கருந்துளைகள் 09 – நேரத்தை வளைக்கும் இயற்கை

இது ஒரு தொடர் பதிவு, மற்றைய பகுதிகளையும் படிக்க, கீழுள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்.

கருந்துளைகள் – அறிவியல் தொடர்

நேரம் என்றால் என்னவென்று எப்போதாவது யோசித்துப் பார்த்ததுண்டா? சாதாரண வாழ்வில் எமக்கு நேரம் என்பது தொடர்ந்து துடித்துக் கொண்டிருக்கும் ஒரு வஸ்து! என்னதான் நடந்தாலும் நேரம் என்பது அதன் போக்கில் போய்கொண்டே இருக்கும். ஒவ்வொரு செக்கன்களும் கழிந்துகொண்டே இருக்கும். சென்ற நேரத்தை திரும்பி பெற முடியாதில்லையா?

ஐன்ஸ்டீனின் பொ.சா.கோ வெளிவரும் வரை அறிவியல், நேரத்தைப் பற்றி இப்படிதான் ஒரு கருத்தைக் கொண்டிருந்தது. குறிப்பாக நியூட்டன், நேரம் என்பது வில்லில் இருந்து புறப்பட்ட அம்பைப் போல அது தொடர்ந்து மாற்றமின்றி பயணிக்கும் என்றார். அவரைப் பொறுத்தவரை, நேரம் என்பது இந்த பிரபஞ்சம் எங்கும் ஒரேமாதிரியாக துடிக்கும் ஒரு விடயம். பூமியில் ஒரு செக்கன் என்பது, செவ்வாயிலும் ஒரு செக்கன், சூரியனிலும் ஒரு செக்கன், அதேபோல பிரபஞ்சத்திலுள்ள ஏனைய இடங்களிலும் ஒரு செக்கனே. வெளியை, சார்பானது என்று கருதிய நியூட்டன் நேரத்தை அறுதியானது என்றே கருதினார்.

ஆனால் ஐன்ஸ்டின் நேரத்தை ஆற்றில் பாயும் நீருக்கு ஒப்பிட்டார். ஆற்றில் இருக்கும் நீர் எப்படி, சிலவேளைகளில் வேகமாகவும், சிலவேளைகளில் மெதுவாகவும், சிலவேளைகளில் வளைந்து நெளிந்து போகுமோ, அதேபோல தான் நேரமும், வெளியும் என்றார் ஐன்ஸ்டின்.

ஐன்ஸ்டீனின் பொதுச் சார்புக் கோட்பாடு, நேரம், இடம், திணிவு மற்றும் வடிவியலை (geometry) தொடர்புபடுத்திக் கூறும் ஒரு கோட்பாடாகும். ஐன்ஸ்டீனின் இந்த கோட்பாடு, இடம் / வெளி(space), நேரம்(time) என்பவற்றை ஒரே வஸ்துவின் தொடர்ச்சி (continuum) என்று கூறுகிறது. அதாவது இந்த பிரபஞ்சத்தில் வெளியானது, முப்பரிமாணத்தால் ஆக்கப்பட்டுள்ளது – நீளம், அகலம் மற்றும் உயரம், இதைதான் நாம் x,y,z என ஆள்கூற்றுத் தளங்களில் குறிப்பிடுவோம். இத்தோடு, நேரத்தை நான்காவது பரிமாணமாக கொண்டு வெளிநேரம்(space-time) என்ற கணிதவியல் மாதிரியை உருவாக்கி, பல்வேறு பட்ட இயற்பியல் பிரச்சினைகளுக்கு ஐன்ஸ்டின் விடையளித்தார்.

அதில் மிக முக்கியமான ஒன்று, இந்த வெளி-நேரத்தில் ஏற்படும் வளைவுகளால் (curvature) உருவாக்கப்படும் ஒரு பக்கவிளைவே ஈர்ப்புவிசை ஆகும். இதை மாற்றி சொல்லவேண்டும் என்றால், திணிவானது வெளி-நேரத்தை வளைக்கவல்லது. வெளி-நேரத்தின் தொடர்ச்சியாகவும், நேரம், வெளியின் தொடர்ச்சியாகவும் இருப்பதனால் ஒரு இடத்தில் இருந்து இன்னுமொரு இடத்திற்கு எப்படியெல்லாம் பயணிக்க முடியுமோ, அதைப் போலவே, நேரத்திலும் பயணிக்க முடியும். ஒரு உதாரணத்தை பார்ப்போம்.

