலத்தில் நுழையும் போது சேகரிக்கும் தகவல்களையும், அது மோதும் வரை கிடைக்கும் தகவல்களையும் பூமிக்கு அனுப்பிவிட்டே அது தனது வாழ்க்கையை முடித்துக் கொள்ளும்.

Continue reading “மெசஞ்சர் விண்கலத்தின் முடிவும், புதனைப் பற்றி நாமறிந்த தகவல்களும்”

புதனைப் பற்றி 10 விடயங்கள்

  1. சூரியத்தொகுதியிலேயே மிகச் சிறிய கோள் புதன் – பூமியின் நிலவைவிட சற்றுப் பெரியது.

  2. சூரியனுக்கு மிக அருகில் இருக்கும் கோளும் இதுவாகும் – சூரியனில் இருந்து அண்ணளவாக 58 மில்லியன் கிலோமீற்றர் தூரத்தில் இருக்கிறது.

  3. புதன், தனது அச்சில் ஒரு முறை சுற்றிவர 59 பூமி நாட்கள் எடுக்கிறது, அதேபோல சூரியனை வெறும் 88 பூமி நாட்களில் சுற்றி வந்துவிடும்.

  4. புதன், பூமியைப் போல ஒரு திண்மக்கோளாகும்.

  5. புதனுக்கு மிக மிக மெல்லிய வளிமண்டலம் உண்டு. இது ஒக்சீசன், சோடியம், ஐதரசன், ஹீலியம் மற்றும் பொட்டாசியம் ஆகிய மூலக்கூறுகளால் ஆக்கப்பட்டுள்ளது.

  6. புதனுக்கு துணைக்கோள்கள் கிடையாது. புதனுக்கு, சனியைப் போல அதனைச் சுற்றி வளையங்கள் கிடையாது.

  7. புதனை இதுவரை 2 வின்கலங்களே சென்று ஆராய்ந்துள்ளன. 1974 இல் மரினர் 10 மற்றும் 2011 இல் மசென்ஜர்.

  8. புதனில் உயிர் இருப்பதற்கான எந்தவொரு தடயமும் இல்லை.

  9. பகல்வேளையில் மேற்பரப்பு வெப்பநிலை 430 பாகை செல்சியஸ் ஆகவும், இரவில் -180 பாகை செல்சியசாகவும் குறைவடைகின்றது.

  10. புதனில் இருந்து சூரியனைப் பார்த்தால், பூமியில் தெரிவதைவிட, சூரியன் மூன்று மடங்கு பெரிதாகத் தெரியும்.

மூலம்: நாசா