A என்ற இடத்தில் இருந்து B என்னும் இடம் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது என்று எடுத்துக்கொள்வோம். நாம் மணிக்கு 1 கிலோமீட்டர் வேகத்தில் நடந்தால் (அதாவது நத்தையை விட மெதுவாக!), ஒரு மணிநேரத்தில் அல்லது 60 நிமிடங்களில் A என்னும் இடத்தில் இருந்து B என்னும் இடத்தை அடைந்து விடுவோம். இதுவே மணிக்கு 10 கிலோமீட்டர் வேகத்தில் நடந்தால், 6 நிமிடந்த்தில் நாம் A யில் இருந்து B ஐ சென்றடைந்து விடுவோம் இல்லையா? இதே போலத்தான் நேரமும்! இரண்டு நேர இடைவெளிக்கு உள்ள இடைவெளி எப்போதுமே ஒன்றாக இருக்கவேண்டிய அவசியமில்லை. குழப்புகிறேனோ? தெளிவாக சொல்ல முயற்சிக்கிறேன்.

விளக்க முன் ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். இனி நாம் பார்க்கப் போகும் கோட்பாடுகளும், இயற்கையின் விதிகளும், நமது சாதாரண போது அறிவை (common sense) அசைத்துப் பார்க்கப் கூடியவை. ஆகவே உங்களின் மூளையின் கற்பனைத்திறன் என்ற குதிரையை தட்டி சற்றே ஓட விடுங்கள். நான் சொல்லும் உதாரணங்களை ஒன்றுக்கு இரண்டு முறையாக அலசிப் பாருங்கள். அதுவும் முடியவில்லை என்றால் விட்டு விடுங்கள். டேக் இட் ஈசி.

நான் முன்னரே கூறியது போல, திணிவினால் வெளி-நேரத்தில் வளைவுகளை ஏற்படுத்த முடியும். இந்த வளைவுகளே ஈர்ப்பு விசை என்ற ஒன்று இருப்பது போன்ற மாயத் தோற்றத்தை உருவாகுகிறது. திணிவின் அளவு அதிகரிக்க அதிகரிக்க, அதைச்சுற்றியுள்ள வெளி-நேரத்தின் வளைவும் அதிகரிக்கும். எந்த அளவுக்கு வெளி-நேரம் வளைகிறதோ, அந்த அளவிற்கு வெளியும், நேரமும் வளையும். எந்தளவுக்கு வெளி-நேரம் வளைகிறதோ, அந்தளவிற்கு நேரமானது துடிக்கும் வீதமும் மாறுபடும்.

குறிப்பிட்ட புள்ளியில் திணிவு அதிகரிக்க அதிகரிக்க அது எவ்வாறு வெளிநேரத்தை வளைக்கிறது என்று இங்கே பார்க்கலாம்
குறிப்பிட்ட புள்ளியில் திணிவு அதிகரிக்க அதிகரிக்க அது எவ்வாறு வெளிநேரத்தை வளைக்கிறது என்று இங்கே பார்க்கலாம்

இப்படி ஒரு உதாரணத்தை பாருங்கள், பூமியை விட சூரியன் 333,000 மடங்கு திணிவானது. ஆக, பூமியைச்சுற்றி வெளிநேரம் வளைந்துள்ளத்தை விட, சூரியனைச் சுற்றி வெளிநேரம் மிக அதிகமாக வளைந்துள்ளது. ஆகவே ஒரே நேரத்தை காட்டும் கடிகாரங்கள் இரண்டை தயாரித்து, ஒன்றை பூமியிலும், மற்றொன்றை சூரியனிலும் (அதில் வைக்கலாம் என்று எடுத்துக் கொள்வோம்) வைத்துவிட்டு, மீண்டும் சில காலத்தின் பின்னர் இரண்டு கடிகாரங்களையும் எடுத்து ஒப்பிட்டுப் பார்த்தால், சூரியனில் நாம் வைத்த கடிகாரத்தைக் காட்டிலும் பூமியில் இருந்த கடிகாரம் வேகமாக துடித்திருப்பது தெரியும். அதாவது, சூரியனது திணிவின் காரணமாக வெளி-நேரத்தில் ஏற்ப்பட்ட வளைவு, பூமியினால் ஏற்பட்ட வளைவைக் கட்டிலும் அதிகம் என்பதால், அது நேரத்தின் வேகத்தை, பூமியோடு ஒப்பிடும் போது குறைத்துள்ளது!  இதை ஈர்ப்புக்கால நேர நீட்டிப்பு (gravitational time dilation) என்று இயற்பியலாளர்கள் அழைகின்றனர்.

இன்னும் சுருங்கக் கூறின், ஈர்ப்புவிசை அதிகமாக இருக்கும் இடத்திற்கு அண்மையில் நேரம் மெதுவாகவும், ஈர்ப்புவிசை குறைந்த இடத்தில் நேரம் வேகமாகவும் துடிக்கும்.

ஐன்ஸ்டீனின் சிறப்புச் சார்புக் கோட்பாடு (special theory of relativity) மற்றும் பொதுச் சார்புக் கோட்பாடு (general theory of relativity) இந்த வேறுபாடுகளை அழகாக விளக்குகிறது. நமது நோக்கம் இங்கு கருந்துளைகள் பற்றி ஆராய்வதே என்பதால், அதோடு சம்பந்தப் பட்டவற்றை மட்டும் பார்க்கலாம், முடிந்தவரை அதோடு தொடர்புள்ளவற்றையும் விளக்குகிறேன்.

முன்னைய பகுதியல் கூறிய இந்த “உறைந்த விண்மீன்கள்” பற்றி இப்போது பார்க்கலாம், நாம் மேலே பார்த்த கருத்துக்களை இங்கே 3 சூரியத்திணிவை விட அதிகமாக இருக்கும் விண்மீன்களுக்குப் பொருத்திப் பார்கலாம்.

ஒரு விண்மீனின் மையப்பகுதியின் திணிவு 3 சூரியத் திணிவைவிட அதிகமாக இருப்பின், இயற்கையில் இருக்ககூடிய எந்தவொரு விதியும், அந்த விண்மீன் சுருங்கிக் கருந்துளையாவதை தடுக்கமுடியாது என ஓபன்கைமர் நிறுவிக்காட்டினார். அதுமட்டுமல்லாது, ஓபன்கைமருடன் அவரது சகாக்களும் சேர்ந்து சுவர்ட்சில்ட் ஆரை அளவுள்ள அளவிற்கு அந்த விண்மீன்கள் வரும்போது, அந்தக் கோளத்தினுள் துடிக்கும் நேரமும் நின்றுவிடும் என்றும் கூறினார். இதனால் அந்த நட்சத்திரங்களுக்கு இவர்கள் “உறைந்த நட்சத்திரங்கள்” என்று பெயரும் வைத்தனர்.

இப்படி இந்த சுவர்ட்சில்ட் ஆரை வரை வந்த விண்மீன்களானது மிக மிக அதிகளவான திணிவை ஒரு குறிப்பிட்ட கோள அளவினுள் (பந்து போல என்று நினைத்துக் கொள்ளுங்கள்) கொண்டிருக்கும். இது அந்த சுவர்ட்சில்ட் ஆரை கொண்ட கோளத்தினை சுற்றியுள்ள வெளிநேரத்தை மிக மிக அதிகளவாக வளைக்கிறது. எவ்வளவு தூரம் இப்படி வெளிநேரம் வளைகிறது என்றால், நேரம் துடிப்பதே நிற்கும் அளவிற்கு! சுவர்ட்சில்ட் ஆரையின் எல்லையில் நேரம் உறைகிறது. இதுவே ஓபன்கைமர் மற்றும் அவரது சகாக்கள் இந்த விண்மீன்களை “உறைந்த விண்மீன்கள்” என்று கூற வழிவகுத்தது.

இன்னும் சற்று தெளிவாக பார்க்கலாம். சுவர்ட்சில்ட் ஆரை கொண்ட விண்மீனை நோக்கி நாம் பயணிக்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். தூரத்தில் இருந்து எம்மை இன்னுமொருவரும் அவதானிக்கிறார். எம்மிடமும் ஒரு கடிகாரம் உண்டு, அவரிடமும் ஒரு கடிகாரம் உண்டு, அவரும் நாமும் புறப்படும் போது கடிகாரங்கள் ஒரே நேரத்தை காட்டுகின்றன. ஆனால் நாம் அந்த நட்சத்திரத்தை நெருங்க நெருங்க அவருக்கு எமது கடிகாரம் வேகம் குறைந்து செல்வதுபோல தோற்றம் அளிக்கும். (ஆனால் நமக்கு கடிகாரம் வேகம் குறைவது போல தென்படாது, காரணம், நேரம் என்பது அதை அளப்பவருக்கு சார்பானது, ஆகவே எமக்கு நேரத்தின் வேகம் குறைவது தெரியாமல் இருப்பதற்கு காரணம், நேரம் துடிப்பது என்பது கடிகாரத்துக்கு மட்டுமல்ல, எமது சிந்தனையின் வேகம், வயதாவதின் வேகம், கலங்கள் புதுப்பிக்கப் படுவதின் வேகம் என எல்லாமே நேரத்தால் மற்றமடைவதால், எமக்கு நேரம் மெதுவாக துடிப்பதின் வித்தியாசம் தெரியாது.)

Black_hole_details

நாம் அப்படியே முன்னேறி, அந்த விண்மீனின் சுவர்ட்சில்ட் ஆரையை அடையும் போது, நாம் பூரணமாக உறைந்து விட்டது போலவே எம்மை அவதானித்துக் கொண்டிருபவருக்கு தெரியும். அவருக்கு நமது கடிகாரத்தின் முள் நின்றுவிட்டது போலவே தோன்றும். அவரைப் பொறுத்தவரை நாம் நேரம், காலம் என்ற ஒன்றில் இப்போது இல்லை. அவர் நம்மை இறுதியாக பார்த்தது, நாம் இந்த சுவர்ட்சில்ட் ஆரையை கடக்கும் போது தான். எம்மைப் பொறுத்தவரை, நேரம் ஓடிக்கொண்டே இருக்கும், நாம் சுவர்ட்சில்ட் ஆரையைக் கடந்து அந்த விண்மீனின் மையத்தை நோக்கி சென்றுகொண்டிருப்போம். அனால் நம்மால் இனி எப்போதுமே இந்த சுவர்ட்சில்ட் ஆரையை விட்டுவெளியே செல்ல முடியாது.

இதனால்த் தான் சுவர்ட்சில்ட் ஆரையை கொண்டுள்ள விண்மீனின் மேற்பரப்பை நிகழ்வெல்லை (event horizon) என்று அழைகின்றனர். இந்த நிகழ்வெல்லை, இடத்திற்கும், நேரத்திற்கும் ஒரு வேலிபோல செயற்படுகிறது. நிகழ்வெல்லைக்குள் அதாவது சுவர்ட்சில்ட் ஆரைக்குள் நடக்கும் எந்தவொரு நிகழ்வும் சுவர்ட்சில்ட் ஆரைக்கு வெளியே அல்லது நிகழ்வெல்லைக்கு வெளியே எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது.

ஒருவர் இந்த நிகழ்வெல்லைக்குள் விழுந்துவிட்டால், அவர் இந்த நிகழ்வெல்லையை கடக்கும் போதே, அவரை நிகழ்வெல்லைக்கு வெளியில் இருந்து பார்ப்பவருக்கு, நிகழ்வெல்லையை கடப்பவரது நேரம் துடிப்பது நின்றுவிடும். இனி அந்த நிகழ்வெல்லைக்குள் விழுந்தவரால் இந்தப் பிரபஞ்சத்தின் வெளிநேரத்தில் எந்தவொரு மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது. அவர்தான் நேரத்துக்கும் அப்பார்ப்பட்ட ஒரு இடத்திற்கு சென்றுவிட்டாரே!

இந்த நிகழ்வெல்லைக்குள்ளே தான் கருந்துளை என்னும் இயற்கையின் இனம்புரியா விந்தை ஒன்று ஒழிந்துள்ளது. காலம், நேரம், இடம், வெளி என்பவற்றை கடந்து நிற்கும் இந்த இயற்கையின் விந்தை, நம் பிரபஞ்சத்தைப் பற்றிய அறிவியல் தேடலில் ஒரு தொடக்கமே!

அடுத்ததாக கருந்துளைகளை நோக்கி பயணிப்போம்.

படங்கள்: இணையம்

19 thoughts on “கருந்துளைகள் 09 – நேரத்தை வளைக்கும் இயற்கை

 1. ‘இன்னும் சுருங்கக் கூறின், ஈர்ப்புவிசை அதிகமாக இருக்கும் இடத்திற்கு அண்மையில் நேரம் மெதுவாகவும், ஈர்ப்புவிசை குறைந்த இடத்தில் நேரம் வேகமாகவும் துடிக்கும்.’ இந்த வரியை ஹைலைட் பண்ணுங்க!!! இதை மனதில் வைத்து கொண்டு படிக்கும் போது கொஞ்சம் புரிய ஆரம்பிக்கிறது! எதனால் உறைந்த நட்சத்திரம் என்ற பெயர் வந்தது என்ற குழப்பமும் தீரும். ‘கலங்கள் புதுப்பிக்கப் படுவதின் வேகம் என எல்லாமே நேரத்தால் மற்றமடைவதால்’ இதில் உள்ள சொல் பிழையை மற்றும் திருத்தி விடுங்கள்! அருமையான விளக்கம்! தொடருங்கள் 🙂

  Liked by 1 person

  1. நன்றி அக்கா 🙂 நீங்கள் சொன்னது போலவே மாற்றிவிட்டேன். வாசித்ததற்கு நன்றி. ஒன்றுக்கு இரண்டாக மீண்டும் மீண்டும் வசித்தாலும் சில எழுத்துப் பிழைகளை கண்டுபிடிப்பது மிகச் சிரமமாக இருக்கிறது. இருந்தாலும், இனி இன்னும் அதிகமாகவும் சோதித்துப் பார்கிறேன்.
   நன்றி அக்கா

   Liked by 1 person

   1. நன்றி ஐய்யா 🙂 திணிவு – mass, இங்கு இலங்கையில் அறிவியல் பாடங்களில் அடிக்கடிப் பயன்படுத்தும் வார்த்தை, மற்றும் சிறு வயதிலேயே இதைப் பயன்படுத்துவதால், ஆங்கிலப் பதம் தேவை அல்ல என்று நினைத்துவிட்டேன். மன்னித்துக்கொள்ளுங்கள்.
    வாசித்ததற்கு, பின்னூட்டத்திற்கும் நன்றி.
    – சரவணா

    Like

 2. எனக்கு ஒரு டவுட்டு…
  இரு கடிகாரங்களை பூமியில் ஒன்று, சூரியனில் ஒன்று வைக்கும்போது, திணிவு வேறுபாடு காரணமாக நேரம் வித்தியாசப்படும் என்று கூறியிருந்தீர்கள்..
  அதாவது, t=0 ல் , மணிக்கம்பி, நிமிடக்கம்பி இரண்டும் 12 ல் இருக்கத்தக்கதாக வைக்கப்பட்ட கடிகாரங்கள் பூமி நேரப்படி 1 மணித்தியாலத்தில் எடுக்கப்பட்டு, நேரம் சரிபார்க்கப்படும் போது, பூமியில் வைக்கப்பட்ட கடிகாரத்தில் நேரம் 1மணியாக (மணிக்கம்பி 1 லும், நிமிடக்கம்பி 12 லும்) இருக்கும். அதே கால இடைவெளியில் சூரியனில் 10நிமிடங்கள் சென்று விட்டன எனக் கொண்டால், சூரியனில் வைக்கப் பட்ட கடிகாரத்தில் மணி என்னவாக இருக்கும்??

  கடிகாரங்களின் ஓட்டம் ஈர்ப்பு விசையில் தங்கியிருக்குமா? காலம் மெதுவாக ஓடினால் கடிகார முள்ளும் மெதுவாக ஓடுமா??

  Like

  1. பத்து நிமிடங்கள் சென்று விட்டது என்பதே அந்தக் கடிகாரம் பத்து நிமிடங்கள் சென்று விட்டது என்று கூறியதால் தானே எமக்குத் தெரியும்… காலம் என்பது அதனில் இருக்கும் எலோலாமே இயங்கும் வேகத்தைப் பொறுத்து. அது சார்பானது ஆகவே, காலம் வேலமாக ஓடினால், அங்கிருக்கும் மனிதர்கள் பாஸ்ட்போர்வர்ட் பண்ணியது போல இயங்க மாட்டார்கள், வேண்டும் என்றால், அதனை விட ஸ்லொவ்ஆக நேரம் துடிக்கும் இடத்தில் இருந்து பார்த்தால் அப்படித் தெரியும். அனால் அவரவர்க்கு அவர்கள் இருக்கும் இடத்தில் நேரம் சாதாரணமாகவே இயங்கும். இந்த சிக்கலான அடிப்படைதான் “சார்புக்” கோட்பாடு என ஐன்ஸ்டீன் அவரது கோட்பாட்டிற்கு பெயர் வைக்க காரணம்.

   ஆகவே உங்கள் கேள்விக்குப் பதில், ஆம் அந்தக் கடிகாரத்தில் பத்து நிமிடங்கள் சென்றிருக்கும். அங்கிருக்கும் எல்லோருக்கும் பத்து நிமிடங்கள் வயதாகியிருக்கும். அதேவேளை பூமியில் இருக்கும் கடிகாரத்தை தற்போது அங்கே கொண்டு சென்றால், அந்தக் கடிகாரத்தின் படி, சூரியனில் இருப்பவர்களுக்கு ஒரு மணிநேரம் வயது போயிருக்கும்.

   Like

 3. நான் கேட்பது அதுவல்ல… காலம் சார்பானது, சரி.. ஆனால் கடிகார முள்ளின் ஓட்டம் சார்பானதல்ல… அது ஏற்கனவே வடிவமைக்கப்பட்டது.. அதனுள் இருக்கும் மின்கலம் தீரும் வரை அது ஒரே மாதிரியாகவே இயங்கும். பூமியில் இருந்தாலும் சரி, சூரியனில் இருந்தாலும் சரி, அதனுள் இருக்கும் பற்சில்லுகள் ஒரே சுழற்சி வேகத்துடனேயே இயங்கும் ..

  “நேரம் சூரியனில் மெதுவாகவும் , பூமியில் வேகமாகவும் நகரும்… ஆனால் அங்கிருப்பவர்களால் அதனை உண்ர முடியாது, ஏனெனில் காலம் சார்பானது! இன்னும் தெளிவாக சொன்னால் ஒரே நேரத்தில் பிறந்த இரு குழந்தைகளில் ஒன்றை பூமியிலும் , மற்றையதை சூரியனிலும் வைக்கும் போது (;-) 😉 ) பூமியில் உள்ள குழந்தை பூமி நேரப்படி ஒரு வயதில் நடக்கத்தொடங்கினால், சூரியனில் உள்ள குழந்தை சூரிய நேரப்படி ஒரு மணித்தியாலத்தில் நடக்க தொடங்கும்! பூமியில் சராசரி ஆயுட்காலம் 72 வருடங்கள் எனில், சூரியனில் அது 2-3 வருடங்களாக இருக்கும்! அதாவது 2 வயதிற்குள், மனிதன் பிறந்து, வளர்ந்து, கலியாணம் முடித்து, முதுமையடைந்து, இறந்து விடுவான்!
  ஆனால் பூமியில் உள்ளோருக்கு நடக்கும் அனைத்துமே சூரியனில் உள்ளோருக்கும் நடக்கும், ஆனால் அவர்களால் அதை உணர முடியாது! பூமியில் இருந்து பார்க்கும் ஒருவர், அதிசயப்படலாம் எப்படி சூரியனில் உள்ள குழந்தை பத்து நிமிடத்தில் நடக்கிறது என்று! அதேபோல, சூரியனில் உள்ள ஒருவர் ஆச்சரியப்படலாம், எப்பிடி இந்தப் பூமிப்பயலுங்க மட்டும் 70-80 வருடங்கள் உயிர்வாழ்கிறார்கள் என்று…
  ஏனெனில் காலம் சார்பானது.
  அதில் எனக்கு எந்த சந்தேகமோ, பிரச்சனையோ இல்லை”.

  நான் கேட்பது ஒரு சாதாரண கேள்வி. ஒரு குறிப்பிட்ட வேகத்தில் இயங்குமாறு ஏற்கனவே டியூன் பண்ணப்பட்ட கடிகாரத்தின் சுழற்சி, ஈர்ப்பு விசையாலோ, அல்லது நேர மாற்றத்தாலோ மாறுமா..??
  பூமியில் தயாரிக்கப்பட்ட அந்த கடிகாரம் பூமியில் மட்டுமே சரியான நேரத்தைக் காட்டும்! சூரியனில் அது காட்டப்போவது பிழையான நேரத்தையே….

  நீங்கள் கூறியபடி சூரியனில் அந்தக் கடிகாரத்தில் பத்து நிமிடங்கள் சென்றிருக்காது! மாறாக ஒரு மணித்தியாலமே சென்றிருக்கும்! அதைப்பார்த்த சூரிய வாசிகள், அந்தக் கடிகாரம் பிழையாக ஓடுகிறது என்று அதை தூக்கி வீசியிருப்பார்கள், ஏனெனில் உண்மையாக அப்போது சூரியனில் பத்து நிமிடங்கள் தான் சென்றிருக்கும்!
  எனவே பூமியில் தயாரித்து, சூரியனில் வைக்கப்பட்ட கடிகாரம் மெதுவாக ஓடும் என்ற உங்களது அந்தக் குறிப்பை மறுபரிசீலனை செய்யுங்கள்!

  Liked by 1 person

  1. நீங்கள் விடும் மிகப்பெரிய தவறு, நேரத்தை வெளியில் அல்லது சூழலில் இருந்து பிரித்துப் பார்ப்பது தான், உங்கள் கேள்விக்கு போறே பதில் : ஆம் அந்தக் கடிகாரச் சுழற்சி வேகமாகவோ அல்லது ஸ்லொவ் ஆகவோ டான் இருக்கும். பூமியில் தயாரித்து சூரியனில் வைத்த கடிகாரம் பூமியில் ஓடுவதைப் போல சூரியனிலும் அதே வேகத்தில் இயங்க வேண்டும் என்றால், அத்தகு மேலதிக வேகம் கொடுக்கப்பட வேண்டும். இங்கிருக்கும் பிரச்சினை இரண்டு வேறுபட்ட நேரங்கள் துடிக்கும் இடங்களை நீங்கள் தொடர்பு படுத்த நினைப்பதே, அது உண்மையில் சாத்தியமான ஒன்று அன்று. பூமியில் தயாரித்த கடிகாரம், பூயில் ஒரு மைத்தியாலதிற்கு எவ்வளவு சுற்றுமோ, அதே அளவுதான் சூரியனில் ஒரு மணித்தியாலத்திற்கும் சுற்றும் என்பது தான் சார்புக்கோட்பாடு. இந்த விளக்கத்தை நீங்கள் Interstellar படத்திலும் காணலாம். மேற்கொண்டு எந்தக் குழப்பமும் வேண்டாம்.

   பூமியில் ஏற்கனவே இந்த ஆய்வை செய்து பார்த்துவிட்டோம். தண்ணீர் கோபுரத்திற்கு மேலே வைக்கப் பட்ட கடிகாரம் ஒன்று, மற்றயது பூமியில் வைக்கப்பட்ட கடிகாரம் ஒன்று, இதனைக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளேன்.

   Like

  2. உங்கள் கேள்விக்கான காரணம் புரிகிறது, விடையை மறுபரிசீலனை செய்யவேண்டிய அவசியமெல்லாம் இல்லை, நான் சொன்னதை நீங்கள் தவறுதலாக புரிந்துள்ளீர்கள். பூமியில் தயாரிக்கப் பட்ட கடிகாரம் சூரியனிலும் அங்குள்ளவர்களின் நேரத்திற்கு ஏற்பவாறே நேரத்தைக் காட்டும். நான் கூறியது, பூமியில் இருந்து சூரியனில் நடப்பவற்றை கண்காணித்து, சூரியனில் இருக்கும் கடிகாரம் பத்து நிமிடங்கள் சென்ற பின்னர் பூமியில் இருக்கும் கடிகாரத்தை நிறுத்திவைத்து, அதனை சூரியனுக்கு கொண்டுசென்று காட்டினால், அது ஒரு மணிநேரம் காட்டும், அதைத்தான் நான் கூறினேன்.

   நேரம் என்பதே சார்பு என்னும் போது தாங்கள், நேரத்தைப் பயன்படுத்தி அளக்கப்படும் “வேகத்தை” ,”ஒரு குறிப்பிட்ட வேகத்தில் இயங்குமாறு ஏற்கனவே டியூன் பண்ணப்பட்ட கடிகாரத்தின் சுழற்சி” எண்டு தாங்கள் கூறுவது பிழையான ஒன்று என்று தாங்களுக்கு விளங்கவேண்டும். அது விளங்கி விட்டால், மற்றயது அனைத்துக் தெளிவாகிவிடும்.

   வேகம் = தூரம்/நேரம்

   தூரம் சார்பானது, அது பூமிக்கோ, சூரியனுக்கோ, ஆகவே வேகமும் சார்பானது! 🙂

   Like

  3. முடிந்தவரை விளக்க முயற்சி செய்துள்ளேன், இன்னும் சந்தேகம் இருந்தால் நிச்சயம் கேளுங்கள், முடியும் வரை விளக்க முயற்சிக்கிறேன்.

   Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s